மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த ஜெயலலிதா: கருணாநிதி தாக்கு

முதல்வர் கருணாநிதி நேற்று மாலை கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அப்பகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
அப்போது திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாத பல விஷயங்களை 'மினி' தேர்தல் அறிக்கை போல அறிவித்தார். அவர் பேசுகையில்,
இவ்வளவு பெரிய கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். ஏராளமான மக்கள் கோவை மாநகரத்தில் குழுமி இந்த கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கூட்டணி வெற்றி பெறுமா? எழுகின்ற கேள்விக் குறியோடு, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு குழுமியிருக்கின்றீர்கள். கூட்டணி அமைந்திருக்கிற முறையை பார்த்தாலே உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். நம்பிக்கை பிறக்கும்.
ஏனென்றால் இந்த கூட்டணியில் நம்முடைய பெஸ்ட் ராமசாமி, கோவை தங்கம் உள்பட பல்வேறு தலைவர்கள் மாத்திரமல்ல. கொங்கு சீமையிலே உள்ள மக்களோடு பழகுகின்ற அந்த மக்களின் நண்பர்களாக இருக்கிற பலரும் இந்த கூட்டணியின் வெற்றியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கொங்கு சீமையிலே இந்த கூட்டணி பெரு வெற்றியை பெற வேண்டுமென்றால் அங்கு உருவாகி கொண்டிருக்கிற கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தை நீங்கள் கூட்டணியிலே இணைத்துக் கொள்ளுங்கள். அதனால் பெரு வெற்றியை பெற முடியும் என்று என்னிடத்திலே சொல்லப்பட்டது. இப்போது அந்த கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தையும் கூட்டணியிலே இணைத்திருக்கிறோம். அதுவும் ஈஸ்வரன் இந்த கூட்டணியில் பிரதான இடத்தை பெற்றிருக்கிறார்.
என்னுடைய 87வது வயதில் உங்களையெல்லாம் சந்திக்கிற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன் என்றால் நான் உள்ளபடியே எண்ணிப் பார்க்கிறேன். 87 வயது எனக்கு ஆகி விட்டதா?. என்று நான் எண்ணிப் பார்க்கும் போது எத்தனையோ மகிழ்ச்சியான நினைவுகள் எழுவது உண்டு. சோகமான, துக்கமான நிகழ்வுகளும் எனது உள்ளத்தை தாக்குவது உண்டு.
திராவிட முன்னேற்ற கழகத்தை சென்னை ராயபுரத்தில் அறிஞர் அண்ணா தொடங்கிய போது அருகில் இருந்த இந்த மாவட்டத்தை சேர்ந்த பலர் இப்போது இல்லாத நிலையிலும் நான் கோவைக்கு வந்து கோவை மண்ணில் உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை பெற்றிருக்கின்றேன். ஆனால் அவர்கள் எல்லாம் இல்லையென்றாலும், அவர்கள் என்னோடு இருந்து எனக்கு ஊட்டிய உணர்வு, என்னோடு இருந்து எனக்கு துணை புரிந்த அந்த காட்சி, இவைகளெல்லாம் நெஞ்சில் இன்னும் அகலாமல் இருக்கின்ற காரணத்தால்தான் கோவை என்றால் அது திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை, கோவை என்றால் அது கொள்கை வீரர்களின் கோட்டை, கோவை என்றால் நம்மை தாலாட்டிய தொட்டில், கோவை என்றால் நம்மை விளையாட வைத்த தாழ்வாரம். நம்மை படிக்கவைக்க, கலையுலகில் அடியெடுத்து வைக்க, காலை தூக்கி வைப்பதற்கு துணைபுரிந்த பகுதி என்ற இந்த உணர்வோடுதான் இந்த கோவை மாநகரத்திலே நான் உங்களையெல்லாம் சந்திக்கின்றேன்.
நான் இந்த மேடையிலே நம்முடைய ஈஸ்வரனையும், பெஸ்ட் ராமசாமியையும் காணுகிற போது எண்ணிக்கொண்டேன். இவர்களெல்லாம் இந்த ஊரிலும், நான் என்.ஜி.ராமசாமியுடைய இல்லத்திலே குடியிருந்து, அன்றைக்கு எதிரிகளாலும் என்.ஜி.ராமசாமி வேட்டையாடப்பட்டு, அதற்கு பிறகு அந்த ராமசாமியினுடைய இல்லத்திலே தங்கியிருந்து, அவர்களுடைய வீட்டுப்பிள்ளைகளோடு பழகி, இவ்வளவு காலம் எம்.ஜி.ஆர் போன்ற நண்பர்களை பெற்றதால்தான், அவருடைய மைத்துணர் அண்ணாசாமியை போன்றவர்களை பெற்றதால்தான் இன்றைக்கு நாம் கோவை மாநகரத்துக்கு வரும்போது இவ்வளவு தோழர்களை காண முற்பட்டு இருக்கின்றேன் என்ற பூரிப்பு ஏற்பட்டு இருக்குமா? என்று நான் எண்ணி பெருமிதம் கொள்ளுகின்றேன்.
தம்பி ராமநாதன் இங்கே பேசும் போது குறிப்பிட்டார். அதையேதான் மற்றவர்களும் சொன்னார்கள். நாங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தை இந்த தேர்தலிலே பெருவாரியான இடங்களை பெற்று வெற்றிபெறச் செய்து கலைஞருடைய காலடியிலே, அந்த வெற்றியைக் கொண்டு வந்து வைப்போம் என்றெல்லாம் சொன்னார்கள்.
அது தேவையில்லை. காலடியிலே கொண்டு வந்து வெற்றியை வைப்பது பூஜா மனப்பான்மை. அந்த பூஜா மனப்பான்மையை நான் என்றைக்கும் ஏற்றுக்கொள்பவன் அல்ல. வெற்றி பெறுங்கள். அதை என்னுடைய கழுத்திலே கொண்டு வந்து மாலையாக போடுங்கள். காலடியிலே வைக்க வேண்டாம் என்று நான் அவர்களையெல்லாம் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.
கோவையில் உள்ள சிறப்புகளைப்பற்றி சொல்லும் பொழுது, திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஏற்பட்ட சிறப்புகளை சொல்லும்போது, ஒரு நண்பர் செம்மொழி மாநாடு இங்கேதான் நடைபெற்றது. அந்த மாநாட்டின் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் இன்றைக்கு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றன என்று நெஞ்சிலே வைத்து சொன்னார். செம்மொழி மாநாடு நடைபெற்ற அந்தக்காலத்தையும், அது நடைபெற்ற போது அதைப்பற்றி யார்-யார் என்னென்ன பேசினார்கள்? என்பதையும் நான் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியாது.
எந்த ஒரு நிகழ்ச்சி நம்முடைய பார்வையில் நடத்தப்பட்டாலும், எந்தக்கட்சியும் சாராத தமிழர்கள் நடத்துகிற நிகழ்ச்சியானாலும், அதிலே நான் இருந்தால் அதற்கு அரசியல் சாயம் பூசி, அந்த நிகழ்ச்சிக்குரிய கருப்பொருளை வீணாக்குவது, கலைப்பது, தமிழ்நாட்டிலே உள்ள சில எதிர்க்கட்சிகளுக்கு, சில நண்பர்களுக்கு, வழக்கமாக இருப்பது வாடிக்கையாகிவிட்டது.
செம்மொழி மாநாடு நடைபெற்றபோது இவ்வளவு திட்டங்கள் நிறைவேறும் என்று நான் அறிவித்த நேரத்தில், அந்த திட்டங்களுக்கு எல்லாம் அடிக்கல் நாட்டிய நேரத்தில், என்ன சொன்னார்கள்? இது கருணாநிதி தன்னுடைய விளம்பரத்துக்காக, தன்னை முத்தமிழ்க்காவலன் என்று வாழ்த்தி முரசு கொட்டுவதற்காக நடத்தப்படுகின்ற மாநாடு என்று சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் நடத்திய மாநாட்டிலே, என்ன விளம்பரம் செய்தார்கள்? நான் நடத்திய செம்மொழி மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துகூட தமிழ்த்தாயை வாழ்த்திய வாழ்த்தாகத்தான் இருந்தது. நம்முடைய மாநாட்டில் வேறு யாரையும் புகழ்ந்து பாட நாம் இடம் தரவில்லை.
ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தஞ்சை தமிழ்மொழி மாநாட்டில், நம்முடைய அம்மையார் அவர்கள் முதல்வராக இருந்தார்கள். நாம் அம்மையார் என்றுதான் சொல்லுவேன். அவர்கள் வேண்டுமானால் என்னை கருணாநிதி, கருணாநிதி என்று குறிப்பிடட்டும். அதற்காக நான் கவலைப்படுவதில்லை.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முன்பு நடத்திய தஞ்சாவூர் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தே ஜெயலலிதாவுக்காகத்தான் இருந்தது. நான் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து உங்களுக்குத் தெரியும். செம்மொழி மாநாட்டில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'...என்ற அந்த ஆரம்பம்தான் நான் எழுதிய பாட்டு.
