சிடி..மோடி..அடுத்தடுத்து சிக்கல்களில் மாட்டும் லோக்பால் குழு!

ஊழலுக்கு எதிராக உருவாக்கப்படவுள்ள லோக் பால் மசோதா வரைவுக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உள்ள முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், 'நீதிபதிகளை சில கோடிகள் கொடுத்தால் விலைக்கு வாங்கிவிடலாம்' என்று கூறியதை உள்ளடக்கிய சிடி சமீபத்தில் வெளியானது.
அந்த சிடியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர் சிங் (பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்) ஆகியோருடன் சாந்தி பூஷண் தொலைபேசியில் உரையாடுகிறார்.
அதில், நீதிபதிகளை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட முடியும். எனது மகன் பிரசாந்த் பூஷண் (மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான இவரும் லோக் பால் மசோதா வரைவுக் குழுவில் உறுப்பினராக உள்ளார்) நினைத்தால் ரூ.4 கோடி வரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடுவார் என்று கூறுவது போல உரையாடல் பதிவாகியுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சாந்தி பூஷண் மறுத்துள்ளார். நிருபர்களிடம் பேசிய சாந்தி பூஷண், நான் முலாயம் சிங் யாதவ், அமர் சிங்குடன் பேசியதே இல்லை. அந்த உரையாடலே பொய்யானது. அந்த சிடியை தடயவியல் சோதனைக்கு உள்படுத்தினால் உண்மை வெளிவரும். சிடி விவகாரத்தின் பின்னணியில் பலர் எனக்கும் எனது மகனுக்கும் எதிராக திட்டமிட்ட சதி இது என்றார்.
மேலும் இந்த சிடியை வெளியிட்டதாக அமர் சிங் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்துள்ளார் சாந்தி பூஷண். அந்த மனுவில், நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து சரிகட்ட முடியும் என்று முலாயம் சிங்கிடம் நான் கூறியதாக சிடி வெளியிடப்பட்டுள்ளது. அந்த சிடியில் பதிவான உரையாடலின்போது, அருகே அமர்சிங்கும் இருப்பதாக சிடி தகவல் தெரிவிக்கிறது. இந்த சிடி எல்லா தொலைக்காட்சி நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிடியை ஹைதராபாத்திலுள்ள தடய அறிவியல் நிலையத்திலும் மற்றொரு சோதனைக் கூடத்திலும் ஆய்வு செய்ததில் அது போலியாக தயாரிக்கப்பட்ட சிடி எனத் தெரியவந்துள்ளது. அந்த இரு தடய அறிவியல் நிலையங்களும் அளித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சிடி என்னைக் குற்றம்சாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிடியைத் தயாரித்தவர் யார், அதை தொலைக்காட்சி நிலையங்களுக்கு அனுப்பியது யார் என்பதை அறிய நீதிமன்றமே தானே முன்வந்து சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
இந்த சிடி தயாரிப்பில் அமர் சிங்கிற்கு நிச்சயம் தொடர்பு இருக்கும். ஏனெனில் சாந்தி பூஷண் என்னுடன் அமர்ந்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவரை நான் எந்த சமயத்திலும் சந்தித்துப் பேசியது இல்லை. அந்த சிடியில் இருப்பது அமர் சிங்கின் குரலாக இருக்கலாம். எனவே இந்த சிடியை அமர் சிங் தயாரித்து இருக்கலாம் அல்லது போலி சிடி தயாரிக்க அவர் உதவியிருக்கலாம்.
இவ்வாறு போலி சிடியைத் தயாரித்து அதை தொலைக்காட்சி நிலையங்களுக்கு அனுப்பிவைத்து ஒளிபரப்பச் செய்திருப்பதன் மூலம் எனது (சாந்தி பூஷண்) பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளார். இதன் மூலம் நீதிபதிகள் பெயரை இழுத்து, 2ஜி முறைகேடு புகார் வழக்கையும், லோக்பால் சட்ட மசோதாவையும் முடக்க இதன் பின்னணியில் இருந்து சில சக்திகள் முயற்சி செய்துள்ளன என்று கூறியுள்ளார்.
ஆனால், இது குறித்து அமர் சிங் கூறுகையில், சாந்தி பூஷண்-முலாயம் சிங் இடையே தொலைபேசி உரையாடலுக்கு நான் அப்போது ஏற்பாடு செய்தது உண்மை தான். ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாது. அவர்கள் பேசியதை விட இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் எனது தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதைத் தான். எனது தொலைபேசி உரையாடல்கள் மீடியாக்களில் வெளியானபோது அதை தடை செய்யக் கோரி நான் வழக்குத் தொடர்ந்தேன். ஆனால், தடை விதிக்கக் கூடாது என்று வாதாடியவர் தான் பிரஷாந்த் பூஷண். இப்போது அதே டேப்கள் பூஷண்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளது என்றார்.
மேலும் சிடியை திருத்தி, மாற்றி வெளியிட்டதாக பிரஷாந்த் பூஷண் மீது டெல்லி போலீசில் புகாரும் தந்துள்ளார் அமர் சிங்.
