For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காட்டிக் கொடுக்க முயலும் துரோகச் சிந்தனையினர்- பரிதி மீது கருணாநிதி மறைமுகத் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: துரோகச் சிந்தனையினர் கட்சியைக் காட்டி கொடுக்க முயலுகின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல், மேலும் மேலும் தொண்டர்களை திமுகவில் சேர்க்க தீவிரமாக அனைவரும் உழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சமீபத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பை விட்டு விலகிய பரிதி இளம்வழுதி, அந்தப் புதிய பொறுப்புக்கு வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கட்சி தற்போது கருணாநிதியின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை. பல முக்கிய முடிவுகளை அவர் முழு மனதோடு எடுப்பதில்லை. இப்போது கூட வி.பி.சந்திரசேகர் நியமனத்தை அவர் முழு மனதோடு எடுத்திருக்க மாட்டார். மாநிலம் முழுவதும் என்னைப் போல ஆயிரக்கணககான அதிருப்தியாளர்கள் வேதனையில் புழுங்கிக் கொண்டுள்ளனர் என்று கூறியிருந்தார்.

இதற்கு மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. கருணாநிதியின் அறிக்கை விவரம்:

திமுகவுக்கு தற்போது 62 வயதாகிறது. ஜனநாயக இயக்கமான நமது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது. ஓய்வு நேரத்தைக் குறுக்கி, உழைக்கும் நேரத்தை விரிவாக்கி, உறுப்பினர் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். திமுகவை நான் உங்கள் அசைவிலே, நடையிலே, பேச்சிலே, மூச்சிலே தான் காணுகிறேன்.

என்னென்ன விமர்சனங்கள்? எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? பேசுகிறார்கள்? அப்பப்பா? வீழ்ந்தது திமுக, இனி எழவே முடியாது என்றெல்லாம் எக்காளமிடுகின்றனர். 1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நடைபெற்ற கொடுமைகளைக் கண்டவர்கள்தானே நாம். அப்போது, திமுகவே அவ்வளவுதான், இனி எழுந்திருக்கவே முடியாது, என்று இதயக் கோட்டை எழுப்பியோர் எத்தனை பேர்?

அவர்களின் கனவுகளையெல்லாம் இடித்து நொறுக்கி விடவில்லையா? இத்தனையும் கொண்ட தீய சக்திகள், பிற்போக்குப் பிறவிகள், திமுக பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசில்லா போது, திமுகவுக்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கட்சியையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.

ஓரம்போகியார் எனும் ஒரு பெரும் கவிஞர் எழுதிய புறப்பாடல் ஒன்றை நினைவுபடுத்திட விரும்புகிறேன். அந்தக் கவிஞர் பெருமான் எழுதிய பாடலில் இரண்டு நாட்டு மன்னர்கள் போரிடுகிறார்கள்.

வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த
ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத்
திரிந்த வாய்வா டிருத்தாத்
தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே!

போர் மூண்டுவிட்ட சமயத்தில் மன்னன் ஒருவன் உடனே களம்புகுமாறு வீரர்களுக்கெல்லாம் செய்தி அனுப்புகிறான். பகை சாய்க்கும் குறியுடன் பல பகுதிகளிலிருந்தும் வீரர்கள் வந்து கூடுகின்றனர். அந்தப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வரும் ஒரு வீரனை மட்டும் புலவர் ஓரம் போகியாரின் விழிகள் வட்டமிடுகின்றன. அவர் உள்ளம் கவர்ந்த அந்த வீரன்; காலாட்படை வீரன்; எதிரிப் படை வீரனை நோக்கிப் பாய்கிறான். பகைவனோ யானை மீது இருந்து போரிடுபவன், இவனோ பூமியின் தோளைத்தான் குதிரையின் முதுகெனக் கருதிக் கொண்டு வாள் சுழற்றுகிறான்.

அந்தப் போர்க்களத்தில் அவன் வாளை நிமிர்த்திக் கொள்ள உடனடியாக எந்த வசதியும் கிட்டவில்லை. எதிரியோ எழுந்து விட்டான். பளிச்செனத் தோன்றியது ஒரு அரிய யோசனை. கோணிய வாளை எடுத்தான். அங்கே தன்னால் வீழ்த்தப் பட்டுக் கிடந்த யானையின் மத்தகத்திலே அந்த வாளை அழுத்தி நிமிர்த்துக் கொள்கிறானாம். இதைக் கண்டதும் எதிரிப்படையின் வீரன் எடுக்கிறான் ஓட்டம்.

ஓரம்போகியார் சித்திரிக்கும் அந்தத் திறன் மிகு தீரனாகத்தான் நமது கட்சியை, நான் கருதுகிறேன். நமது விரோதிகள் ரதங்கள் ஏறி வந்து நம்மைத் தாக்க முயலலாம். நமக்கெதிரான விமர்சனங்கள் யானைகள் மீது ஏறி வந்து நம்மை எதிர்க்கலாம். துரோகிகளோ குதிரைப்படை கொண்டு வந்து நம்மை நிலை குலையச் செய்ய யத்தனிக்கலாம்.

திமுகவோ, கடமையெனும் கட்கம் மேந்தி, கண்ணியம் எனும் கவசம் பூண்டு, கட்டுப்பாடெனும் கேடயம் கொண்டு, தனிமையில் விடப்பட்ட போதிலும், தளரா உறுதியுடனும், ஊக்கத்துடனும் எதிர்ப்புகளைப் புறங்கண்டு வெற்றிப் புன்னகையை ஈட்டிட வேண்டும்.

வெற்றி-வெற்றி, இடையிலே உள்ள ஒரு எழுத்து அகன்றால், இதுவே வெறி என்றாகி விடும். எதிரிகள் அந்த வெறி யோடு செயல்படுகிறார்கள். அவர்களை எதிர் கொண்டு நாம் வெற்றியினைப் பெற்றிட உழைப்போம். ஒற்றுமையோடு உழைப்போம். ஓய்வில்லாமல் உழைப்போம். உறுதியோடு உழைப்போம். கண்மணியாம் நமது கழகத்தை வளர்ப்போம். உறுப்பினர்களை அணி அணியாகச் சேர்ப்போம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK Chief Karunanidhi has slammed the betrayers of the party who are deserting the party in crisis times. He asked the partymen not to bow to these betrayers but work hard to achieve the success in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X