For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஜெயலலிதாவுக்காக சிறை தண்டனை: நடராஜன் ஒரு தியாகி'-முதல்வர் கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
தஞ்சாவூர்: புதிய சொகுசு கார் வாங்கிவிட்டு, அதை பழைய கார் என்று சொல்லி வரி ஏய்ப்பு செய்த நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஜெயலலிதாவுக்காக அந்த 60 லட்ச ரூபாய் காரை வாங்கிக் கொடுத்ததால் தான் இந்த தண்டனை கிடைத்துள்ளது. எனவே நடராஜன் தியாகம் செய்துள்ளார். அவருக்கே 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்றால் நமக்கு என்ன ஆகுமோ என்ற பயம் ஜெயலலிதாவுக்கு வந்துவிட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்..

தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்றிரவு திமுக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

என்னை எம்.எல்.ஏவாக ஆக்கி சட்டசபைக்கு அனுப்பி வைத்தது இந்த நகரம்தான். இங்கு என்னை பாதுகாத்த வீரர்களை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. இப்போது அவர்கள் இல்லாவிட்டாலும், எதிர்காலம் திமுக கையில் இருக்கும் என்பதை இங்கே கூடியுள்ள இளைஞர் பட்டாளத்தை பார்க்கும்போது தெரிகிறது.

நாம் நடந்து வந்த பாதை கடும் புயல், வெள்ளம், சூறாவளி ஆகியவற்றை தாண்டி வந்ததாகும். இப்போதுதான் செப்பனிடப்பட்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம். அண்ணா அறிவாலயமாக இருந்தாலும், கலைஞர் அறிவாலயமாக இருந்தாலும் அவை எல்லாம் தொண்டர்களின் எலும்பு, நரம்பு, ரத்தத்தை குழைத்து, கபால எலும்புகளை செங்கற்களாக ஆக்கி கட்டியவை.

திராவிடர்' சேர்த்தால்தான் மார்க்கெட்டில் நிற்க முடியும்:

திராவிடன் என்ற சொல் இப்போது கடன் வாங்கப்படும் சொல்லாக மாறியிருக்கிறது. ஒருகாலத்தில் இந்த வார்த்தை வேப்பங்காயை கசந்தது. புதிதாக கட்சி தொடங்குபவர்கள் திராவிடர்' என்ற சொல்லை சேர்த்தால்தான் மார்க்கெட்டில் நிற்க முடியும் என்று நினைக்கிறார்கள். தஞ்சை தரணியில் உள்ளவர்களுக்கு இது நன்றாக தெரியும். விஷமாக தெரிந்த இந்த சொல், புதிய கட்சி தொடங்குபவர்களுக்கு இப்போது அமுதமாக ஆகியிருக்கிறது.

திருவாரூரில் இருந்து கருணாநிதி குடும்பத்தோடு திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தார் என்று அம்மையார் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், எந்த ஆண்டு, என்ன தேதி என்று அவர் குறிப்பிடவில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்கிறார். எனக்கு ரயிலே ஒழுங்காக ஏறத் தெரியாது. பஸ்சில் ஏறினால்கூட எனக்கு தொடை நடுங்கும். எங்கு சென்றாலும் 2 நண்பர்களோடுதான் நான் செல்வேன். அப்போதுதான் அந்த பயணம் எனக்கு ஒப்புக்கொள்ளும். இப்போது உடல் நலிவுற்றிருப்பதால் காரில், ரயிலில் போய் வருகிறேன்.

இந்த மேடையை நான் தொட்டு கும்பிட விரும்புகிறேன்:

எனக்கு உடல் வலுவுடன் இருந்த காலத்தில் நண்பர்களோடுதான் எந்த ஊருக்கும் செல்வேன். அப்போதுதான் எனது மனம் விசாலமாக இருக்கும். மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். பணியும் வேகமாக நடக்கும். தஞ்சாவூரில் நடந்த மேடையில்தான் அண்ணா என்னை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அந்தக் கூட்டத்தில் அண்ணா பேசும்போது, திராவிட இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பகுதியை நான் எழுதிவிட்டேன். பிற்பகுதியை தம்பி கருணாநிதி எழுதுவான் என்றார். அதனால் இந்த மேடையை நான் தொட்டு கும்பிட விரும்புகிறேன்.

அண்ணா எந்த நேரத்தில் அவர் அப்படி சொன்னாரோ தெரியவில்லை, அவர் சொன்னபடி அந்தப் பணியை உங்கள் துணையோடு, ஒத்துழைப்போடு, நீங்கள் எல்லோரும் பக்கபலமாக இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன்.

ஜெயலலிதா அம்மையார் என்னைப் பற்றி பேசியது பற்றி அமைச்சர் பொன்முடி, தம்பி மு.க.ஸ்டாலின் ஆகியோர் கவலைப்பட வேண்டாம்.

பிராமணர்கள் மாநாடு:

ஒருமுறை நான் ரயில் ஏறி சென்றபோது போலீசாரால் தடுக்கப்பட்டது உண்மைதான். நான், சிதம்பரம் ஜெயராமனின் தங்கை பத்மாவதியை திருமணம் செய்து கொண்டிருந்தேன். 13-4-1944 அன்று அவர் முதலிரவுக்காக சிதம்பரத்தில் காத்திருந்தார். நான் எனது நண்பர் தென்னனை அழைத்துக்கொண்டு ரயிலில் சிதம்பரம் சென்றேன். அன்று அம்மையார் ஜெயலலிதா சொன்னது போல எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருவரும் சிதம்பரம் போய் இறங்கியதும், 5, 6 போலீசார் எங்களை வழிமறித்து நீங்கள் சிதம்பரம் ஊருக்குள் போகக்கூடாது என்று தடுத்தனர்.

காரணம் அன்றைய தினம் அங்கு பிராமணர்கள் மாநாடு நடந்தது. அங்கு போய் நாங்கள் கலவரம் செய்துவிடக் கூடாது என்பதற்காக தடுப்பதாக போலீசார் கூறினார்கள். எனவே எனக்கு 144 தடை உத்தரவு போட்டனர். அந்த மாநாடு, சாதியை வளர்க்கும் மாநாடு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோரை இழித்து, பழித்து பேசும் மாநாடு, தமிழனுக்கு அவமரியாதை செய்யும் மாநாடு என்று முரசொலியில் துண்டு அறிக்கையில் நான் எழுதியிருந்தேன்.

அதன் காரணமாகத்தான் சிதம்பரம் ஊருக்குள் போக விடமாட்டேன் என்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, நமக்கு எதுக்கு வம்பு என்று சொல்லி நண்பர் தென்னனை அழைத்துக்கொண்டு ரயில் ஏறி திருவாரூருக்கு சென்றுவிட்டேன். இதுதான் அன்று நடந்தது. இது எப்படி திருட்டு ரயில் போனது ஆகும்? நீங்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வாய் துடுக்கு உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். நான் அப்படி பேசமாட்டேன்.

குடித்துவிட்டு வருவதாகவும் ஊற்றிக் கொடுத்தாகவும்...:
ஜெயலலிதா அம்மையார் குடித்துவிட்டு வருவதாக ஒருவரை கூறினார். அதற்கு அவர், அவர்தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தார்' என்று பேசினார். நான் அப்படியெல்லாம் பேசமாட்டேன். அதுபோன்ற பள்ளியில் நான் படிக்கவில்லை. அண்ணா கற்றுக்கொடுத்த அரசியல் நாகரீக தொட்டிலில் வளர்ந்தவன் நான்.

ஜனநாயக ரீதியில் கட்சி நடத்துவது, அரசியல் பேசுவது, மக்கள் ஆதரவைப் பெற்று திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். அதைத்தான் சேமநல அல்லது மக்கள் நல அரசு என்று கூறுவார்கள். இழித்தும், பழித்தும் பேசுவது மக்களிடத்தில் எடுபடாது. அவை செல்லத்தக்க காசுகளாகிவிடும்.

அந்த அம்மையாருக்கு என்ன கோபம் என்றால், புதியதாக சொகுசு கார் வாங்கிவிட்டு, அதை பழைய கார் என்று கூறி வரி கட்டாமல் இருந்ததால் அவர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் உங்களுக்காக 60 லட்சம் ரூபாய் கார் வாங்கிக் கொடுத்ததால் இந்த தண்டனை கிடைத்துள்ளது. அவர் தியாகம் செய்துள்ளார். அவருக்கே 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்றால் நமக்கு என்ன ஆகுமோ என்ற பயம் வந்துவிட்டது.

நான் சின்ன வயதாக இருந்தபோது திருவாரூரில் ஒரு நாடகம் பார்த்தேன். ஒரு காரில் மகாராஜாவும், மகாராணியும் வந்து இறங்குவார்கள். மாளிகையின் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு அவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவார்கள். ஆரஞ்சு பழத் தோலை தெருவில் போட்டார்கள். அதை எடுத்து பிச்சைக்காரன் ஒருவன் சாப்பிட்டான். உடனே அவனை அழைத்து வரும்படி சேவகனிடம் அரசர் உத்தரவிட்டார். ஏன் ஆரஞ்சு பழத் தோலை பொறுக்கி சாப்பிட்டாய் என்று அந்த பிச்சைக்காரனிடம் கேட்டதுடன் அவனை சவுக்கால் அடிக்கவும் உத்தரவிட்டார்.

ரூ.68 கோடி ஊழல் பணத்தை ஒளித்து வைத்திருப்பவருக்கு:

அடியை வாங்கிய பிச்சைக்காரனோ சத்தமாக சிரித்தான். அதனால் ஆத்திரமடைந்த மகாராஜா ஏன் இப்படி சிரிக்கிறாய்? என்று கேட்டார். தோலை பொறுக்கி தின்ற எனக்கே இந்த தண்டனை என்றால், பழத்தை சாப்பிட்ட உங்களுக்கு என்ன அடி கிடைக்கும் என்று சொல்லி மேலும் சிரித்தான் அந்த பிச்சைக்காரன்.

ரூ.68 கோடி ஊழல் பணத்தை ஒளித்து வைத்திருப்பவருக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று நாடு சிந்திக்க தொடங்கிவிட்டது. அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை யார் எப்படி பேசினாலும் பதில் கூற விரும்பமாட்டேன். ஆனால், வாதம் என்று வந்துவிட்டால் அதற்கு விளக்கம் சொல்லியாக வேண்டும்.

நான் திருட்டு ரயில் ஏறி வந்தவன் அல்ல. எனவே, இனிமேல் இப்படிப்பட்ட மோசமான, அநாகரீகமான வார்த்தைகள் பேசுவதை அம்மையார் ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்போதுகூட அவரை நான், அம்மையார் என்றுதான் குறிப்பிடுகிறேன்.

ஆனால், அவரோ எனக்கு பெயர் வைத்தவர் போல கருணாநிதி, கருணாநிதி என்று பேசி வருகிறார். அவர் இப்படி பேசப்பேச அந்த பெயர் பழகிப்போன பெயராகிவிடும். சுப்பன், மாணிக்கம் போன்ற பலரும் யார் அந்த கருணாநிதி? ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுகிறாரே என்றுதான் பேசிக் கொள்வார்கள்.

என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா:

அது எனக்கு லாபம்தான். என்னை அடையாளம் காட்ட அவர் எடுத்து கொண்ட முயற்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதைவிடுத்து அவரைப் போல அதே முறையில் பதில் சொல்ல நான் விரும்பவில்லை. வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொல்வார். வாழட்டும்.

திமுக வளரும், அதன் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. திராவிடர் என்ற வார்த்தையை கேட்டாலே பிடிக்காதவர்களுக்கு இப்போது பிடித்துப் போயிருப்பது பெரியாருக்கும், அண்ணாவுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

1962ல் தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தலுக்கு நான் போட்டியிட்டபோது என்னை எதிர்த்து பரிசுத்த நாடார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து நான் போட்டியிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒருவரையொருவர் காரசாரமாக பேசிக்கொண்டதில்லை. வசைபாடியதும் கிடையாது. நாகரீக அரசியல் நடத்துவதை கொள்கையாக வைத்திருந்தோம்.

