For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாம் கூறிய கருத்துக்களை உதாசீனப்படுத்துவது நாட்டுக்கு உகந்ததல்ல- தங்கபாலு

Google Oneindia Tamil News

சென்னை: உலக நாடுகளே ஒப்புக் கொள்ளப்பட்ட மிகச்சிறந்த விஞ்ஞானி, குறிப்பாக அணுமின் விஞ்ஞானத்தில் வல்லுநர், தன்னலமற்ற தியாகசீலர், நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணிகளாற்றிய தேசபக்தர், தமிழறிஞர் போன்ற பன்முக ஆற்றலும், பண்பும் பெற்ற பேரறிஞர் அப்துல் கலாம். கூடங்குளம் சென்று விஞ்ஞான அடிப்படையில் அங்குள்ள அத்துணை அம்சங்களையும் ஆய்ந்து, அறிந்து, தெளிந்து அறிவித்துள்ள அவரது கருத்துக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். அறுதியிட்டு அவர் கூறிய உறுதியான அக்கருத்தை உதாசீனப்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் பயன்படும் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களது கருத்து அத்திட்ட வரலாற்றில் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

உலக நாடுகளே ஒப்புக் கொள்ளப்பட்ட மிகச்சிறந்த விஞ்ஞானி, குறிப்பாக அணுமின் விஞ்ஞானத்தில் வல்லுநர், தன்னலமற்ற தியாகசீலர், நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணிகளாற்றிய தேசபக்தர், தமிழறிஞர் போன்ற பன்முக ஆற்றலும், பண்பும் பெற்ற பேரறிஞர் அவர். அதற்கும் மேலாக அவர் தமிழர், தமிழ் மக்களுக்காக உழைப்பவர். அவர்களுக்கு பெருமை சேர்ப்பவர்.

நாட்டின் வளர்ச்சித் திட்டத்திற்கு சிறு தடையாக உருவாக்கப்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் தனது முதிர்ந்த விஞ்ஞான அனுபவத்தாலும் பொதுநல உணர்வினாலும் தனிப்பட்ட முயற்சியால் கூடங்குளம் சென்று விஞ்ஞான அடிப்படையில் அங்குள்ள அத்துணை அம்சங்களையும் ஆய்ந்து, அறிந்து, தெளிந்து அறிவித்துள்ள அவரது கருத்துக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

அறுதியிட்டு அவர் கூறிய உறுதியான அக்கருத்தை உதாசீனப்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. இந்தியாவில் இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பான பயன்பாடுகள் உலகமே போற்றும் சாதனையாகும். குறிப்பாக கல்பாக்கம் அணுமின் நிலையமே அதற்கு சிறந்ததோர் சான்றாகும். இந்நாள் வரை எவ்வித பாதிப்பும் எந்த ஒரு இந்திய அணுமின் நிலையத்திற்கும் ஏற்பட்டுவிடவில்லை.

அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளதைப் போல விஞ்ஞானி ஹோமி பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களை பாதிக்கும் என்று நினைத்திருந்தால் இன்றைக்கு 40 ஆண்டுகளாக பாதுகாப்பான 4,700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்க முடியாது.

மருத்துவத்துறையில் கேன்சர் நோயால் அவதிப்படும் மக்களுக்கு ஹீமோ தெரபி அளித்திருக்க முடியாது. விவசாய உற்பத்தியைப் பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும் வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றி இருக்க முடியாது. ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.

இத்தகைய அவரது சிறந்த கருத்து இன்றைக்கு பாதுகாப்பான கூடங்குளம் திட்டத்திற்கு ஓர் உத்தரவாதமாக அமைந்துள்ளது என்பதே உண்மை.

இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2000 மெகாவாட் மின் உற்பத்தியும், இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின்உற்பத்தியும் கூடங்குளத்தில் கிடைக்கப் போகிறது என்பதும், அதில் தமிழகத்திற்கு 50 சதவீதத்திற்கு மேல் மின்சாரம் கிடைக்கும் என்பதும் மிகச்சிறந்த மகிழ்ச்சியான செய்தி.

இத்திட்டம் தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்த கொடை என்றே வரலாற்றில் இடம் பெறும் என்பது நிச்சயம்.

இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் உன்னதமான வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்தான மக்களின் அச்சத்தை மத்திய - மாநில அரசுகள் போக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் நானும், தமிழக அரசு பிரதிநிதிகளும் போராட்டக் குழுவினரோடு அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம்.

அதை ஏற்று மத்திய அரசு சார்பில் 15 பேர் அடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அக்குழு இன்று கூடங்குளத்தில் தனது பணியை தொடங்குகிறது.

இந்நிலையில் போராட்டக் குழுவின் பிரதிநிதி உதயகுமார் மத்திய - மாநில அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள எந்தக் குழுவையும் ஏற்க மாட்டோம் என்றும் மின் உற்பத்தி நிலையத்தை மூடும் வரை போராடுவோம் என்றும் அறிவித்திருப்பது நியாயமல்ல.

எதிர்ப்பாளர்களின் உணர்வை தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சில கட்சித் தலைவர்களின்; போக்கும் முறையானதல்ல. நாட்டின் வளர்ச்சியில் அரசியல் கூடாது என்பது பொது நியதி.

அவ்வழிமுறைப்படி நமது நாடும், எதிர்கால சந்ததியினரும் உலகளாவிய அளவில் தரம் உயர்ந்து சமூகப் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கப் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்குவதற்கு மத, இன, அரசியல் வேறுபாடுகள் மறந்து அனைத்துப் பொது மக்களும், அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று அன்புடன் வேண்டுகிறேன் என்று தங்கபாலு கூறியுள்ளார்.

English summary
Tamil nadu Congress president Thangabalu has thanked Former President Dr. Abdul Kalam's visit to Kudankulam nuclear power plant and hailed his views have cleared the air. He urged the agitation committee and the people of Kudankulam to respect Kalam's words.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X