For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே 15ம் தேதி பதவியேற்பு விழா-3வது முறையாக முதல்வராகிறார் ஜெ.

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அவர் 3வது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

தனது மாபெரும் வெற்றியையொட்டி போயஸ் கார்டனில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், புதிய அரசை அமைத்தவுடன் தமிழ்நாட்டு புனரமைப்பதே என் முதல் வேலையாக இருக்கும். அதற்கே முன்னுரிமை தருவேன்.

திமுக ஆட்சியில் மாநிலத்தின் நிதிநிலை உள்பட அனைத்துமே சீர்குலைந்துவிட்டன. அதை சரி செய்வேன். சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன்.

திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த வெறுப்பே அவர்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய தோல்விக்குக் காரணம்.

தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் ஒன்றரை ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

பிரச்சாரப் பயணத்தின்போதே மக்களின் உணர்வுகளை நான் புரிந்து கொண்டேன். எனவே இந்த வெற்றி நிச்சயம் எதிர்பார்த்தது தான்.

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற மிக மிகச் சிறப்பான நடவடிக்கையை எடுத்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு அமைக்க முதலில் ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதன் பின்னர் பதவியேற்பு நாள் குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த மகத்தான வெற்றியைக் கொடுத்த தமிழக மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்-15ம் தேதி பதவியேற்பு:

தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள ஜெயலலிதா வரும் 15ம் தேதி முதல்வராகப் பதவியேற்கலாம் என்று தெரிகிறது. நாளை ஜெயலலிதாவை அதிமுக எம்எல்ஏக்கள் முறைப்படி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யவுள்ளனர்.

அதன் பின்னர் ஜெயலலிதா கட்சி நிர்வாகிகளுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று தான் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டைத் தெரிவித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார்.

இந் நிலையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த மூத்த போலீஸ் அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். டிஜிபி லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் ஆகியோர் அவருடன் ஆலோசனை நடத்தினர்.

15ம் தேதி ஜெயலலிதாவுடன் அமைச்சர்களும் பதவியேற்பர் என்று தெரிகிறது. மே 16ம் தேதி தாற்காலிக சபாநாயகர் தேர்வும், அன்றைய தினமே எம்எல்ஏக்கள் பதவியேற்பும் நடக்கும் என்றும் தெரிகிறது.

மோடி-நாயுடு வாழ்த்து:

தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

English summary
ADMK chief Jayalalithaa to sworn-in as chief minister of Tamil Nadu on May 15
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X