ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்கி படகை சேதப்படுத்திய இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படைக் காடையர்கள் தாக்கி படகை சேதப்படுத்தி விரட்டியுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் நான்கு பேர் இருந்த படகுடன் தங்களது படகை மோத விட்டனர். இதில் அந்தப் படகு சேதமடைந்தது.
பின்னர் கடுமையாக எச்சரித்து விட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர். படகு சேதமடைந்து அதில் இருந்த நான்கு மீனவர்களும் தடுமாறினர். இதையடுத்து அவர்களை அருகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி தங்களது படகில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.
சமீப காலமாக தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர் இலங்கைப் படையினர். மேலும் இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications