Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயாளு அம்மாளுக்கு ரூ. 600 கோடி தந்ததை ஏன் தயாநிதி மாறன் மறுக்கவில்லை?-ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 600 கோடி ரூபாயை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் கொடுத்துவிட்டுத் தான் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை பெற்றார் என்ற செய்தியை ஏன் இதுவரை தயாநிதி மாறன் மறுக்கவில்லை என்று கேட்டுள்ளார் கேட்டுள்ளார் அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதி தன்னுடைய 21.12.2010 நாளைய அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினையை நான் பூதாகரமாக ஆக்குவதாக தெரிவித்து இருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, ராசாவுக்கு முன்பு அந்தத்துறையிலே இருந்த அமைச்சர்கள் உகந்த முறை என்று கருதி என்ன நடைமுறையைப் பின்பற்றினார்களோ, அதே முறையைத் தானே ராசாவும் கையாண்டுள்ளார்? என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விண்ணப்பங்களுக்கான கடைசி தேதியை ராசா மாற்றி அமைத்தது; தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு மணி நேரத்தில் 1,650 கோடி ரூபாய்க்கான வரைவோலையை தர வேண்டும் என்று பத்திரிகைச் செய்தி வெளியிட்டது; எஸ்-டெல் என்ற நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கு 13,000 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து வாங்க முன் வந்த போதிலும், அந்த நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரித்து, 1,650 கோடி ரூபாய்க்குத் தான் தருவேன் என்று ராசா அடம் பிடித்தது; 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து எம் பவர்டு குரூப் ஆப் மினிஸ்ட்ரீஸ்-க்கு அனுப்பலாம் என்ற சட்டத்துறை அமைச்சரின் கருத்தினை புறக்கணித்தது;

பாரதப் பிரதமரின் அறிவுரையை அவமதித்தது; தகுதி இல்லாத 85 நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது போன்றவைகள் எல்லாம், ராசாவுக்கு முந்தைய அமைச்சர்கள் கடை பிடித்த முறையா? முதலில் வருபவருக்கு முதலில் தருவது என்ற கோட்பாட்டைக் கூட பின்பற்றாமல், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தருவது என்ற கோட்பாட்டைத்தான் ராசா கடைபிடித்து இருக்கிறார் என்பது ஊடகங்களால் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால், கருணாநிதியோ தவறு ஒன்றுமே நடக்காதது போல் அறிக்கை வெளியிடுகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து நான் அறிக்கை வெளியிட்டால், டான்சி வழக்கு, சிறுதாவூர் நிலம், கோடநாடு என்று கூறுகிறார் கருணாநிதி.

2001-2006 ஆம் ஆண்டைய எனது ஆட்சிக்காலத்தில் ஏதாவது புதிய பொய் வழக்குகளை போடலாமா என்று ஆராய்ச்சி செய்ய 28 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து பகீரத முயற்சி செய்தார் கருணாநிதி. ஆனால் அது, பலன் அளிக்கவில்லை.

என் மீது ஒரு புதிய வழக்குக்கூட போட முடியவில்லை. அதற்கு எந்த விஷயமும் கிடைக்கவில்லை. 2001-2006 ஆட்சிக்காலத்தில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சியை நான் நடத்தியதால், என் மீது பொய் வழக்கு போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. கடந்த 4 ஆண்டு காலமாக 2001-2006 சம்மந்தப்பட்ட கோப்புகளை துருவித் துருவிப் பார்த்தும், என் மீது வழக்குப்போட எதுவுமே கிடைக்கவில்லை. எனவே தான் 1991-1996 ஆட்சிக்காலத்திற்கு தொடர்புள்ள பழைய பொய் வழக்குகளை திரும்பத்திரும்ப கூறி வருகிறார்.

டான்சி வழக்கைப் பொறுத்த வரையில், நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் நான் பங்குதாரராக இருந்த ஒரு நிறுவனம் டான்சி நிலத்தை வாங்கியதைத்தவிர அதில் வேறு எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அந்த நிலமும் அரசுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. எனவே, அதில் அரசுக்கு இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை உச்ச நீதிமன்றமே தெளிவு படுத்திவிட்டது.

இதே போன்று, தமிழ்நாடு அரசு வசம் இருந்த ஸ்பிக் நிறுவனப் பங்குகளை நான் அந்த நிறுவனத்திற்கே கொடுத்துவிட்டேன் என்று கூறி, 1996 ஆம் ஆண்டு ஒரு பொய் வழக்கை போட்டார் கருணாநிதி. ஆனால், அந்த பங்குகளை நான் அன்று விற்கவில்லை என்றால், இன்று தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். அந்த அளவுக்கு ஸ்பிக் நிறுவன பங்குகளின் விலை மிகவும் குறைந்துவிட்டது. என்னால் தமிழக அரசிற்கு லாபம் தான் ஏற்பட்டு இருக்கிறது.

சிறுதாவூர் நிலத்தைப் பொறுத்த வரையில், எனக்கும், அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இதை கருணாநிதியால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமே தெளிவுபடுத்திவிட்டது. கோடநாடு எஸ்டேட்டைப் பொறுத்த வரையில், எல்லாமே முறைப்படி தான் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள சாலை எஸ்டேட்டிற்கு சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றமே தெளிவாக தீர்ப்பளித்து இருக்கிறது.

பெங்களூர் நீதிமன்றத்திலே நடைபெற்று வரும் வழக்கு கருணாநிதியால் புனையப்பட்ட பொய் வழக்கு. அந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதைப்பற்றி நான் எதுவும் சொல்வது முறையல்ல. தீர்ப்பு அளிக்கப்படும் போது உண்மை வெளி வரும் என்பதை மட்டும் தற்போது சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை திசை திருப்புவதற்காக, நீதிமன்றங்கள் என்னை விடுதலை செய்த, முடிந்து போன பழைய வழக்குகளையெல்லாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் கருணாநிதி.

600 கோடி ரூபாயை கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் கொடுத்துவிட்டுத் தான் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை பெற்றார் என்பது குறித்து பேட்டி அளித்த கருணாநிதி, இதை நம்புபவர்கள் அவர்களின் பெயர்களைப் போட்டு இந்தச் செய்தியை வெளியிட்டால் அவர்களை சட்ட ரீதியாகச் சந்திப்பதாக தன்னுடைய அறிக்கையில் கூறி இருக்கிறார்.

உண்மையிலேயே பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால் இந்த உரையாடலில் இடம் பெற்ற நீரா ராடியா மீதோ, அல்லது இந்த உரையாடலை பதிவு செய்த வருமான வரித் துறை மீதோ, அல்லது இதை வெளியிட்ட ஊடகங்கள் மீதோ கருணாநிதி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். முக்கியமாக இதைச் சொன்ன நீரா ராடியா மீது மான நஷ்ட வழக்கு போட்டிருக்க வேண்டும்.

இல்லையெனில், தன் வீடுகளையும், தன் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள வீடுகளையும், நிறுவனங்களையும், நிலங்களையும் மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றின் சோதனைகளுக்கு ஆட்படுத்தி தானும், தன் குடும்பத்தினரும் நிரபராதிகள் என்று நிரூபித்து இருக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் ஏன் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி? இந்தச் செய்தியை மறுப்பதற்கு கருணாநிதி 15 நாட்கள் எடுத்துக் கொண்டதில் இருந்தும், பணம் கொடுத்ததாக கூறப்படும் தயாநிதி மாறன் இந்தச் செய்தியை இதுநாள் வரை மறுக்காததில் இருந்தும், இதில் உள்ள உண்மையை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

1991 முதல் 96 வரையிலான அதிமுக ஆட்சியின் மீது சாட்டிய குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறி மக்களை திசைதிருப்ப கருணாநிதி மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் தராது.

கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் கொள்ளைகள், கொலைக் குற்றவாளியான தன் மகனை மத்திய அமைச்சராக்கியது, பல கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்தது என கருணாநிதியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்யப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+