லோக்பால் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்- 'லோக்பால் என்ன சிபிஐ போஸ்ட் ஆபிஸா?'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழு தயாரித்த லோக்பால் மசோதா தொடர்பான இறுதி அறிக்கை மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் அபிஷேக் மனு சிங்வி அதை தாக்கல் செய்தார்.

லோக்சபாவில் நிலைக்குழு உறுப்பினர் பினாகி மிஸ்ரா தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையின்படி லோக்பால் மசோதாவுக்கு அரசியல்சட்ட அங்கீகாரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது (இதை அன்னா ஹசாரே எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது)

அரசுத்துறைகளின் குரூப் ஏ மற்றும் பி பிரிவு மூத்த அதிகாரிகள் லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். குரூப் சி ஊழியர்கள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் (Central Vigilance Commissioner) கீழ் கொண்டு வரப்படுவர். (குரூப் ஏ முதல் குரூப் டி வரை எல்லா ஊழியர்களும் லோக்பால் சட்டத்துக்குள்ளேயே கொண்டு வரப்படும் என ஹசாரே கோருகிறார்)

பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த முடிவை நாடாளுமன்றத்திடம் விட்டுவிடுவதாக அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சிபிஐயின் கட்டுப்பாடு லோக்பாலுக்கு வெளியே இருக்க வேண்டும் என்றும் அந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய மசோதாவில், சிபிஐயில் ஊழல் நடந்தால் அது குறித்து ஆரம்பகட்ட விசாரணை மட்டும் நடத்த லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

பொதுவாக ஊழல் வழக்கில் முதலில் சிபிஐ விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன் வைக்கும். இது தான் இப்போதைய சிபிஐ நடைமுறை.

புதிய லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ளபடி பார்த்தால், சிபிஐயில் ஊழல் நடந்தால், அது குறித்து முதலில் லோக்பால் அமைப்பு ஆரம்பகட்ட விசாரணை நடத்திவிட்டு, குற்றம் உறுதியானால், அதை சிபிஐ வசம் தரும். இதையடுத்து சிபிஐ தனது விசாரணையை நடத்திவிட்டு, லோக்பாலுக்கு தனது அறிக்கையைத் தரும். இதன் அடிப்படையில், நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு எடுத்துச் செல்லப்படும்.

(ஆனால், இதை ஏமாற்று வேலை என்கிறது ஹசாரேவின் குழு. சிபிஐக்கு ஒரு போஸ்ட் ஆபிஸ் மாதிரி லோக்பால் அமைப்பை மாற்ற நினைக்கிறார்கள். சிபிஐ சொல்வதை கோர்ட்டில் போய் கொடுக்க லோக்பால் எதற்கு என்கின்றனர்)

லோக்பால் வரம்புக்குள் தங்களை சேர்க்க சிபிஐ ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னா குழு கோருவதும் சொல்வதும் என்ன?:

30,000 ஊழியர்கள் கொண்ட லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் நாடு முழுவதும் உள்ள 60 லட்சம் அரசு ஊழியர்களை கண்காணிப்பார்கள், ஊழல் நடந்தால் தடுப்பார்கள்.

குரூப் சி ஊழியர்கள் ஊழல் செய்யாமல் இருப்பதை மத்திய கண்காணிப்பு ஆணையம் உறுதி செய்யும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் இருப்பதே 250 ஊழியர்கள் தான். இவர்கள் எப்படி 55 லட்சம் குரூப் சி ஊழியர்களை கண்காணிப்பார்கள்?..

அதே போல சிபிஐ அமைப்பையே லோக்பாலுக்குள் கொண்டு வந்தால் தான் அதில் ஊழல் நடக்காமல் தடுக்க முடியும். அந்த அமைப்பை அரசின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தால், அதில் அரசின் தலையீட்டை எப்படி தடுக்க முடியும்..?

இது தான் அன்னா குழுவின் கருத்தாகும்.

தனது இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ள அன்னா ஹசாரே டிசம்பர் 27ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தொற்றுமை இல்லை

இதற்கிடையே 30 பேர் கொண்ட நிலைக்குழுவில் லோக்பால் மசோதா தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 30 பேரில் 16 பேரின் அரசின் பரிந்துரைகளுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்தப் பரிந்துரைகளில் தங்களுக்கு ஒப்புதல் இல்லை என்று அவர்கள் குறிப்பை இணைத்துள்ளனர்.

இவர்களில் 3 பேர் காங்கிரஸார் என்பது குறிப்பிடத்தக்கது. 57 லட்சம் இளநிலை அரசு அதிகாரிகளை இந்த லோக்பால் வரம்பிலிருந்து விலக்கி வைப்பது என்ற முடிவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று இந்த 16 பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்னா ஹசாரே குழுவினரும் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இளநிலை அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் சேர்க்காவிட்டால் ஊழல் ஒழிப்பு என்பது சாத்தியமில்லாதது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள்தான் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள். ஓட்டுநர் உரிமம் வழங்குவது, பாஸ்போர்ட்களை விநியோகிப்பது உள்ளிட்ட மக்களின் அடிப்படை பணிகளை இவர்கள்தான் நேரடியாக கவனிக்கிறார்கள். இங்குதான் பெருமளவில் ஊழல் நடமாடி வருகிறது. எனவே இவர்களைச் சேர்க்காமல் எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்று அன்னா குழு கேட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தை சேர்க்க வாய்ப்பு

இதற்கிடையே, அன்னா குழுவை சமாளிக்கும் வகையில் சில பல நிபந்தனைகளுடன் லோக்பால் வரம்புக்குள் பிரதமர் அலுவலகத்தை மட்டும் சேர்க்க அரசு முன்வரலாம் என்று ஒருதகவல் கூறுகிறது.

அதேசமயம், பிரதமர் பதவியை எக்காரணம் கொண்டும் அரசு லோக்பால் வரம்புக்குள் கொண்டு வராது என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+