தமிழ்த்தாயின் மகன் என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமை அடைகிறேனே தவிர, தமிழன் என்று சொல்லிக்கொள்வதிலே தான் பெருமை அடைகிறேனே தவிர, நானே தமிழ்த்தாய் என்று சொல்லிக்கொள்கிற அளவுக்கு அகம்பாவம் பிடித்தவன் அல்ல, சுயவிளம்பரம் தேடுபவன் அல்ல என்பதை சொல்லத்தான் இதை சொல்கிறேனே தவிர வேறு அல்ல.
இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் நான் முன்பு சொன்னதைப்போல் இந்த மாவட்டத்தில் வழிபடக்கூடிய வீரர்களையும் நான் மதிக்கக்கூடியவன். அதனால்தான் தீரன் சின்னமலை சிலை சென்னையிலே வைக்கப்பட்டது கழக ஆட்சியில். தீரன் சின்னமலை சிலை இங்கே வைக்கப்பட்ட நிலையில், பெஸ்ட் ராமசாமி, நண்பர்களும், சென்னைக்கு வந்து நான் எழுதிய பொன்னர், சங்கர் படத்தை திரையிட்ட போது பார்த்தார்கள். பார்த்து விட்டு, அதைப்பற்றி பேசும்போது, இதைப்போன்று தீரன் சின்னமலை கதையையும், கலைஞர் எழுதி அதை படமாக ஆக்க வேண்டும். நாங்கள் எல்லாம் பார்க்க வேண்டும். எனக்கு தீரன் சின்னமலை கதை நன்றாக தெரியும்.
அவர் எப்படி எல்லாம் தன்னுடைய வீரர்களை வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்க பழக்கினார்? என்பதை எல்லாம் குறித்து வைத்துள்ளேன். விரைவில் அந்தப்படம் வரும் என்தையும் நான் பெஸ்ட்ராமசாமிக்கு நேற்றைக்கும் சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன்.
எந்த ஒரு படத்துக்குக்கும் நான் வாங்கிய பணத்தை நான் சொந்தமாக வைத்துக்கொண்டு செலவழித்ததில்லை. அந்த பணம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு, நலிந்த மக்களுக்கு அவ்வப்போது காசோலை, டிராப்ட் மூலமாக அவர்களுக்கு எல்லாம் வழங்கப்படுகிறது. அதைப்போன்று தான் பொன்னர் சங்கருக்கு அதன் தயாரிப்பாளர் தந்த பணமும் வழங்கப்பட்டுள்ளது. அதை நம்பிக்கையோடு நீங்கள் தீரன் சின்னமலை படத்தையும் தயாரிக்கும்போது அதற்கு வரும் பணத்தை எல்லாம்,ஏழை, எளிய மக்களுக்கு நிதியாக வழங்குவேன்.
இந்த கூட்டத்தில் பேசியவர்கள் கழக தேர்தல் அறிக்கையை வெகுவாக புகழ்ந்துவிட்டு இன்னும் அதிலே சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். கால்நடை தீவனத்தை மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்றார்கள். நிச்சயமாக கோரிக்கை நிறைவேற்ற அரசு ஆவண செய்யும். தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்த உயர் வகை தென்னை மரக்கன்றுகளை வழங்கவும், அதற்கான உறுதியை அளிக்கிறேன்.
திருப்பூர் சாய கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் கேட்டுள்ளீர்கள். என்னை துன்புறுத்திக்கொண்டிருக்கிற சாயக்கழிவு பிரச்சினை திருப்பூர் சாயக்கழிவு பிரச்சினை. மத்திய அரசிடம் ஒத்துழைப்பு பெற்று, தமிழக அமைச்சர்களை ஒன்று கூட்டி, அதில் உள்ள சிக்கல்கள் என்ன? என்பதை ஆராய்ந்து வெகு விரைவில் அதற்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.
மற்றும் கூட்டுறவு சங்கம் மூலம் வீடுகட்ட கடன் பெற்றவர்களுக்கு வட்டியை அறவே தள்ளுபடி செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் அடுத்த கட்ட வாக்குறுதியாக அளிக்கிறேன். சூரியஒளி, காற்றாலை மின்உற்பத்திக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை கேட்டுள்ளனர். அதுவும் பரிசீலித்து நிறைவேற்றப்படும்.
மின்சார கஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்றார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் போதுமானதாக இல்லை. இதனால் எதிர்பாராத கஷ்டங்கள் ஏற்படுகின்றன. கடந்த கால அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்க வில்லை. இதனால் இன்றைக்கு கஷ்டப்படுகிறோம். இன்னும் ஒரிரு ஆண்டுகளில் நம்முடைய மின்தேவை முழுவதும் பக்கத்துக்கு மாநிலத்துக்கு வழங்கும் அளவுக்கு, தமிழ்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். இந்த உறுதியை நம்பலாம்.
அந்த அம்மையார் தேர்தல் அறிக்கையில் வானத்தை வில்லாக வளைப்போம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மக்கள் நம்பக்கூடிய ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருந்துள்ளது. கடந்த காலத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் சாதாரண மக்கள் வாழ முடியவில்லை. அரசு ஊழியர்கள் சிறையில் இருந்தார்கள். ஆசிரிய பெருமக்கள் அடிபட்டார்கள், உதைப்பட்டார்கள்.
எதிர் கட்சி தலைவர் என்னையும் சிறையில் பூட்டி அடித்து உதைத்தார்கள். இது தான் அம்மையார் ஆட்சியின் சிறப்பம்சம். தமிழ்நாட்டில் அம்மையார் ஆட்சியில் நடைபெற்ற அநியாயம், அக்கிரமங்களை எண்ணிப்பாருஙகள். இன்றைக்கு பாட்டாளியை பற்றி பேசும் ஜெயலலிதா அன்று என்ன சொன்னார்? அரசு அதிகாரிகளை சவுக்கடி கொடுத்து அடக்கி வைப்பேன் என்று சட்டமன்றத்தில் பேசியவர் அம்மையார் ஜெயலலிதா.
இன்றைக்கு வாக்குகள் கேட்க உத்தமிவேடம் போடுகிறார். அவர் அடிக்காத கொள்ளையா? ஆடாத ஆட்டமா? பெங்களூரில் அவர் மீது நடக்கும் வழக்கு எதற்காக நடக்கிறது? அதற்கு கெடுவாங்கி, கெடுவாங்கி வருகிறார். இந்த தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு சொன்னால், அளவுக்கு மீறி, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளார். அதனால் அதற்குரிய தண்டனை கிடைக்கும். தண்டனை கிடைத்தால் தேர்தலில் நிற்க முடியாது என்று அந்த வழக்குக்கு புள்ளி சரியில்லை, கமா சரியாக இல்லை என்று ஒத்தி வாங்குகிறார்கள். தற்போது ஒத்திவைக்கப்படலாம்? அதற்கு தண்டனை கிடைக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் இருக்கிறது.
எவ்வளவு கோடி ரூபாய் சொத்து? காலுக்கு, இடுப்புக்கு கழுத்துக்கு, தலைக்கு என்று அலங்கார நகைகள், வைர ஒட்டியானங்கள், நவரத்தினங்கள். இது யாருடைய வரிப் பணம்? தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.
திமுக அரசு ஊழல் அரசு என்கிறார் ஜெயலலிதா. ஆனால் அவர் மக்கள் பணத்தை தண்ணீர் மாதிரி செலவளித்ததை எல்லாம் ஒருவரும் மறந்துவிடவில்லை.
அவரது வளர்ப்பு மகன் திருமணத்தின்போது அங்கமெல்லாம் தங்கமும், வைரமும் அணிந்து வந்து ஜொலித்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? அவர் பூர்வீக சொத்தா? இல்லையே. மக்களின் வரிப்பணம் அல்லவா உருமாறி இருந்தது.
தமிழக மக்கள் ஒரு முறை ஏமாறுவார்கள், ஏன் இருமுறை கூட ஏமாறலாம், ஆனால் எப்போதும் ஏமாறுவார்கள் என்ற நினைப்பை இந்த தேர்தலில் உடைத்துக்காட்டப் போகிறார்கள்.
ஆறாவது முறையாக முதல்வராக ஆக்குங்கள் எனக் கேட்பது, பதவிக்காக அல்ல; மக்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே. மக்களுக்கு ஒழுங்கான ஊழியம் செய்யக் கூடியவராக, உங்கள் வீட்டு வேலைக்காரனாக உழைக்க ஆதரவு தாருங்கள்.
உதய சூரியன், கை, சிலிண்டர் சின்னங்களுக்கு எல்லாம் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள். சில இடங்களில் ஒற்றுமை குறைவு என்று கேள்விப்பட்டேன். ஆகவே ஒற்றுமையை உரமாக்கி தாருங்கள் என்று கேட்டு விடை பெறுகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications