For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய பெட்ரோலிய நிறுவனத்தை ரூ. 45,000 கோடிக்கு வாங்கும் லண்டனின் வேதாந்தா

By Chakra
Google Oneindia Tamil News

Cairn India
லண்டன்: இந்தியருக்குச் சொந்தமான லண்டனைச் சேர்ந்த வேதாந்தா நிறுவனம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி சர்வதேச பெட்ரோலிய நிறுவனத்தின் இந்தியப் பிரிவை சுமார் ரூ. 45,000 கோடிக்கு வாங்கவுள்ளது.

அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனத்துக்கு பல நாடுகளில் தாமிரம், இரும்பு சுரங்கங்கள் உள்ளன. இப்போது கெய்ர்ன் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் வேதாந்தா பெட்ரோலியத்துறையிலும் கால் பதிக்கிறது.

சர்வதேச பெட்ரோலிய நிறுவனமான கெய்ர்ன் நிறுவனத்துக்கு ராஜஸ்தான் பாலைவனப் பகுதியில் பல பெட்ரோலியக் கிணறுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ர்ன் நிறுவனத்தை வாங்க ரூ. 32,500 கோடியை வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற வேதாந்தா முடிவு செய்துள்ளது. இதில் ரூ. 25,000 கோடியை எச்எஸ்பிசி வங்கி கடனாக வழங்கவுள்ளது.

இன்னும் தேவைப்படும் ரூ. 12,500 கோடியை தனது செஸா கோவா இரும்புத் தாது துணை நிறுவனத்திடம் உள்ள உபரி நிதியைக் கொண்டு ஈடுகட்ட முடிவு செய்துள்ளார் அகர்வால்.

ஆனால், கெய்ர்ன் நிறுவனத்தை வாங்கும் அகர்வாலி்ன் திட்டத்துக்கு மத்திய உளவுப் பிரிவுகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

அகர்வால் இந்தியர் தான் என்றாலும் அவரது வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கெய்ர்ன் எனர்ஜி இந்தியா நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட நிறுவனமாகும்.

மேலும் மத்திய அரசு நிறுவனமான ஓ.என்ஜி.சி கெய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் ராஜஸ்தான் எண்ணெய் கிணறுகளில் ரூ. 6,000 கோடியளவுக்கு முதலீடு செய்துள்ளது.

இதனால் வேதாந்தா நிறுவனம் கெய்ர்ன்ஸ் நிறுவனத்தை வாங்குவது என்பது மறைமுகமாக இந்திய எண்ணெய் நிறுவனத்தை வாங்குவது போலாகும். பாகிஸ்தான் எல்லையில், ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகளை வாங்கும் முன் இந்திய பாதுகாப்புத்துறையின் அனுமதியை வேதாந்தா பெற வேண்டும், இந்த விஷயத்தில் பாதுகாப்புத்துறையின் நிபந்தனைகளுக்கு வேதாந்தா கட்டுப்பட்டாக வேண்டும் என்கிறார்கள்.

மேலும் வேதாந்தாவின் இதே வழிமுறையைப் பின்பற்றி சீனா உள்ளிட்ட சில நாடுகளின் நிறுவனங்களும் இந்திய எண்ணெய் நிறுவனங்களை வாங்க ஆரம்பித்தால் சிக்கலாகிவிடும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் அச்சம் தெரிவித்துள்ளது. சரியாகச் சொன்னால் கெய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தை வாங்க ஓ.என்.ஜி.சிக்குத் தான் முன்னுரிமை உள்ளது என்கிறது பெட்ரோலிய அமைச்சகம்.

அதே நேரத்தில் கெய்ர்ன் நிறுவனத்தில் ஓ.என்.ஜி.சி செய்த முதலீடு அந்த நிறுவனத்துக்கு உதவவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ராயல்டி, கூடுதல் வரி என்று போட்டு ரூ. 14,000 கோடியளவுக்கு ஓ.என்.ஜி.சியை தனது கடனாளியாக்கிவிட்டது கெய்ர்ன்.

கெய்ர்ன்ஸ் நிறுவனத்தை வாங்கும் திட்டத்துடன் மத்திய அரசை வேதாந்தா அணுகும்போது பல புதிய இடைஞ்சல்களை அகர்வால் சந்திப்பார் என்று தெரிகிறது.

ஓ.என்.ஜி.சியின் கடனில் பெருமளவை கழித்துக் கொள்ள வேதாந்தா முன் வந்தால் மட்டுமே கெய்ர்ன் நிறுவனத்தை வாங்க அகர்வாலுக்கு மத்திய அரசு அனுமதி தரும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2000ம் ஆண்டில் ராஜஸ்தானில் எண்ணெய் எடுக்கும் உரிமையை கெய்ர்ன் நிறுவனம் ஷெல் நிறுவனத்திடமிருந்து வெறும் ரூ. 35 கோடிக்குத் தான் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலைவனத்தில் பல இடங்களில் தோண்டிப் பார்த்தபோது ஒரு இடத்தில் கூட எண்ணெய் கிடைக்காததால் அதை கெய்ர்னிடம் தந்துவிட்டுப் போனது ஷெல்.

ஆனால், 3 ஆண்டு கடும் முயற்சிகளுக்குப் பின் பார்மர் பகுதியி்ல் முதன்முதலாக கச்சா எண்ணெய் இருப்பதை கெய்ர்ன் கண்டுபிடித்தது. இங்கு 1 பில்லியன் பேரல்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் கச்சா எண்ணெய் படிமம் இது தான். உலகளவில் இது 100 மாபெரும் படிமமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X