ஜெ. சொல்வது போல விபத்துக்குள்ளான லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படவில்லை: அமைச்சர் மறுப்பு
சென்னை: திருவண்ணாமலை அருகே நேற்று நடந்த சாலை விபத்தில் விபத்துக்குள்ளான லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பது தவறு என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
வேலூரிலிருந்து நேற்று காலை கடலூர் சென்ற அரசுப்பேருந்து திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடியருகே வந்தபோது விபத்து ஏற்பட்டது.
ரேஷன் அரிசி கடத்திச்சென்ற லாரி மோதியதில் பேருந்தும் லாரியும் தீ பிடித்து எரிந்தன. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். 6 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜெயலலிதா விடுத்திருந்த அறிக்கையில், தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் நடக்கிறது. ரூ. 5000 கோடி அளவுக்கு இதில் லாபம் பார்த்து வருகிறார்கள். இதில் அமைச்சர் வேலுவுக்கும் தொடர்பு உள்ளது. ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லாரி, அரசுப் பேருந்து மீது மோதியதால்தான் 9 பேர் பலியாகியுள்ளனர். இதை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சம்பந்தப்பட்ட லாரியில் சென்றது ரேஷன் அரிசியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிக்கை தந்துள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சமும், காயத்திற்கு தகுந்தார்போல் மற்றவர்களுக்கு 50 ஆயிரம், 25 ஆயிரம் இழப்பிடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.