சேலத்தில் தனியார் பஸ்களைக் கண்டித்து சாலை மறியல்-அதிமுக எம்.எல்.ஏ கைது
சேலம்: சேலத்தில் தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ உள்ளிட்ட 7 பேர் கைதானார்கள்.
சேலத்தில் தனியார் டவுன் பஸ்களின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராடி வந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தனர்.
இருப்பினும் அரசின் முன் அனுமதியின்றி உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வை, தனியார் டவுன் பஸ்கள் குறைக்கவில்லை. இந்நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் சேலம் தேரடி வீதியில் திடீரென தனது காரை, சாலையின் குறுக்கே நிறுத்தி தானும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து தேரடி வீதிக்கு விரைந்த போலீசார், எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை பலன் அளிக்காததால், எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ காரை சாலையின் குறுக்கே நிறுத்தி போராட்டம் நடத்தி கைதானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ் கட்டணம் குறித்து உள்ளூர் அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகம் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அதேபோல தமிழக போக்குவரத்து அமைச்சரான கே.என்.நேருவும் கருத்து தெரிவிக்கவி்ல்லை. சேலத்தில் மட்டும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ள இந்த பஸ் கட்டண உயர்வால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.