For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது-பதவி நீக்க கோரிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து 19 நிர்வாகிகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவருக்குப் பதிலாக, புதிய தலைவரை நியமிக்கும்படி மேலிடத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ்.வி.சேகர் எம்எல்ஏ, முன்னாள் சென்னை துணை மேயர் கராத்தே தியாகராஜன், தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாநிலத் தலைவர் செங்கை செல்லப்பன், தென் சென்னை மாவட்டத் தலைவர் மங்கள்ராஜ், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி உள்ளிட்ட 19 பேர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவுக்கு கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்தே, தங்கபாலுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரசார் பல்வேறு இடங்களில் உருவ பொம்மை எரிப்பு போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கினர். குறிப்பாக மைலாப்பூர் தொகுதியில் தனது மனைவியை வேட்பாளராக நிறுத்தி, பின்னர் அவரது வேட்பு மனு தள்ளுபடியாகும் வகையில் செயல்பட்டு, இதையடுத்து தானே அந்தத் தொகுதியின் வேட்பாளராகவும் ஆனார் தங்கபாலு. இதனால் அவருக்கு எதிர்ப்பு மேலும் அதிகரித்தது. கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனையே அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில், தேர்தல் நடந்த நாளன்று நள்ளிரவில் கராத்தே தியாகராஜன், எஸ்.வி.சேகர், தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் தங்கபாலு.

இது காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகளும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தங்கபாலுவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சென்னை உள்பட சில இடங்களில் தங்க பாலுவுக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சோனியாவுடன் ப.சிதம்பரம் சந்திப்பு:

இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார். கராத்தே தியாகராஜன், சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏப்ரல் 13ம் தேதி தங்கபாலு வெளியிட்ட அறிக்கையைக் கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். சட்டப் பேரவை உறுப்பினர், மாவட்டத் தலைவர், மாநில பிரிவுகளின் தலைவர்கள், சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள், மக்களவைத் தொகுதி அளவிலான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்பட 19 நிர்வாகிகளை நீக்கியதாக வந்த அறிவிப்பு கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு உள்பட்டதாக எனக்கு தோன்றவில்லை.

இது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ப. சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளோம். விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான ஜி.ஏ. வடிவேலு விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலில் 63 தொகுதிகளை பெற்று காங்கிரசின் பெருமையை சோனியா காந்தி உயர்த்தினார். ஆனால் தொகுதிகள் ஒதுக்கீடு முதல் தேர்தல் வரை பல குழப்பங்களை ஏற்படுத்தி கட்சியின் கவுரவமும், நன்மதிப்பும் குலை கிற அளவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை செயல்பட்டிருப்பது வேதனைக்குரியது.

மைலாப்பூர் தொகுதியில் தமிழக தலைவரே போட்டியிட்டதால், மற்ற தொகுதிகளுக்கு அவரால் வாக்கு சேகரிக்க இயலாத நிலை ஏற்பட்டதால், தொண்டர்களிடம் சோர்வும், கூட்டணி கட்சி யிடம் மரியாதை குறைவும் ஏற்பட்டுவிட்டது. தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழுவோ, பிரசார குழுவோ அமைத்து பிரசாரம் செய்யப்படவில்லை. தேர்தல் யுக்திகளை வகுத்து செயல்படவும் இல்லை.

தொகுதி மக்களுடன் தொடர்புள்ள வேட்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டு, தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டு வெற்றிவாய்ப்பு குறைக் கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியினர் எதிர்ப்பு குரல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கட்சி நிர்வாகிகளை நீக்கியிருப்பது வருந்தத்தக்கது. அவர்களை மீண்டும் உடனடியாக கட்சியில் சேர்க்க வேண்டும். அகில இந்திய தலைமை உடனடியாக தலையிட்டு கட்சியின் நன்மதிப்பை காப்பாற்ற தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரையும், புதிய மேலிட பார்வையாளரையும் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முடிந்தால் தடுத்துப் பாருங்கள்-கராத்தே தியாகராஜன்:

கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், தங்கபாலு எங்களை கட்சியை விட்டு நீக்கியதாக அறிவித்துவிட்டு எங்களிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது. சத்தியமூர்த்தி பவனுக்குள் நாங்கள் நுழையக்கூடாது என்று உத்தரவிடுகிறார். சத்தியமூர்த்தி பவன், தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானது அல்ல.

1996ம் ஆண்டில் மூப்பனார் தலைமையில் த.மா.கா. உருவானபோது சத்தியமூர்த்தி பவனை மீட்டு தலைவர் மூப்பனாரிடம் ஒப்படைத்தவர்களில் நானும் ஒருவன். நான் இந்த அறிக்கை மூலம் அவருக்கு தெரியப்படுத்திக் கொள்வது என்னவென்றால், நாங்கள் பத்திரிகையாளர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவித்துவிட்டு குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக சத்தியமூர்த்தி பவனுக்கு வருவோம், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்' என்று கூறியுள்ளார்.

English summary
Congress members from various factions closed ranks to demand the sacking of TNCC president K V Thangkabalu on Friday against his "arbitrary" decision of expelling 19 party members including seven youth Congress district wing chiefs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X