பழைய குற்றாலம் அருவியில் இனி ₹20 கட்டணம்! வனத்துறை புதிய விதிகள்.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
தென்காசி: தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் பல வருடங்களாகவே நீடித்து வந்த இலவசக் குளியல் முறைக்கு வனத்துறை அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் சீசன் முதல் அருவியில் குளிக்க ஒரு நபருக்கு ₹20 கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த அருவியில், முதல்முறையாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் அடையாளமாகவும், தென் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குவது குற்றாலம். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி மற்றும் பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் பல வருடங்களாகவே சுற்றுலா பயணிகள் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் இலவசமாக குளித்து மகிழ்ந்து வந்தனர்.

குறிப்பாக, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்ட பழைய குற்றாலம் அருவி, அதன் இயற்கை எழிலுக்காகவும் நிம்மதியான சூழலுக்காகவும் பலராலும் விரும்பப்படும் இடமாகும். ஆனால் இந்த வருஷம் சீசன் தொடங்க உள்ள நிலையில், பழைய குற்றாலம் அருவி குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 ரூபாய் கட்டணம் வசூல்
கடந்த 6 மாதங்களாக பழைய குற்றாலம் அருவிப் பகுதி வனத்துறையின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, அங்கு பல்வேறு சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இப்போது இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் சீசன் முதல் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணியிடமும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை இலவசமாக இருந்த ஒரு சேவைக்கு திடீரென கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய குற்றாலம் - சுற்றுலா பயணிகள்
சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், அருவிப் பகுதியைப் பாதுகாக்கவும் "வண்ண பூரணி சுற்றுச்சூழல் சுற்றுலாக் குழு" என்ற புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவே இனி பழைய குற்றாலம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் ஒழுங்கு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வாகனக் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த வருடம் வரை தனியார் வாகனங்கள் அருவிக்கு மிக அருகாமையில் வரை சென்று வந்த நிலையில், இனிமேல் வனத்துறை குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
டைம் டேபிள் - நேரம் இதுதான்
அங்கிருந்து அருவிக்குச் செல்வதற்கு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாக் குழு சார்பில் பிரத்யேக Eco-friendly vehicles அதாவது "சுற்றுச்சூழல் நட்பு வாகனங்கள்" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சுற்றுலாப் பயணியின் அடிப்படைச் செலவு அதிகரிக்கிறது.
நேரக் கட்டுப்பாடுகளிலும் கடும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் திறந்திருக்கும். மாலை 5 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
நடுத்தர மக்கள் கவலை
காமராஜர் காலத்தில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட இந்த அருவி, தற்போது வர்த்தக ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
"கட்டணம் வசூலிப்பது நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று சுற்றுலாப் பயணிகள் தரப்பில் கருத்துக்கள் எழுந்துள்ளன. இருந்தாலும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுலாவை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications