For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பெய்யும் கன மழை-ஆவணி மாத கல்யாணங்களுக்குப் பாதிப்பு

Google Oneindia Tamil News

Rains
சென்னை: ஆவணி மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான கன மழையால் திருமணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. அதேபோல சாலைகளும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பெரும் அவுசகரியங்களை ஏற்படுத்தியுள்ளன.

குளு குளு ஆகஸ்ட்:

கடந்த பத்து ஆண்டுகளில் சென்னை நகரம் இந்த அளவுக்கு குளிர்ந்து போய் யாரும் பார்த்ததில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நல்ல மழை பெய்து நகரையே குளுமையாக்கி விட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு பல அவுசகரியங்களையும் கொடுத்துள்ளது.

இந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை சென்னையில் மட்டும் 156 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இன்னும் ஆகஸ்ட் மாதம் முடிய 8 நாட்கள் உள்ளன. இன்னும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே மழையின் அளவு மேலும் அதிகரிக்கும். கடந்த 2007ல்தான் சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் 166 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. அதை இந்த ஆண்டு மழை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கடந்த 1894ம் ஆண்டு சென்னை நகரில் ஆகஸ்ட் மாதத்தில் 336 மில்லிமீட்டர் மழை பெய்ததே சாதனை அளவாக உள்ளது.

இந்த மழையால் சென்னை நகரில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக சென்னை டெவலப்மென்ட் ஸட்டிஸ் நிறுவன பேராசிரியர் ஜனகராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை கிடைத்துள்ளது. பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன அல்லது நிரம்பி வருகின்றன என்றார்.

மோசமான சாலைகள்:

நேற்று முழுவதும் சென்னையில் மழை பெய்து கொண்டே இருந்தது. சூரியனையே காண முடியவில்லை. தொடர்ந்து மேக மூட்டமாகவும், சிறு தூறல், பெரு தூறல் என மழை இருந்ததால் நகரமே சகதிக் காடாக மாறிப் போயிருந்தது.

ஒரு மழைக்குக் கூட தாங்காத வகையில்தான் தற்போது சாலைகள் போடுகின்றனர். சென்னை நகரிலும், புறநகர்களிலும் பல சாலைகள் மோசமாக காணப்படுகின்றன. இதனால் சேறும் சகதியுமாக மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு சிரமங்கள் பெருகியுள்ளது.

குறிப்பாக புறநகர்ப் பகுதி மக்கள்தான் பாவப்பட்டவர்கள். ஒரு சாலையில் கூட ஒழுங்காக நடக்க முடியவில்லை. குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக மாறியுள்ள சாலைகளில் நடக்கவும் முடியாமல், வாகனங்களில் போகவும் முடியாமல் மக்கள் படும் அவதி சொல்லி மாள முடியாதது.

கல்யாணங்களுக்குப் பாதிப்பு:

தற்போது ஆவணி மாதம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கன மழை பெய்து வருவதால் பல கல்யாணங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்யாண ரிசப்ஷன்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் மாலை, இரவு நேரங்களில்தான் நடைபெறுகிறது. அந்த சமயம் பார்த்து மழை கொட்டு கொட்டென்று கொட்டுவதால் ரிசப்ஷனுக்கு போவதற்கு மக்களுக்கு சிரமமாகிறது.

பல கல்யாண ரிசப்ஷன்களை மழை காரணமாக மாற்றி வைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பட்டுச் சேலைக்கு ஆகாத ஒன்று தண்ணீர். பட்டுச் சேலையை அதிகம் நனைக்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே கல்யாணம், ரிசப்ஷனுக்குப் போகும் பெண்கள் இந்த மழையில் எப்படிப் போவது என்று தயங்குகிறார்கள்.

மழையால் மக்கள் சந்தோஷமடைந்திருந்தாலும், அது ஏற்படுத்தியுள்ள அசவுகரியங்களால் கஷ்டங்களும் கூடவே வந்து சேர்ந்துள்ளது.

10 நாள் 'சப்ளை'க்கு தண்ணீர் தயார்!

சென்னையில் பெய்து வந்த, தொடரும் மழையால் பத்து நாட்களுக்குத் தேவையான அளவுக்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் புறநகர்ப் பகுதி ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர் மழை காரணமாக, அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரி பகுதியில் 30 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 138 மில்லி மீட்டரும், செங்குன்றத்தில் 110 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 38 மி.மீ. மழையும் பெய்து இருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 276 கனஅடி தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு 806 கனஅடியும், சோழவரத்துக்கு 394 கனஅடியும், செம்பரம்பாக்கத்துக்கு 469 கனஅடி தண்ணீர் வருகிறது. வீராணம் ஏரிக்கு 150 கனஅடி தண்ணீர் வருகிறது.

கடந்த வாரம் 1085 மில்லியன் கனஅடியாக இருந்த பூண்டி ஏரியின் நீர் இருப்பு இன்று 1153 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. 174 மில்லியன் கன அடியாக இருந்த சோழவரம் நீர் இருப்பு 230 மில்லியன் கன அடி ஆகி இருக்கிறது.

புழல் ஏரியின் நீர் இருப்பு 1198 மில்லியன் கன அடியில் இருந்து 1282 ஆக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு 1547 மில்லியன் கனஅடியில் இருந்து 1702 மில்லியன் கன அடியாகி இருக்கிறது.

இதேபோல கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் தண்ணீர் 294 மில்லியன் கன அடியில் இருந்து 474 மில்லியன் கனஅ டியாக அதிகரித்திருக்கிறது. இங்கிருந்தும் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழை காரணமாக கடந்த 1 வாரத்தில் குடிநீர் ஏரிகளில் அதிகரித்துள்ள தண்ணீர், சென்னை நகரத்துக்கு 10 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய போதுமானு என்று தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X