For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா

Google Oneindia Tamil News

Tanjore periya kovil
சென்னை: ராஜராஜசோழன் கட்டிய, பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் அடுத்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. இதையொட்டி ஆயிரமாவது ஆண்டின் நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலக கூட்ட அரங்கில் மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த கலந்தாய்வு கூட்டம் 6.30 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் செப்டம்பர் 25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகளை நகரின் பல பகுதிகளில் நடத்துவது என்றும், மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியினை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்கு பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்படும்.

இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும் நடத்துவது என்றும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகளை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்களையும், பல்வேறு சான்றோர்களையும், ஆன்றோர்களையும், அரசியல் தலைவர்களையும் அழைப்பது என்றும்; தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டு நிறைவடைவதையொட்டி வரலாற்று கண்காட்சி ஒன்றை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், கோ.சி.மணி, கே.என்.நேரு, பரிதிஇளம்வழுதி, கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, எஸ்.என்.எம்.உபயதுல்லா, மத்திய நிதித்துறை இணை மந்திரி பழனிமாணிக்கம், கனிமொழி எம்.பி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, தொல்லியல் துறை ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர், நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், உள்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் அரசு செயலாளர்கள் ராமசுந்தரம், குற்றாலிங்கம், வி.கே.சுப்புராஜ், அசோக்வர்தன் ஷெட்டி, க.முத்துசாமி, ஜோதி ஜெகராஜன், ஜி.சந்தானம், வெ.இறையன்பு, அறநிலையத்துறை ஆணையர் பி.ஆர்.சம்பத், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் ஏ.சி.மோகன்தாஸ், தஞ்சை கலெக்டர் எம்.எஸ்.சண்முகம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன், நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம், அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் எஸ்.பாபாஜி ராஜா போஸ்லே, ரா.நாகசாமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X