பக்கத்து மாநிலத்திற்குத் தமிழர்கள் போக முடியவில்லையே என்பதால்தான் உண்ணாவிரதப் போராட்டம்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருமைப்பாட்டைப் போற்றிப் பாதுகாக்க அன்றாடம் பாடுபட்டு வரும் நமது இந்தியாவில், நமது தமிழர்கள், நமக்கு பக்கத்திலே உள்ள அண்டை மாநிலத்திற்குள் செல்ல முடியாத நிலையில் ஒருசில சமூக விரோதிகளால் தடுக்கப்படுகின்ற நிலையை மத்திய அரசும், கேரள அரசும் கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் விபரீத நிலை இருக்கிறதே என்பதற்காக, அவர்களது உடனடியான கவனத்தைக் கவரும் வகையிலேதான் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தை அறிவித்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 9ம் தேதியன்று தி.மு.க. செயற்குழு கூடி, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையிலே தமிழகத்தின் உறுதிப்பாட்டை நிலைநாட்டி, மத்திய அரசின் உடனடி கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள மாநகரங்களிலும், நகரங்களிலும், 12-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதென்றும், அதற்கடுத்து முல்லைப் பெரியாறு அணையினால் பாசன வசதி பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் 15-ம் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

சென்னையில், அண்ணா அறிவாலயத்தில், வடசென்னை, தென்சென்னை மாவட்டங்களின் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதத்தை நமது கழகப் பொதுச் செயலாளர் அன்பழகன் துவக்கி வைக்கவும், அன்று மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றவும் இருக்கிறேன்.

காலை 8 மணி முதலே உண்ணாவிரதத்தில் உன்னோடு அமர்ந்திருக்க எனக்கு விருப்பம்தான். ஆனால் தொண்டர்கள் எனது வயது கருதி, முழு நாளும் உண்ணாவிரதம் இருப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று என்னைக் கேட்காமலேயே அவர்களாகவே முடிவு செய்திருக்கிறார்கள். என் உடல் உண்ணாவிரதத்திற்கு ஒத்துழைப்பு தருகிறதோ இல்லையோ, என் உள்ளம் எல்லாம் உண்ணாவிரதத்திலேதான் ஊன்றி நிலைத்திருக்கும் என்பதை நீயும் அறிவாய், நானும் அறிவேன்.

கழகத்தின் சார்பில் எத்தனையோ அறப்போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். இலங்கைத் தமிழர்களுக்காக, காவேரி பிரச்சினைக்காக, மொழிப் பிரச்சினைக்காக என்று எத்தனையோ முறை உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம், கைது என்றெல்லாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்; வெற்றி கண்டிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒருமைப்பாட்டைப் போற்றிப் பாதுகாக்க அன்றாடம் பாடுபட்டு வரும் நமது இந்தியாவில், நமது தமிழர்கள், நமக்கு பக்கத்திலே உள்ள அண்டை மாநிலத்திற்குள் செல்ல முடியாத நிலையில் ஒருசில சமூக விரோதிகளால் தடுக்கப்படுகின்ற நிலையை மத்திய அரசும், கேரள அரசும் கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் விபரீத நிலை இருக்கிறதே என்பதற்காக, அவர்களது உடனடியான கவனத்தைக் கவரும் வகையிலேதான் இந்த அறப்போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் தமிழகத்திலே பல முக்கிய பொறுப்புக்களிலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே பலர் உயர்நிலை அதிகாரிகளாக இருக்கிறார்கள். ஏன், கேரள மாநிலத்தின் இன்றைய தலைமைச் செயலாளராக உள்ள பிரபாகரே தமிழகத்தைச் சேர்ந்தவர் தான்.

நான் கடந்த ஆண்டு திருவனந்தபுரம் சென்றிருந்த போது தங்கும் விடுதிக்கே வந்து என்னைச் சந்தித்தவர் தான். எனவே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல பாசப் பிணைப்போடு பழகிக் கொண்டிருக்கும் இரு மாநிலத்தவரிடையே பேத உணர்வு வந்துவிடக் கூடாதல்லவா?

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று அளித்த தீர்ப்பில், அணை பலமிழந்துவிட்டது என்ற கேரளாவின் கூற்றிற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை; வல்லுநர் குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாடு 142 அடிவரையில் நீரை தேக்கிக் கொள்ளலாம் - மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மத்திய நீர்க் குழுமத்திற்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் செய்து முடித்தவுடன், வல்லுநர் குழு அணையை ஆய்வு செய்த பின்னர் உச்சமட்ட அளவான 152 அடிவரையில் தமிழ்நாடு நீரை தேக்கி வைக்கலாம்'' என்று கூறியது.

ஆனால் இந்தத் தீர்ப்பினை அப்போதே மதிக்காமல் கேரள அரசு அதற்கடுத்த 16-வது நாளில், நீர்ப்பாசன மற்றும் நீர்பாதுகாப்பு சட்டத்திற்குத் திருத்தங்களை மேற்கொண்டு, 18.3.2006 அன்று முதல் திருத்திய சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து, பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக நிர்ணயம் செய்துள்ளது.

உச்சநீதிமன்றம் 10-11-2009 அன்று ஐந்து பேர் கொண்ட அதிகாரமுள்ள குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இக்குழுவிற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைவராக உள்ளார். அவருக்கு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல கேள்விகளை கேட்டிருந்தேன். இன்றளவும் அந்தக் கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்கவில்லை.

உச்சநீதிமன்றம் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் மத்திய அரசும், கேரள அரசும் அங்கேயுள்ள மக்களும் சிந்திக்க வேண்டுமென்பதற்காகவும், நமது கோரிக்கைகளான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரையில், மத்திய பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் விடவேண்டும் - அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டுமென்று 2006ல் உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஆகியவற்றை வலியுறுத்தியும் தி.மு.க. இந்த அறப்போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

கழகம் அறிவிக்கும் அறப் போராட்டங்களையெல்லாம் வெற்றியாக மாற்றித் தரும் கழக தொண்டர்கள் இந்த முறையும் இந்த போராட்டங்களை வெற்றியாக்கிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உள்ளது. இந்த அறப்போர்; அறவழி - அமைதி வழி - அதுவே அண்ணா வழி என்பதை மறந்து விடாதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+