For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் பயணத்தின்போது போக்குவரத்தை நிறுத்தக்கூடாது: அதிகாரிகளுக்கு ஜெ உத்தரவு

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இன்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் நேற்று முதல் முறையாக அமைச்சரவைக் கூட்டத்தை ஜெயலலிதா நடத்தினார். இரண்டரை மணி நேரம் புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில் அமைச்சர்கள், புதிய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் 4 செயலாளர்கள், நிதித்துறைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பதவி ஏற்ற நாளில் அறிவிக்கப்பட்ட 7 திட்டங்களையும் விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்துவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும், பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஜெயலலிதா, பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் மூலம் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஒவ்வொரு துறையின் நிதி நிலைமை குறித்தும், திட்டங்களின் நிலை குறித்தும் ஜெயலலிதா விளக்கினார்.

அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றியும் அறிவுரைகளை வழங்கினார்.

முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து விளக்கங்களைக் கேட்டறிந்தார் ஜெயலலிதா.

இந் நிலையில் இன்றும் ஜெயலலிதா 2வது நாளாக அமைச்சர்கள், அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்தினார். இன்று மாலை இந்தக் கூட்டம் நடந்தது.

முன்னதாக கோட்டைக்கு முதல் நாளாக வந்த அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கியிருக்கும் இடம் தெரியாமல், ஒவ்வொரு மாடியையும் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது உதவியாளர்களும் புதியவர்கள் என்பதால், ஒவ்வொருவரிடம் விசாரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல்வர் அறை இருக்கும் பகுதிக்குள், போலீசார் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.அமைச்சர்களுக்கு வாழ்த்து சொல்ல வந்த எம்.எல்.ஏக்களும், ஆதரவாளர்களும் தங்கள் அமைச்சர்களின் அலுவலகங்களை மாடி, மாடியாய் சுற்றி சுற்றி வந்தனர்.

கோட்டையின் முதல் மாடியில் முதல்வர் ஜெயலலிதாவின் அறைக்கு அருகே நிதித்துறை, உணவு, கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், கூட்டுறவு மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளின் அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கத்தில், மீன்வளத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைத்து அமைச்சர்களின் அறைகளிலும் பச்சை வண்ண புடவை அணிந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்தை நிறுத்தக்கூடாது-ஜெ உத்தரவு:

இந் நிலையில் தனது பயணத்தின்போது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு எப்போது?:

இதற்கிடையே சட்டப்பேரவை மண்டபம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த மண்டபத்தை அமைக்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தவிட்டுள்ளார்.

இதையடுத்து இருக்கைகளை அமைக்கும் பணி, வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு- பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலையும் நடந்து வருகிறது.

இந்த மண்டபம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதும், தற்காலிக சபாநாயகரை முதல்வர் நியமிப்பார். அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பின்னர் தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். வரும் 25ம் தேதி எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.

இதையடுத்து சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். பின்னர் அவர் துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார். அதற்கு அடுத்தபடியாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் தேதியில், சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கவர்னர் பர்னாலா வெளியிடுவார். அந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவார்.

சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது-ஹைகோர்ட்:

இந் நிலையில் தலைமைச் செயலகத்தை ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலகத்தை பழைய கட்டிடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இதனால் ரூ. 1,100 கோடி மக்கள் பணம் விரயமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இம் மனுவை நீதிபதிகள் ராஜேஷ்வரன், வாசுகி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறைச் செயலாளர், அதிமுக பொதுச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

அப்போது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகளிடம், சட்டசபை இடமாற்ற பணிக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதிகள் சட்டசபை இடமாற்றத்திற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

சட்டசபை செயலாளர் செல்வராஜ் மாற்றம்:

இதுவரை சட்டசபை செயலாளராக இருந்த மா.செல்வராஜ், நேற்று முன்தினம் பிற்பகல் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சட்டமன்ற பேரவை செயலகத்தின் இணை செயலாளராக இருந்த ஜமாலுதீனுக்கு பதவி உயர்வு அளித்து சட்டசபை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளராக இருக்கும் சு.பாலசந்தரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி வாரியத் தலைவர்கள் ராஜினாமா:

இந் நிலையில் திமுக ஆட்சியில் வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியன், அறிவியல் தமிழ் மன்றம் துணைத் தலைவர் பதவியில் இருந்த பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், தோல் பதனிடுதல் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்த வலசை ரவிச்சந்திரன், சமூக நல வாரியத் தலைவர் பதவியில் இருந்த கவிஞர் சல்மா, வக்பு வாரிய உறுப்பினர் பதவியில் இருந்த கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

English summary
CM Jayalalithaa has asked the police to withdraw additional security provided to her and ordered to avoid traffic blockade on her route
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X