For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரசுடன் கூட்டணி ஆட்சிக்கு தயார்-கருணாநிதி சூசகம்

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை மறைமுகமாகக் குறி்ப்பிட்டார் முதல்வர் கருணாநிதி.

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கருதப்படும் நிலையில் முதல்வரின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

வடசென்னையில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அயனாவரம் ஜாயின்ட் ஆபிஸ் அருகே நடைபெற்றது.

அதில் பேசிய முதல்வர் கருணாநிதி,டெல்லியில் இருந்து நாம் கேட்பது எல்லாம் தாமதமாகத்தான் வரும். அதுபோலத்தான் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தாமதமாக வந்திருக்கிறார் (விமானம் தாமதமானதால் கூட்டத்துக்கு தாமதமாக வந்தார் ஆசாத்). டெல்லியில் இருந்து தாமதமாக வரும் என்றாலும், தட்டாமல் வரும், தாராளமாக வரும்.

விமானம் தாமதமாக வந்ததால்தான் குலாம் நபி ஆசாத் தாமதமாக வந்தார். இந்த தாமதத்தை நான் விரும்புகிறேன். ஏனென்றால், கூட்டணி கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களும் பேசுவதை கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்த ஆட்சியை தொடர செய்ய வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?, 6வது முறையாக தொடர வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் உரைத்திருக்கிறார். அதற்கு அடையாளமாகத் தான் இந்த தேர்தல் கூட்டணி அமைந்துள்ளது.

வேறு இடங்களிலும் கூட்டணி அமைகிறது. ஆனால், அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சி, திமுக வெற்றிக்காக பாடுபடும் சூழல் இங்கு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும். இது தேர்தலுக்காக சொல்வது அல்ல.

ஜனநாயகத்தை காப்பாற்றும் அறப்போராட்டம் நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 6வது முறையாக அல்ல, 7வது, 8வது முறை என்றாலும் மாநில முன்னேற்றத்தை எண்ணிப்பார்ப்பதுதான் ஒரு கட்சியின் குறிக்கோள் ஆகும்.

நாம் மாநில கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்கவில்லை. இதில், சமுதாய இயக்கங்கள் உள்ளன. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி உள்ளது. ஏனென்றால், நமக்கு தேவையானதை மாநில கட்சியே உருவாக்கிக்கொள்ள முடியாது. மத்திய அரசுடன் உறவு கொண்டு காரியம் சாதிக்க இந்த இணைப்பு தேவை.

காங்கிரஸ் கட்சியுடன் இணைவது பெருமை என்ற காரணத்திற்காக அல்ல. எங்கள் உரிமையை மீண்டும் வலியுறுத்த இந்த கூட்டணி தேவை. இது தேர்தலுக்கான கூட்டணி. பதவிக்கான கூட்டணி அல்ல. அப்படி எந்த ஒரு கட்சியும் உருவாக கூடாது. அகில இந்திய அளவில் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அண்ணா பலமுறை வலியுறுத்தி கூறியது.

மக்களுக்காக சேவை புரிய, நல்ல திட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சியுடனான உறவு தேவைப்படுகிறது. கடந்த கால சேவைகளை யாரும் மறக்க முடியாது. 100 ஆண்டு காலமாக பரிதிமாற் கலைஞர், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தேவை என்று கேட்டு வந்தார். அதற்கு இப்போதுதான் விடிவு காலம் பிறந்திருக்கிறது.

முதல்வராக இருக்கும் நான், மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங்கையும், சோனியா காந்தியை சந்திக்கின்ற வாய்ப்பை பெற்று, ஒன்று இரண்டு முறை வலியுறுத்தி அந்த வாய்ப்பை பெற்றோம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தவுடன், சோனியா காந்தி எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த பெருமை உங்களை மட்டுமே சார்ந்தது என்று கூறியிருந்தார். செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்கு காங்கிரஸ் கட்சியுடன் கொண்ட உறவுதான் காரணம்.

மெட்ரோ ரயில் திட்டம், முடிவடையும் நிலையில் உள்ள சேது சமுத்திர திட்டம் போன்றவை நிறைவேற மத்திய அரசுடன் நாம் கொண்டுள்ள உறவுதான் காரணம். மனஸ்தாபம் இல்லாத நிலை காரணத்தினால்தான் இந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

திட்டங்களை வகைப்படுத்தி, வழிப்படுத்தி, சொல்ல வேண்டிய நேரத்திலே அதை சொல்லி நிறைவேற்றி வருகிறோம். திராவிட நாடு இதழில், அண்ணா எழுதிய கடிதத்தில், மாநில சுயாட்சிக்காக மத்திய அரசுடன் மோதிக்கொள்ள மாட்டேன். மத்திய அரசுடன் மோதினால் மக்களுக்குத்தான் நஷ்டம். இதில், வாதிட்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியிருக்கிறார்.

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா கம்யூனிஸ்டுகளும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நான் என்ன செய்தேன், எத்தனை முறை டெல்லி வந்து பேசினேன் என்று கேட்கிறார்கள்.

விலைவாசி உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான் என்று நான் சொல்ல வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதை நான் செய்யவில்லை. நேற்று கூட மத்திய அரசை பற்றி குறை கூறி கம்யூனிஸ்டு கட்சிகள் எழுதிய கட்டுரையை நான் படித்தேன். டெல்லிக்கு நான் அடிமை என்று கூறியிருக்கிறார்கள். நான் டெல்லிக்கு செல்வதே கம்யூனிஸ்டு கட்சிக்கு பிடிக்கவில்லை.

டெல்லிக்கு யார் அதிகமுறை சென்றார்கள் என்பதை நாம் கணக்கு எடுப்போமா?. நாங்கள் எதையும் மத்திய அரசிடம் நட்புரீதியாக பெற விரும்புகிறோம். உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்பது திமுகவின் கொள்கை. அதனால்தான், பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பலர் நம்முடன் சேர்ந்துள்ளனர்.

இந்த உறவு நீடிக்க, உரிமை நிலைநாட்டப்பட, தமிழகத்தின் தேவை நிறைவேற்றப்பட காங்கிரசுடனான உறவு மேலும் மேலும் வலுவடைய வேண்டும்.

இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் எங்களுடைய இதயத்தின் ஒற்றுமைக்கேற்ப இணைந்து, மத்திய அரசிடமிருந்து உரிமைகளைக் கேட்டுப்பெறுவோம் என்றார் கருணாநிதி.

குலாம் நபி ஆசாத் பேச்சு:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், இந்தியாவில் பல முதல்வர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் யாரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை. ஆனால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய ஒரே தலைவராக கருணாநிதி விளங்குகிறார்.

இதற்கு உதாரணமாக இந்தியாவிலே எந்த மாநிலமும் செய்யாத வகையில் ரூ.1க்கு கிலோ அரிசி என்று திட்டம் வகுத்து மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தற்போது தேர்தல் அறிக்கையிலும் ஆட்சிக்கு வந்தால் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என்று அறிவித்திருக்கும் ஒரே தலைவரும் அவரே.

பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மேம்படுத்தியிருக்கிறார். சத்துணவில் ஒரு முட்டை வழங்கி தற்போது அதை அதிகப்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலமும் இதுவரையில் செய்யாத அளவிற்கு தமிழக மக்களுக்கு இலவச கலர் டி.விகள், இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கியிருக்கிறார்.

குடிசைகளில் வாழும் 21 லட்சம் ஏழை மக்களுக்கு கான்கீரிட் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் உயர் சிகிச்சை பெற வழி வகுத்து இருக்கிறார். விவசாய கடன் ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார். இதை எந்த மாநிலமும் செய்ததில்லை. இந்த பெருமை தமிழகத்திற்கு மட்டுமே உண்டு.

அதே போல் மத்திய அரசும் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இப்படி எண்ணற்ற மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

மக்களின் வாழ்வு நிலை உயர திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும். வறுமை நீங்க, மகிழ்ச்சி பொங்க வேண்டுமென்றால் கலைஞர் 6வது முறையாக முதல்வராக வேண்டும். மக்களுக்காக வாழும் கருணாநிதி தலைமையிலான அரசு மீண்டும் வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ஆசாத்.

English summary
DMK president and Chief Minister M. Karunanidhi on Monday night said if the Congress gets as many seats as the Dravida Munnetra Kazhagam, we will be able to fulfil our needs equally. In a veiled reference to power sharing, Mr. Karunanidhi told a public meeting in Aynavaram that in case there was any shortfall, a ?union of hearts, not seats? would pave the way for meeting the requirements of people of the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X