உள்ளம் 'தரிசாக' இருக்கும் அன்னைகளெல்லாம் தெரசா அல்ல-கருணாநிதி

தமிழக அரசின் சார்பில் அன்னை தெரசா நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்து தெரசா படத்தை திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
அன்னை தெரசாவைப் பற்றித் தமிழகத்தில் நாம் பேசுகிறோம் - அவருக்கு விழா கொண்டாடுகின்றோம். அவர்களுடைய அருமை, பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, அவ்வழியில் அனைவரும் நடக்க வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.
ஆனால், நாம் ஒரு நாள் மாத்திரம் இந்த விழாவைக் கொண்டாடி, அன்னை தெரசாவினுடைய அரும்பெரும் தியாகங்களைப் போற்றி, அவரது வழி நடப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டால் மாத்திரம் போதாது - எடுத்துக்கொண்ட உறுதியைக் காற்றிலே பறக்க விடாமல், தேர்தல் காலத்து உறுதியாக ஆக்காமல், என்றென்றும் அதை நெஞ்சிலே நிறுத்தி, அந்த உறுதியை நிறைவேற்றுவோம் - நடைமுறைப்படுத்துவோம் என்று இந்நாளில் உங்களோடு சேர்ந்து நான் உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.
நான் சிறுபான்மைச் சமுதாயத்தை என்றைக்குமே பாராட்டுபவன் - ஆதரிப்பவன். அந்தச் சமுதாயத்திற்காக இன்று நேற்றல்ல - நீண்ட நெடுங்காலமாக உழைத்துக் கொண்டிருப்பவன். நானும் பெரும்பான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவன் அல்ல - சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவன். மிகமிகப் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவன் - மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன்.
அப்படிப்பட்ட சிறுபான்மைச் சமுதாயத்திற்காக, அந்தச் சமுதாயத்திலே பிறந்த தாய் - உலகத்தின் அன்னை என்று போற்றப்படுகின்ற தெரசாவுடைய நூற்றாண்டு விழா என்றால் மகிழாமல் இருக்கமுடியாது. அதை நினைத்து உறுதிகளை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது. அன்னை தெரசா ஈவு இரக்கமுள்ள நெஞ்சுக்குச் சொந்தக்காரர் - அன்னை தெரசா கருணையின் வடிவம் - அன்னை தெரசா ஈகையின் உருவம் - அன்னை தெரசா ஏழைகளைக் கண்டு இரங்குகின்ற சுபாவம் படைத்தவர் - அன்னை தெரசா நோயாளிகளைப் பார்த்தால், அந்த நோய் தனக்கே வந்தது என்று எண்ணிக் கவலைப்படுபவர். அப்படிப்பட்ட அருமையான ஒரு மாதரசு அன்னை தெரசா.
அன்னை "தெரசா'' என்று ஒருவர்தான் இருக்க முடியும். வேறு சில அன்னைகளுக்கு உள்ளம் "தரிசாக'' இருக்கும். "தரிசாக'' இருப்பதெல்லாம், தெரசா அல்ல. உண்மையிலேயே நல்லுள்ளம் படைத்த, உண்மையிலேயே இனிய இதயம் படைத்த, உண்மையிலேயே இளகிய இதயம் படைத்த, உண்மையிலேயே ஈவு இரக்கம் கொண்ட இதயத்திற்குச் சொந்தக்காரர் அன்னை தெரசா.
அவருடைய புகழுக்கு அவர் பெற்ற விருதுகளே சான்று. 1962-ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அவருக்கு கிடைத்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமோன் மாக்சாய்சாய் பரிசு அவருக்கு கிடைத்தது. 1971-ல் போப் ஆண்டவர் வழங்கிய உலக அமைதிக்கான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க நாட்டின் குட் சமாரிடன்' விருது அவருக்கு கிடைத்தது. "ஜான் எப்.கென்னடி அனைத்துலகப் பரிசு'' அவருக்கு வழங்கப்பட்டது.
1972-ல் புதுடெல்லியில் ஜவகர்லால் நேரு பெயரால் "உலக ஒப்புறவுப் பரிசு'' அவருக்கு கிடைத்தது. இங்கிலாந்து நாட்டின் டெம்பிள்டன்' பரிசு அவருக்கு கிடைத்தது. 1978-ல் இங்கிலாந்து அரசு வழங்கிய ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர்' விருது அவருக்கு கிட்டியது. 1979-ல் நார்வே நாட்டின் உலக அமைதிக்கான "நோபல் பரிசு'' அவர் பெற்றார். இந்திய நாட்டின் மிக உயரிய விருதான "பாரத ரத்னா'' விருது இப்படி பல விருதுகளைப் பெற்றார்.
"பத்ம ஸ்ரீ'' விருது பெற்ற காலத்தில், எவ்வளவோ பெரிய விருதாக அது பாராட்டப்பட்டிருக்கும். ஆனால், அப்போது - பிறகு அவர் "பாரத ரத்னா'' விருது பெறப்போகிறார் என்று யாரும் கருதியிருக்க மாட்டார்கள் - அந்த விருதையும் பெற்ற மாமணிதான் அன்னை தெரசா. அன்னை தெரசாவினுடைய வாழ்க்கையே ஏழைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது. அவர்களுடைய எண்ணம், கருத்து, தொண்டு, செயல், சேவை - இவைகள் ஏழைகளுக்காக என்று சொன்னால், அதைவிடச் சரியாகச் சொல்ல வேண்டுமேயானால், அவருடைய வாழ்க்கையே ஏழைகளுக்காகத்தான் - நலிந்தோருக்காகத்தான் - நலிவுற்றவர்களுக்காகத்தான் - வேதனைப்படுகின்ற மக்களுக்காகத்தான்.
ராமலிங்க அடிகளார் - "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்றாரே, அப்படி வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்தான் அன்னை தெரசா. அத்தகைய அன்னையாருக்கு இன்றைக்கு நாம் எடுத்துள்ள இந்த விழா போதாது. இந்தியாவிற்கு மாத்திரமல்ல - உலகத்திற்கே அன்னையாக விளங்கியவர் அன்னை தெரசா. ஆனால், இந்தியாவிலே, ஒரு மாநிலத்திலே, தமிழ்நாட்டிலேதான் அவருக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டு, இன்றைக்கு இந்த சிறப்புக்குரிய விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எல்லா மாநிலங்களிலும் இந்த விழா நடைபெற்றிருக்க வேண்டும் - இந்திய அளவில் நடைபெற்றிருக்க வேண்டும். அதைத்தான் பீட்டர் அல்போன்ஸ், மத்திய அரசை விட்டுக்கொடுக்காமல், "மத்திய அரசின் சார்பில் நாங்கள் ஏற்கனவே அன்னை தெரசா உருவம் பொறித்த நாணயம்'' வெளியிட்டு விட்டோம்'' என்று சொல்லியிருக்கிறார். நாணயத்தை வெளியிடுகின்றவர்கள், "நாணயமாக மக்கள் நடந்து கொள்ள வேண்டும்'' என்பதற்காக நாணயத்தை வெளியிட்டிருக்கின்றார்கள். அந்த நாணயத்தை வெளியிட்டது மாத்திரமல்ல - நாடு முழுவதும் அன்னை தெரசாவினுடைய விழாவைக் கொண்டாடியிருக்க வேண்டும்.
இந்த அரசைப் பொறுத்தவரையில், அண்மையிலே மகளிருக்காகக் கட்டப்பட்ட ஒரு பெரிய கட்டிடத்திற்கு, "அன்னை தெரசா மகளிர் வணிக வளாகம்'' என்று நான் பெயர் சூட்டியதை நீங்களெல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள். அதைப்போலவே, இன்றைக்கு இந்த விழாவை எடுத்திருக்கின்றோம்.
அன்னை தெரசாவைப் பற்றி நான் முதலிலே சொன்ன இந்தப் பாராட்டுகள் மாத்திரமல்ல - அவரது பெயர் நிலைப்பதற்காக, என்றென்றும் தமிழ்நாட்டு மக்களுடைய நெஞ்சில் நிழலாட வேண்டுமென்பதற்காக ஏற்கனவே அன்னை தெரசாவினுடைய நூற்றாண்டு விழாவிற்கு முன்பே - அவர் இங்கே வந்து நம்மையெல்லாம் பார்த்து, நமக்கெல்லாம் ஆசி வழங்கி, வாழ்த்துச் சொல்லி விடைபெற்றுச் சென்றாரே, அதற்கு முன்பே அன்னை தெரசாவினுடைய பெயரால்; ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டத்திற்கு "அன்னை தெரசா''வினுடைய பெயர் சூட்டப்பட்டு; ஆதரவற்ற மகளிர் திருமணத்திற்காக ரூ.25 ஆயிரம் இந்த அரசின் சார்பாக நிதியாக வழங்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அப்படிப்பட்ட நினைவு திருமணங்களிலே கூட, அன்னை தெரசாவை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய அந்த எண்ணம் நமக்கு ஏன் ஏற்பட்டது? அவருடைய தொண்டும், அவருடைய சேவையும், அந்தத் தாயினுடைய முக மலர்ச்சியும், முதுமையிலும் தனது உடலைப் பற்றிக் கவலைப்படாமல், உள்ளத்திலே ஏற்பட்டிருக்கின்ற உணர்வுகளுக்கு மதிப்பளிக்க - உலகமெல்லாம் அலைந்து திரிந்து, நோயுற்றவர்களை, தொழுநோய் பிடித்தவர்களைக்கூட அரவணைத்து, அணைத்து, மகிழ்ந்து, அவர்களுடைய நோயைத் தீர்க்கின்ற வகையிலே அவர்களுக்குப் பக்கத்திலே இருந்து சேவை செய்த அம்மையார் அன்னை தெரசா.
அவரைப் பற்றி மேற்கு வங்க மாநில முதல்வராக மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டத் தளபதிகளில் ஒருவராகவும் விளங்கி இந்திய நாடு முழுமையும் புகழோடு திகழ்ந்த டாக்டர் ராய், தமது 80-வது பிறந்த நாள் செய்தியில் அன்னை தெரசாவைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:
"இந்த என் பிறந்த நாளில் - இந்த முதிய வயதில்- முதன்முதலில் யாரைப்பற்றிய நினைவு எனக்கு வந்தது தெரியுமா? நாட்டின் விடுதலைக்காக எந்தத் தலைவரோடு ஒன்றி நின்று போராடினேனோ, அந்த மகாத்மா காந்தியடிகளின் நினைவுகூட எனக்கு வரவில்லை; என் உயிருக்குயிரான உற்ற தோழர் - இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் -ஜவஹர்லால் நேரு பற்றிய எண்ணமும் என் நெஞ்சில் எழவில்லை; ஏன் எனக்கு மிகவும் நெருக்கமான என் உற்றார், உறவினர் எவரைப் பற்றிய சிந்தனையுமே எனக்கு வரவில்லை. ஆனால், எனது அலுவலகத்துக்குச் செல்லும் அந்த மாடிப்படிகளில் நான் காலடி வைத்து ஏறும்போது, ஒரே ஓர் எளிய உருவம் மட்டுமே என் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருந்தது. திக்கற்ற ஏழைகளையும், நோயாளிகளையும், குழந்தைகளையும், காப்பாற்றுவதற்காக அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக, தம் வாழ்வையே ஒப்படைத்துக் கொண்டு அல்லும்பகலும் அயராது உழைக்கிறாரே, அந்த அன்னை தெரசாவின் மெலிந்த வடிவமே, என் இதயம், மூளை எல்லாவற்றையுமே சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டது'' என்று ராய் தன்னுடைய பிறந்த நாள் செய்தியிலே அன்றைக்குக் கூறினார்கள்.
அந்த வங்கத்திலே இந்த விழாவைக் கொண்டாடவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை. வங்கமும் இந்தியாவிலே ஒரு பகுதிதான். எனவே, தமிழகத்திலே நாம் கொண்டாடினால் என்ன? வங்கம் கொண்டாடினால் என்ன? நாம் இங்கே கொண்டாடுவதும், வங்கம் கொண்டாடுவதைப் போலத்தான். ஆனால், வங்காள மாநிலத்தைக் குறை கூறுவதற்காகச் சொல்லவில்லை. ஒரு மாநில அரசு, இன்னொரு மாநில அரசைப் பற்றிச் சொல்லும்போது, நாகரிகமாக, பண்போடு, மாண்பு கெடாமல் செய்தி எதையும் சொல்ல வேண்டும். ஆனால், கொண்டாடாவிட்டாலும்கூட, அன்னை தெரசாவினுடைய கொள்கைகளைப் பின்பற்றுகின்ற மாநிலமாக இந்தியாவிலே உள்ள எல்லா மாநிலங்களும் திகழ வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
அன்னை தெரசாவினுடைய கொள்கை என்ன? ஏழையெளியவர்களை, பாட்டாளிகளை, நிர்க்கதியாக நிற்பவர்களை, மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டுமென்பது அன்னை தெரசாவினுடைய கொள்கை. அந்தக் கொள்கையின்படி, நாம் நடந்துகொள்கின்ற காரணத்தால்தான், அன்னை தெரசாவினுடைய விழாவை எடுக்கின்ற யோக்கியதை நமக்கிருப்பதாக - தகுதி நமக்கு இருப்பதாக நாமே எண்ணிக்கொள்கின்றோம்.
நாம் இங்கே மனிதர்களை மனிதர்களாக எண்ணுகின்றோம் - அதனால்தான் அன்னை தெரசாவினுடைய விழாவை எடுக்கின்ற தகுதி நமக்கு இருப்பதாகச் சொல்கிறோம். வங்கத்திலே அந்த அம்மையார் பிறந்து, அவர் அந்தப் பகுதியிலே உலவி, அங்குள்ளவர்களுக்காகப் பாடுபட்டு, பணியாற்றி, சிறந்த தேச சேவகி, சமூக சேவகி என்ற அந்தப் பெயரைப் பெற்ற அந்த வங்கத்தில் - மேற்கு வங்கத்தில் - இன்னமும் மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற கைரிக்ஷா இருக்கிறது. இங்கே அம்மையாருடைய விழாவைக் கொண்டாடுகிறோம் என்றால், கைரிக்ஷாவை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷா கொடுத்துவிட்டு, மனிதனை வைத்து மனிதன் இழுப்பதா என்று மகாத்மா கேட்ட கேள்விக்கு பதிலளித்துவிட்டு, அந்தத் தகுதியோடு நாம் அன்னை தெரசாவினுடைய விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
மற்றவர்கள் கொண்டாடாததற்கு காரணம், ஒருவேளை - நம் அளவிற்கு கூட மனிதர்களை மதிக்கின்ற சுபாவம் ஒருசில மாநிலங்களுக்கு வராமல் இருக்கலாம் - அதனால் கொண்டாடாமல் இருக்கலாம். ஆனால், எதிர்காலத்திலே இந்தப் பூபாகம் முழுதும் கொண்டாடுகின்ற - நான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தவே விரும்புகிறேன் - "மனித தெய்வமாக விளங்கக்கூடியவர் "மதர் தெரசா'' என்றார் கருணாநிதி.
விழாவில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், குன்றக்குடி பொன்னம்பல அடிகளால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications