For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2ஜி இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி அல்ல, ரூ.2,645 கோடியே- தணிக்கைத் துறை முன்னாள் டைரக்டர் ஜெனரல்

By Chakra
Google Oneindia Tamil News

RP Singh
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படவில்லை, ரூ. 2,645 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டது என்று கூறியுள்ள தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங்கை இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee-PAC) விசாரிக்க இருந்த நிலையில் அந்தக் குழுவின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியது. இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.

ஆனால், ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான ஆய்வை மேற்கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்த ஆர்.பி.சிங் நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியிருந்தார்.

ஆனால், நிர்பந்தம் செய்யப்பட்டு நஷ்டத்தின் அளவை ரூ. 1.76 லட்சம் கோடியாக உயர்த்திச் சொல்ல வைக்கப்பட்டார் என்ற புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ரூ. 30,000 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு வினோத் ராய், ஆர்.பி.சிங் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கு பொதுகணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி உத்தரவிட்டிருந்தார். அவர்களும் இன்று ஆஜராக இருந்தனர்.

ஆனால் இந்தக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையூறு செய்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

வினோத் ராய் சொல்லும் நஷ்டக் கணக்குடன் ஒத்துப் போகாத ஆர்.பி.சிங்கை வினோத் ராயை வைத்துக் கொண்டு விசாரிப்பது சரியல்ல என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர்.

ஆனால், அவரை விசாரிக்க வேண்டும் என பாஜக, அதிமுக உறுப்பினர்கள் கோரினர். வினோத் ராய், சிங் தவிர சிபிஐ இயக்குனரையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் தம்பிதுரை கோரினார். பாஜக உறுப்பினர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், 2ஜி விற்பனையால் இழப்பு எதுவும் இல்லை என்று கூறிய மத்திய அமைச்சர் கபில்சிபலையும் விசாரிக்க வேண்டும் என்றார்.

ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால், கூட்டத்தில் குழப்பம் ஏற்படவே, கூட்டத்தை ஒத்தி வைப்பதாக முரளி மனோகர் ஜோஷி அறிவித்தார்.

இதற்கிடையே, பொதுக் கணக்கு குழு மற்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் மீண்டும் ஆஜராகி, நஷ்டம் ரூ. 1.76 லட்சம் என்பது எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது குறித்து விளக்கம் தர வினோத் ராய் அவராகவே நேற்று விருப்பம் தெரிவித்தும் குறிப்பிடத்தக்கது.

ராய் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து நாங்கள் நவீன முறையில் கணக்கிட்டு இழப்புத் தொகையை உறுதிப்படுத்தினோம். நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பு ஏற்கனவே ஆஜராகி இழப்பீடு எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன் என்றார்.

இதையடுத்து வினோத் ராயையும் மத்திய துணைத் தலைமைத் தணிக்கையாளர் ரேகா குப்தாவையும் இன்று பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், ஆர்.பி.சிங் விவகாரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டு யாரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை.

கணக்கு தணிக்கை குழுவில் மாற்றம் செய்ய சுங்லு கமிட்டி பரிந்துரை:

இந் நிலையில் மத்திய கணக்கு தணிக்கை குழுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுங்லு கமிட்டி யோசனை தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் குறித்து சிபிஐ, அமலாக்கப் பிரிவு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

மேலும், இந்த முறைகேடுகளை விசாரிக்க, ஓய்வு பெற்ற மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வி.கே.சுங்லு தலைமையிலான கமிட்டியை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார்.

இந்தக் கமிட்டி ஏற்கனவே மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந் நிலையில், பிரதமருக்கு வி.கே.சுங்லு ஒரு ரகசிய கடிதம் எழுதி உள்ளார். அதில், மத்திய கணக்கு தணிக்கை குழு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், மத்திய கணக்கு தணிக்கை குழு, ஒரே நபருடன் இருப்பதால், அது திறமையின்றி செயல்படுகிறது. ஆகவே, 3 பேர் கொண்ட குழுவாக தணிக்கை குழுவை மாற்றி அமைக்க வேண்டும். அந்த 3 பேரில் ஒருவர் ஆடிட்டராக இருக்க வேண்டும்.

மத்திய கணக்கு தணிக்கை குழுவின் கணக்குகளை நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவால் நியமிக்கப்படும் ஆடிட்டரைக் கொண்டு தணிக்கை செய்ய வேண்டும். அப்படி தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்பான விஷயங்களை விரிவாக விவாதிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
The 2G controversy rocked Parliament's Public Accounts Committee (PAC) meeting on Monday with opposition parties demanding that former DG (Audit) RP Singh be summoned and asked why he differs with CAG on the quantum of loss while Congress members opposed the move. With differences persisting, the meeting was adjourned. The meeting scheduled for tomorrow has also been postponed reportedly on as Chhath festival falls on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X