போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பண திருடுவது சென்னையில் அதிகரிப்பு
சென்னை: ஏடிஎம் கார்டுகளின் ரகசிய குறியீடுகளை கண்டறிந்து, போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து பணத்தை திருடும் சம்பவங்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது. இதில் நேற்று 2 போலீசாரும் பணத்தை இழந்துள்ளனர்.
அவசர தேவைகளுக்கு வங்கி கணக்குகளை தானியங்கி இயந்திரம் பணத்தை பெற ஏடிஎம் கார்டுகள் உதவுகின்றன. இதற்காக ஏடிஎம் கார்டுகளில் ரகசிய குறியீடுகள் பதியப்பட்டுள்ளன. இந்த கார்டுகளை தனிநபர் மட்டுமே இயக்கும் வகையில் இரகசிய எண் ஒன்று கொடுக்கப்படுகிறது.
நுகர்வோரின் பணத்தை வெளிநபர் யாரும் திருடிவிட கூடாது என்பதற்காகவே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரகசிய எண்களையும் கண்டறிந்து சில திருடர்கள், கார்டு உரிமையாளரின் பணத்தை திருடிவிடுகின்றனர்.
போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை இழப்போரின் எண்ணிக்கை சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வருகிறது. போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை இழந்ததாக நேற்றுமுன்தினம் வரை 60 பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் 2 பேர் 1 லட்சம் ரூபாய் வரை இழந்ததாக கமிஷனர் சஞ்சய் அரோராவிடம் முறையிட்டனர்.
இதை தவிர நேற்று மட்டும் 2 போலீசார் உட்பட 20 பேர் புகார் அளித்துள்ளனர். அதில் ஒரு போலீஸ்காரர் 10,000 ரூபாயும், மற்றொருவர் 15,000 ரூபாயும் பறி கொடுத்துள்ளார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தவர்கள் ஐசிஐசிஐ, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, கனரா உள்ளிட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தனர்.
சென்னையில் உலா வரும் ஒரு கும்பல், நுகர்வோரின் ஏடிஎம் கார்டுகளின் ரகசிய குறியீடுகளை கண்டறிந்து அவற்றை வெளிநாட்டில் உள்ள ஒரு கும்பலுக்கு அனுப்புகின்றனர். அங்குள்ள திருட்டு கும்பல் அதை பயன்படுத்தி போலி எடிஎம் கார்டு தயாரித்து பணத்தை திருடி விடுகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, இதுபோன்ற திருட்டு சம்பவங்களுக்கு உதவும் சென்னை கும்பலை முதலில் கைது செய்வோம். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உள்ளோம், என்றனர்.












Click it and Unblock the Notifications