For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு சவால் விடுவதா?.. விஜயகாந்த் மீது சரத்குமார் கடும் பாய்ச்சல்!!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை:சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் 29 தொகுதிகளில் வென்ற விஜய்காந்த், கூட்டணியிலிருந்து விலகியதால் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். இந் நிலையில், ஆறு மாத காலத்திற்குள்ளாக கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவை விமர்சித்து வருவதோடல்லாமல் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று இறுமாப்போடு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதல்வர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.

கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரி செய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும்.

தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை. மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மெளனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.

இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் திமுகவினால் தரமுடியவில்லை என்பதையும், பெட்ரோல் விலை உயர்வின்போது மட்டுமின்றி இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் கூட சுய ஆதாய நோக்கில்தான் நடந்து கொண்டார்கள் என்பதையும் நாடே அறியும்.

விலையேற்றத்தை கண்டித்து நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்து ஒரு கட்சித் தலைவர் (விஜய்காந்த்) ஆட்சியைக் கலைத்துவிட்டு ஓராண்டு காலம் கவர்னர் ஆட்சி நடக்கவிட்டு அதன்பிறகு தேர்தல் நடத்தி யார் வெற்றி பெறுவோம் என்று பார்ப்போம் என்று சவால்விட்டு பேசியிருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்து கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி என்று கூறிவந்தவர், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் 29 தொகுதிகளில் அவரது கட்சி வெற்றிபெற முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அக்கூட்டணியிலிருந்து விலகியதால் அவரது கட்சி மிகப்பெரிய தோல்வியடைய நேரிட்டது.

ஆறு மாத காலத்திற்குள்ளாக கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவை விமர்சித்து வருவதோடல்லாமல் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று இறுமாப்போடு கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அதனால் அரசுக்கும், பொது மக்களுக்கும் எத்தகைய சிரமங்கள் ஏற்படும் என்பதை உணராமல் பேசியிருப்பது நியாயமானதாக தோன்றவில்லை.

அருதிப் பெரும்பான்மையோடு வெற்றிபெற்று ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசை கலைக்க வேண்டும் என்பதும் ஜனநாயக மரபுகளுக்கு முரண்பட்டதாகவே அமைந்துள்ளது. இப்படியாக அரசியல் என்றாலே ஆட்சியாளர்களை எதிர்ப்பது அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று செய்திகளில் வரவேண்டும் என்பதற்காகவே அரசியல் நடத்துவது ஆரோக்கியமான ஜனநாயகம் ஆகாது. அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையும், பொறுப்பும் ஆகும் என்றாலும், எதிர்க்க வேண்டும் என்பதற்காக உண்மை நிலையை உணராமலும், பரிசீலிக்காமலும் இருந்துவிடக்கூடாது. ஆரோக்கியமான கருத்துக்களை, பரிந்துரைகளை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசுக்கு எடுத்துரைப்பதே நாகரீக அரசியலாகும். அதைவிடுத்து போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, சவால்கள்விட்டு பேசுவது போன்றவை பிரச்சனைகளுக்கு தீர்வாகாது.

நான் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, முதல்வர் ஜெயலலிதா தற்போது ஏற்பட்டிருக்கும் நிதிச்சுமையை நிச்சயமாக தன் நிர்வாகத்திறமையால் சீர்படுத்துவார் என்றும், அதன் மூலம் தற்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதிச்சுமையையும் இறக்கிவைப்பார் என்றும் திடமாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

English summary
Actor turned politician Sarath Kumar has condemned DMDK chief Vijaykanth for criticizing CM Jayalalithaa over milk price rise
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X