For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம்னி பஸ்களுக்குப் புதுக் கட்டுப்பாடு- 90 கி.மீ. வேகத்துக்கு மேல் போகத் தடை!

Google Oneindia Tamil News

சென்னை: அதிகரித்து வரும் ஆம்னி பஸ் விபத்துக்களைக் கருத்தில் கொண்டு பல புதிய கட்டுப்பாடுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆம்னி பஸ்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கி வருகின்றன. கடந்த சில மாதங்களில் நடந்த 2 மோசமான விபத்துக்களில் கிட்டத்தட்ட 30 பயணிகள் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து வழக்கறிஞர் காசிநாத பாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில்,

ராணிப்பேட்டை அருகே காவேரிபாக்கத்தில் நடந்த ஆம்னி பஸ் விபத்தில் 23 பேர் உடல் கருகி பலியானார்கள். அதிக வேகமும், படுக்கை வசதி இருந்ததும்தான் அதிக உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. படுக்கை வசதி பஸ்கள் இயக்க தமிழகத்தில் அனுமதியில்லை. புதுவையில் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் இயக்கி வருகிறார்கள். தமிழகத்தில் 686 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில் 310 பஸ்களுக்குதான் பெர்மிட் உள்ளது. கோடை விடுமுறை காலத்தில் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆம்னி பஸ்களின் கட்டணம், வேகம் ஆகியவற்றை கட்டுப்படுத்த கமிட்டி அமைத்து புதிய விதிமுறை உருவாக்க வேண்டும். படுக்கை வசதி பஸ்கள் மற்றும் பெர்மிட் இல்லாத பஸ்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

- ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்றி புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பாக விரைவில் ஒரு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

- தேசிய நெஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆம்னி பஸ்கள் டிசம்பர் 22ம் தேதிக்குள் வாகன கட்டுபாடு கருவியை பொருத்த வேண்டும். அப்படி பொருத்த தவறினால் அந்த ஆம்னி பஸ்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பஸ்களுக்கு கொடுத்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும்.

- தேசிய நெஞ்சாலைகளில் ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் 90 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. அப்படி சென்றால் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும்.

- டிரைவர்கள் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை ஓட்டவும் அனுமதிக்க கூடாது.

- ஆம்னி பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் 3 மாதத்திற்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இந்த உத்தரவு நகலை தமிழகம் முழுவதும் உள்ள மண்டல அதிகாரிகள், ஆர்.டிஓ.க்களுக்கு , மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக, புதுவைப் பதிவு பஸ்கள்

தமிழகத்தில் ஓடும் பெரும்பாலான ஆம்னி பஸ்களை தமிழகத்தில் பதிவு செய்யாமல் பக்கத்து மாநிலங்களான கர்நாடகத்திலும், புதுவையிலும் பதிவு செய்து இங்கு ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், தமிழகத்தில் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பஸ்களுக்கு பதிவு செய்யப்படுவது கிடையாது. அதற்கு அனுமதியும் கிடையாது என்பதே. இதனால்தான் பக்கத்து மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகத்தில் பதிவு செய்து கொண்டு தமிழகத்திற்குள் பஸ்களை ஓட்டி வருகிறார்கள். இதற்கு ஒரு குறிப்பிட்ட வரியையும் கட்டி அரசுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள், மக்களின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.

சமீபத்தில் காவேரிப்பாக்கத்தில் நடந்த ஆம்னி பஸ் விபத்தும் சரி, ஈரோடு அருகே நடந்த விபத்திலும் சரி, இரண்டிலுமே சம்பந்தப்பட்ட வாகனங்கள் படுக்கை வசதியுடன் கூடியவையாகும். காவேரிப் பாக்கம் பஸ் புதுவையில் பதிவு செய்யப்பட்டது. ஈரோட்டில் விபத்தில் சிக்கியது கர்நாடகத்தில் பதிவான பஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madras HC has slapped many do's and don'ts to Omni buses. It has ordered to limit the speed of Omni buses and other hevey vehicles to 90 kmph on National highways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X