கார்பைட் மாம்பழம் கருச்சிதைவை உண்டாக்கும்-டாக்டர்கள் எச்சரிக்கை
கோவை: கார்பைட் கற்கள் வைத்து பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை உண்டால் கருவுற்ற பெண்களின் கருவும் கலையும் அபாயம் இருப்பதாக கோவை டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கார்பைடு கற்கள்:
கோவை மார்க்கெட்டில் விற்பனைக்கென கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் வருகின்றன. பழங்களாக இருந்தால் வைத்திருந்து விற்க முடியாது என்பதால், கடும் காயாக இருக்கும்போதே மாம்பழங்கள் பறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு காயாக வரும் மாம்பழங்களைப் பழுக்க வைக்க அவற்றை ஒரு அறையில் குவித்து கார்பைடு கற்களும் வைத்து விடுவார்கள். கார்பைடு கற்களிலிருந்து வெளியேறும் சூட்டில் மாம்பழங்கள் பழுத்து விடுகின்றன.
ரசாயன பாதிப்பு:
கார்பைடு கற்களிலிருந்து வெளியேறும் ஒருவகை ரசாயனம் மாம்பழங்களுக்குள்ளும் புகுந்து விடுகிறது. இந்த பழங்களைச் சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
கடந்த ஆண்டுகளில் இது குறித்து புகார் வந்தபோது மாநகராட்சி நகர்நலத்துறையும், கோவை மாநகராட்சியும் பழக்குடோன்களில் ரெய்டுகள் நடத்தின. கார்பைடு கல் பயன்படுத்தாமல் பழங்களை விற்பனை செய்வதாக அப்போது வியாபாரிகள் உறுதியளித்தனர். ஆனால், மாம்பழ சீசன் களை கட்டியதும் மீண்டும் கார்பைட் கல்லின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அபாயம்:
கார்பைடு கல் தங்க நகை பட்டறைகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தக் கூடியது. இந்த கல்லில் கந்தகம் அதிகமாக உள்ளது. இதை கையால் தொடுவதோ, நீண்ட நேரம் வைத்திருப்பதே கூட ஆபத்தானது. இம்முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களைச் சாப்பிடும்போது அவை நம் உடலுக்குள் சென்று உடல் உஷ்ணத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்து விடுகின்றன. இதனால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவை ஏற்படும்.
கருச்சிதைவு:
இத்தகைய பழங்களை உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக கோவையைச் சேர்ந்த டாக்டர் குமாரசாமி தெரியப்படுத்தினார். தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டால் கூட இத்தகைய பழங்களினால் ஏற்படும் உடல்நலக் கோளாறிலிருந்து விடுபட வெகுநாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