ஹசாரே Vs கபில் சிபல்-திக்விஜய் சிங்:
இதற்கிடையே லோக்பால் மசோதாவை தடுக்க காங்கிரஸ் தலைவர்களில் சிலர் அவதூறு பிரசாரம் மேற்கொண்டு வருவதாக அந்தக் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் அன்னா ஹஸாரே புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரை பெயர் குறிப்பிடாமல் குற்றம் சாட்டியுள்ளார்.
லோக்பால் மசோதாவுக்கு எதிராக ஊழல் சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. மசோதாவை வரையறுக்க விடாமல் தடுக்க அந்த சக்திகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் சதியை முறியடிப்போம். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவர் (திக்விஜய் சிங்) அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருகிறார், கட்சியின் அனுமதியோடுதான் அவரது அறிக்கைகள், பேட்டிகள் வெளியாவதாகத் தெரிகிறது, அதை தாங்கள் (சோனியா காந்தி) ஒப்புக் கொள்கிறீர்களா?.
லோக்பால் மசோதா வரைவு கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒரு அமைச்சரே (கபில் சிபல்) மக்கள் பிரதிநிதிகள் குழுவுக்கு எதிராக அவதூறான தகவல்களைப் பரப்பி வருகிறார்.
கூட்டுக் குழுவின் இணைத் தலைவராக உள்ள சாந்தி பூஷண், போலி சி.டி. விவகாரத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். குழுவில் இடம்பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக அவதூறு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்ற குற்றச்சாட்டுகளை அரசு பிரதிநிதிகள் மீதும் எங்களால் சுமத்த முடியும். இத்தகைய தனிநபர் விமர்சனங்களால் எங்களைவிட அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், ஒருவரையொருவர் குறைகூறி மக்களின் கவனத்தை திசை திருப்ப நாங்கள் விரும்பவில்லை. லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் என்று கூறியுள்ளார் ஹசாரே.
மீண்டும் போராட்டம்-ஹசாரே:
இந் நிலையில் ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என நம்புகிறேன். ஒருவேளை, லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் சில கட்சிகள் தடுத்தால் அதை எதிர்த்து மக்களைத் திரட்டி மீண்டும் போராடுவோம்.
உரிய விசாரணை-ப.சிதம்பரம்:
இந்த சிடி விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக சுதந்திரமான, நியாயமான விசாரணை நடத்தப்படும் என டெல்லி போலீஸார் என்னிடம் உறுதி அளித்துள்ளனர். அந்த சிடி இரு சோதனைக் கூடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் இரு தனித்தனி அறிக்கைகள் வந்துள்ளன என்றார்.
லோக்பால்-தலைமை நீதிபதியும் சேர்க்க வேண்டும்-திக்விஜய்சிங்:
இதற்கிடையே லோக்பால் சட்ட வரம்பிற்குள் அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் கொண்டு வரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர், லோக்பால் சட்ட வரம்பிற்குள் பிரதமர், குடியரசுத்தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரும் சேர்க்கப்பட வேண்டும்.
உத்தராஞ்சலில் பல்கலைக்கழகம் அமைக்க இடம் வேண்டும் என்று அம்மாநில முதல்வராக இருந்த நாராயண் தத் திவாரியிடம், யோகா குரு பாபா ராம் தேவ் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு ரூ.1,100 கோடி மதிப்புள்ள நிலத்தை நாராயண் தத் திவாரி அளித்தார். இவ்வாறு காங்கிரஸ் முதல்வரிடம் இருந்து நிலம் பெற்ற ராம்தேவுக்கு காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்று கூற உரிமையுள்ளதுதான்.
உண்மையிலேயே கறுப்புப்பணத்துக்கு எதிராக போராடுபவராக ராம் தேவ் இருப்பவராக இருந்தால், மற்றவர்களிடமிருந்து அவர் நன்கொடைப் பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால் அந்தப் பணத்துக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் காந்தியவாதி ஹஸாரேவை பாராட்டுகிறேன். அதே நேரத்தில் அவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் புகழத் தேவையில்லை என்றார்.
ஹசாரேவுக்கு மோடி பாராட்டு-ராகுலுக்கு கண்டனம்:
இந் நிலையில் நான் ஊழலை ஒழிக்கவே விரும்புகிறேன். ஆனால், அதை மையமாக வைத்து போராட்டம் நடத்தி ஹீரோ ஆக விரும்பவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதன்மூலம் ஹசாரேவுக்கு தனது எதிர்ப்பை மறைமுகமாகத் தெரிவித்தார் ராகுல்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மக்கள் பணி செய்வதே நம் கடமை. ஹசாரே போன்ற காந்தியவாதிகள் தங்களை ஹீரோவாக கருதி ஒருபோதும் பணியாற்றியதில்லை. குஜராத் மாநிலத்தை அவர் பாராட்டிவிட்டதற்காக, அவரை சிலர் குறிவைத்து தாக்கி பேசி வருகின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்டப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications