பில்லி, சூனியம் வைத்து என்னை கொல்ல சதி: எதியூரப்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பில்லி, சூனியம் வைத்து தன்னைக் கொல்ல எதிர்க்கட்சிகள் முயல்வதாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் சுத்தூர் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதி தேசிகேந்திர சுவாமி தலைமை பொறுப்பு ஏற்று 25 ஆண்டு நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று அங்கு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் எதியூரப்பா மைசூர் வந்தார்.

அங்கு நிருபர்களிடம் பேசிய அவர், வாஜ்பாயின் கொள்கைப்படி சிறந்த முறையில் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பாஜக அரசின் இந்த வளர்ச்சி பணிகளை எதிர்க்கட்சிகளால் சகித்து கொள்ள முடியவில்லை. என்னை பதவியில் இருந்து இறக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். நான் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்தே என்னை பதவியில் இருந்து விரட்ட சதி நடக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை லட்சியமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

எனக்கும் பாஜகவுக்கும் எதிராக மக்கள் மத்தியில் அவர்கள் செய்த பொய் பிரசாரம் எடுபடவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ், ஜனதா பரிவார ஆட்சிகள் செய்யாத சாதனைகள் எனது தலைமையிலான 30 மாத கால பாஜக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளன. 3 பட்ஜெட்டில் நான் அறிவித்த திட்டங்கள் மக்களை நல்லபடியாக சென்றடைந்துள்ளது.

இதை சகிக்க முடியாத எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக சதி செய்து தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம், பேரணி என்று அரசியல் ரீதியாக போராட்டம் நடத்தினர். அது மக்கள் மத்தியில் முனை மழுங்கி போனதால் மறைமுகமாக நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.

தற்போது ஒருபடி மேலே போய் பில்லி, சூனியம் மூலம் என்னை ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது. இதற்காக மாய, மந்திரம் செய்வோரை எதிர்க்கட்சியினர் நாடி செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. மாந்திரீகம் வைத்து என்னை கொன்று விட வேண்டும் என்ற சதி நடக்கிறது. வீட்டில் இருந்து சட்டசபைக்கு போய் வரவே பயமாக இருக்கிறது. நான் எனது வீட்டில் இருந்த விதான செளதாவுக்கும், விதான செளதாவில் இருந்து வீட்டுக்கும் சென்று திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை இல்லை. அந்த அளவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டு உள்ளது.

என்னை உயிரோடு கொல்ல முயற்சிக்கிறார்கள். என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கவர்னரும் ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார். நான் கடவுள் மீது பாரத்தை போட்டு எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். இதுபோன்ற சதிகளுக்கு நான் பயப்பட மாட்டேன். புறமுதுகு காட்டி ஓடிவிட மாட்டேன். இன்னும் இரண்டரை ஆண்டு காலம் சிறந்த முறையில் ஆட்சி செய்வேன்.

என் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கக்கூடாது என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதுபற்றி கருத்து தெரிவித்த கவர்னர், ''இது திருடன் போலீசுக்கு அறிவுரை வழங்குவதுபோல் உள்ளது'' என்று கூறியதன் மூலம் என்னையும், 6 கோடி கர்நாடக மக்களையும் அவமதித்துள்ளார். கவர்னரின் இந்த கருத்து பற்றி நான் பிரதமரியிடம் புகார் செய்வேன் என்றார்.

நில முறைகேடு புகார் தொடர்பாக எதியூரப்பா பதவி விலகவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்கா கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை, கட்சியின் தலைமை எனக்கு ஆதரவு அளித்து வருகிறது என்பதை மட்டும் எல்லோருக்கும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka chief minister B. S. Yeddyurappa alleged the Opposition was taking recourse to black magic to eliminate him. Though he didn't name any party or person, his comments left little doubt as to who he was hinting at.
 
 " There is a conspiracy to eliminate me through black magic. The same people who unsuccessfully tried to unseat me through black magic are conspiring again to end my life," he told the media in Mysore.
Please Wait while comments are loading...