பிரசாரத்தின்போது, திறந்தவெளி கூட்டத்தில் நானும், அவரும் மட்டுமல்லாமல் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே மேடையில் பேசினோம். தப்பித் தவறி ஒருவார்த்தைகூட நாங்கள் தவறாகப் பேசவில்லை. இழித்து, பழித்து பேசவில்லை. மாறாக கஷ்டத்தை பகிர்ந்துகொண்டோம். அந்த தேர்தலில் மிகவும் கஷ்டப்பட்டு 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

பிராமணர்களை நாங்கள் எதிர்ப்பதில்லை:

பார்ப்பனீயத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். தனிப்பட்ட பிராமணர்களை நாங்கள் எதிர்ப்பதில்லை. ஆனால், அவர்கள் எங்களை பகைவர்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் ஊரு ஊருக்கு சமத்துவபுரம் திறந்து கொண்டிருக்கிறோம். மனிதருக்குள் வேறுபாடு இல்லை-எல்லோரும் சமம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் சமத்துவபுரங்களில் பெரியார் சிலையை நிறுவுகிறோம்.

சமத்துவபுரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தம்பி மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். பார்ப்பனீயம், பிராமணர் உருவத்தில் மட்டுமல்ல செட்டியார், முதலியார், தலித் என யார் உருவத்தில் வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். அதுதான் திமுகவின் கொள்கை. இந்த கொள்கைப்படி நாங்கள் செயல்படுவதால்தான் எங்கள் இயக்கம் இந்தியா அளவில் முழு வெற்றி வாகை சூடியுள்ளது.

இதுவரை யாரும் 5 நாட்கள் உலகத்தமிழ் மாநாடு நடத்தியதில்லை. கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பெருமை தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த புலவர் பெருமக்களுக்குத்தான் உண்டு. இந்த மாநாட்டில் கம்iனிஸ்டு, காங்கிரஸ், பா.ம.க, கட்சி சாராதவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அதிமுகவினர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அந்த மாநாட்டிற்கு தமிழர்கள் எல்லோரும் வந்திருந்தனர். அதிமுக கட்சியினர் வராததால் ஒன்றும் குடி மூழ்கிவிடவில்லை. தோல்வி ஏற்படவும் கிடையாது. அந்த மாநாட்டிற்கு அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பாராட்டு கிடைத்தது.

இந்த மாநாட்டின் சின்னமாக தஞ்சை பெரிய கோவிலை வைத்திருக்கிறீர்கள். நாகை தாலுகாவில், ராஜாதி ராஜன் விட்டுச் சென்ற 86 தகடுகள் கொண்ட செப்பேடு கிடைத்துள்ளது. மாநாடு நடைபெறும் நேரத்தில் அந்த செப்பேடுகள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டி முடித்து 1000 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதையொட்டி கங்கை கொண்ட சோழனை, பல அரசர்களை வென்ற அரசனை நினைவுகூர வேண்டும். அதனால் அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும்'' என்று உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வந்த புலவர் பெருமக்கள் கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களுக்கு நேரம் வந்துவிட்டது. எனக்கு நேரமாகிவிட்டது:

அவர்கள் கோரிக்கை குறித்த அறிவிப்பினை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். தஞ்சை பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் முடியும் இந்த நேரத்தில் சோழர் புகழ்பாட அரசு சார்பில் தஞ்சையில் பிரமாண்டமான விழா எடுக்கப்படும். இந்த விழா வெறுமனே விழாவாக மட்டுமல்லாமல் தஞ்சை நகருக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல பணிகளை செய்யும் விழாவாகவும் இருக்கும். அதற்கான திட்டத்தை தீட்டியுள்ளோம். இகழ்பவர்கள் இகழ்ந்து கொண்டே இருக்கட்டும். அவர்களுக்கு நேரம் வந்துவிட்டது. எனக்கும் நேரம் ஆகிவிட்டது என்றார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X