For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு, ராஜினாமா நாளை வரை ஒத்திவைப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi and Pranab Mukherjee‎
டெல்லி: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் கருணாநிதியை மத்திய நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி இன்று இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். மேலும் தங்களுக்கு ஒரு நாள் அவகாசம் தருமாறும் முகர்ஜி கோரியதை திமுக ஏற்றுக் கொண்டது. இதையடுத்து திமுக அமைச்சர்களின் ராஜினாமா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றிரவு 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பிரணாப் முகர்ஜி முயன்றார். ஆனால், கருணாநிதி பேச மறுத்துவிட்டார்.

இதையடுத்து பாலுவைத் தொடர்பு கொண்ட பிரணாப் மத்திய அரசிலிருந்து விலகும் முடிவை வாபஸ் பெறுமாறு கோரிக்கை வைத்தார். இது குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய பாலு, என்னை பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார். இது தொடர்பான இறுதி முடிவை முதல்வர் கருணாநிதி தான் எடுக்க வேண்டும் என்பதை பிரணாபிடம் தெரிவித்து வி்ட்டேன். பிரணாப் என்னிடம் பேசிய விவரத்தை முதல்வரிடம் கூறிவிட்டேன். அவர் எடுக்கும் முடிவுப்படியே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று மத்திய திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய டெல்லி சென்றுவிட்ட நிலையி்ல், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதுடன் பிரணாப் முகர்ஜி காலை ஆலோசனை நடத்தினார். டெல்லியில் முகர்ஜியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அதிகாலை ஜம்முவிலிருந்து டெல்லி திரும்பிய குலாம் நபி ஆசாத் இந்த ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

45 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்டார் பிரணாப் முகர்ஜி. இந்த முறை கருணாநிதியும் பிரணாபிடம் பேசினார். அப்போது பாலுவிடம் விடுத்த அதே கோரிக்கையை, முதல்வரிடமும் நேரடியாக வைத்தார். திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் சென்னையில் மீண்டும் நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, திமுக- காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுமா என்பது குறித்து மாலையில் தெரிய வரும் என்றார்.

இந் நிலையில் திமுக அமைச்சர் தயாநிதி மாறனை பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலார் அகமது படேல் மற்றும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இன்று மாலையும் முதல்வர் கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு விஷயத்தில் சுமூக முடிவை எடுக்க ஒருநாள் அவகாசம் தருமாறு கருணாநிதியிடம் முகர்ஜி கோரிக்கை விடுத்தார். இதை கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இன்று மாலை ராஜினாமா செய்வதாக இருந்த திமுக அமைச்சர்கள், நாளை வரை பொறுத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.

முன்னதாக இன்று காலை 11 மணிக்கு பிரதமரை திமுக அமைச்சர்கள் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கத் திட்டமிட்டிருந்னர். ஆனால், பிரணாப் முகர்ஜியை களத்தில் இறக்கிவிட்ட காங்கிரஸ், மாலை வரை காத்திருக்குமாறு அவர்களிடம் கூறியது. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதம் தர அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இடையில் பிரணாப்-கருணாநிதி இடையே நடந்த தொலைபேசி பேச்சுக்களைத் தொடர்ந்து ராஜினாமா கடிதம் கொடுக்கும் திட்டத்தை நாளை வரை திமுக ஒத்திவைத்துள்ளது.

காங்கிரசுக்கு 60 சீட்டுகள் தான் தர முடியும் என்றும், அதிலும் கேட்கும் தொகுதிகள் கிடைக்காது என்றும் பிரணாபிடம் முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பு இறங்கி வந்திருப்பதால் திமுக தரப்பிலும் சில நீக்குப் போக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சில மூத்த திமுக தலைவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அவரது நிலையில் மாற்றம் ஏற்படலாம் என்று தெரிகிறது.

இன்று பிரணாப் முகர்ஜி இரண்டு முறையும் கருணாநிதியுடன் பேசியது டி.ஆர்.பாலுவின் செல்போனில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கருணாநிதியை பிரணாப் தொடர்பு கொள்ள முயன்றபோது பேச விரும்பவில்லை என்று கருணாநிதி கூறிவிட்டதால், பாலுவின் உதவியை பிரணாப் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

காங்.குக்கு 63-பாமகவிடமிருந்து 3 பறிப்பு?

டெல்லியிலிருந்து வந்துள்ள கடைசித் தகவலின்படி திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே புதிய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதன்படி காங்கிரஸ் கட்சி கோரியபடி 63 சீட்களை திமுக தரும். அதேசமயம், பாமகவுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள 3 சீட்களை அக்கட்சி காங்கிரஸுக்காக விட்டுக் கொடுக்கும் என்று அத்தகவல் கூறப்படுகிறது.

காங்கிரஸ் வராது..நம்பிக்கையில்லை..அழகிரி:

முன்னதாக திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் திரும்ப வரும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இல்லை என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் திரும்ப வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. காங்கிரஸ் பிரதிநிதிகள் மறுபடியும் பேச்சு நடத்த வருவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. நாங்களாகவே தான் வெளியேறுகிறோம், அப்புறம் என்ன பாதிப்பு வரும் என்றார்.

காங்கிரஸ் இல்லாததால் அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு கடும் போட்டியிருக்குமே என்று கேட்டதற்கு, போட்டியிருந்தால்தானே ஜெயிக்க முடியும் என்றார் அழகிரி.

English summary
After a two-day deadlock over seat sharing, DMK and Congress on Monday reopened channels of communication. The rapprochement came after Union finance minister Pranab Mukherjee spoke to DMK leader M Karunanidhi on Monday twice through phone. Pranab, who called DMK leader TR Baalu's mobile phone to talk to Karunanidhi, sought some more time to set things right. Karunanidhi agreed to put on hold the resignations of his ministers, but maintained that the Congress could not be given more than the 60 allotted seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X