பிரிட்டனுக்கு கார் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்!

சர்வதேச அளவில் அதிக கார்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. கடந்த ஆண்டில் மட்டும் 481 மில்லியன் டாலர் மதிப்புக்கு இந்திய கார்களை பிரிட்டன் இறக்குமதி செய்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் மிகக் குறைந்த அளவுக்குதான் இந்திய கார்களை இறக்குமதி செய்துள்ளது.
ஆனால் இப்போது இந்தியாவில் பன்னாட்டு கார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், ஏற்றுமதியின் அளவும் அதிகரித்துள்ளது. 2005-ல் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களை விட 8 மடங்கு அதிகமாக 2009-2010ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வெளியிட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ), ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, தென்னாப்ரிக்கா போன்ற நாடுகள் கார் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில்தான் உள்ளன என தெரிவித்துள்ளது.
ஆனால் ட்ரக் உள்ளிட்ட வர்த்தக நோக்கிலான வாகனங்கள் ஏற்றுமதியில் இந்தியா இன்னும் பின்தங்கியே உள்ளது. இந்தப் பிரிவில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் எல்லை நாடான நேபாளம்தான் ட்ராக்டர்களுக்கான அதிக தேவை உள்ள நாடு. ஆனால் இந்த நாடு தனக்கான ட்ராக்டர்களை அமெரிக்காவிலிருந்துதான் வாங்குகிறது. இத்தனைக்கும் இந்தியாவின் பஞ்சாப், உபியில்தான் அதிக அளவு ட்ராக்டர்கள் உற்பத்தியாகும் தொழிற்சாலைகள் உள்ளன.
பிரிட்டனுக்கு கார் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்தாலும், சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக வாகனங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்திருப்பது 22வது இடமே!












Click it and Unblock the Notifications