திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மீது 2வது மனைவி வழக்கு
மதுரை: திருமணத்தைப் பயன்படுத்தி தன்னை மோசடி செய்து பணம், வீடு ஆகியவற்றைப் பறித்துக் கொண்ட திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது 2வது மனைவி டாக்டர் ராணி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நான், திருச்சி குமரன்நகரில் வசித்து வருகிறேன். திருச்சியை சேர்ந்த பரஞ்ஜோதி என்னோடு நெருங்கி பழகினார். அதன்பின்பு என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
இதனால் 10.11.2008 அன்று திருவேற்காடு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இதன்பின்பு தான் பரஞ்ஜோதி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது எனக்கு தெரியவந்தது. அவர் என்னிடம் இருக்கும் பணத்தையும், சொத்துக்களையும் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது.
எனது அறியாமையை பயன்படுத்தி ரூ. 60 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்து கொண்டார். அவர் மீது கொடுத்த புகார் மீது போலீஸ் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளராக பரஞ்சோதியை அதி்முக தலைமை அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை வந்த டாக்டர் ராணி, பரஞ்சோதி மீது பரபரப்பு புகார்களை சுமத்தி பேட்டி அளித்தார். பரஞ்சோதியை நீக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுத்தார். இருப்பினும் அதிமுக தரப்பிலிருந்து எந்த சத்தத்தையும் காணோம். இந்த நிலையில்தான் அவர் நீதி்மன்றத்தை நாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications