டெல்லியில் சோனியாவுடன் கருணாநிதி சந்திப்பு!
சென்னை: திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியைப் பார்ப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி, தனது மனைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் பேரன் ஆதித்யாவுடன் நேற்று டெல்லி சென்றார். இன்று அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது இருவரும் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.
கருணாநிதி நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும், கனிமொழியின் மகன் ஆதித்யாவும் சென்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் கருணாநிதியை டி.ஆர்.பாலு மற்றும் திமுக எம்.பிக்கள் வரவேற்றனர். பிறகு கருணாநிதியும், அவர் குடும்பத்தினரும் லீலா ஹோட்டலுக்கு சென்று தங்கினர்.
இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் லீலா ஹோட்டலுக்கு வந்து கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
பின்னர் கருணாநிதி ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வீட்டுக்குச் சென்றார். இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பிய சோனியா காந்தியிடம் உடல் நிலை விசாரித்த கருணாநிதி, அவருடன் தேசிய, மாநில அளவிலான அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
இன்று மாலை கருணாநிதி டெல்லி திகார் சிறைக்குச் சென்று மகள் கனிமொழியை சந்தித்துப் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications