For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணை ஆய்வுக்கு வந்த மத்திய குழுவிடம் திமிராகப் பேசிய கேரள என்ஜீனியர்கள்!

Google Oneindia Tamil News

தேக்கடி: முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்காக வந்த தொழில்நுட்பக் குழுவினரிடம் திமிராகப் பேசிய வாக்குவாதம் செய்த கேரள என்ஜீனியர்கள், பின்னர் ஆய்வைப் புறக்கணிப்பதாக செல்போன் மூலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கேரளத்தின் இந்த செயலுக்கு மத்திய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு கடும் கண்டனம் தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுமாறு கேரளாவை அது அறிவுறுத்தியது. தனது ஆய்வையும் தொடர்ந்து மேற்கொண்டது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முல்லைப்பெரியாறு அணையில் 2 கட்டங்களாக ஆய்வு செய்தனர். அப்போது அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண் படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தொழில் நுட்ப குழுவில் இடம் பெற்று உள்ள வல்லுநர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக இடுக்கி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் முதலில் இடுக்கி அணை மற்றும் அதன் அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப குழுவினர் நேற்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய காலை 9.30 மணியளவில் தேக்கடி படகு துறைக்கு வந்தனர். பின்னர் தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றனர்.

அவர்களுடன் தமிழக பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எம்.சம்பத்குமார், உதவி பொறியாளர் பழனிச்சாமி, கேரள மாநில முல்லைப் பெரியாறு செல் தலைவர் பொறியாளர் எம்.கே.பரமேஸ்வரன் நாயர், கேரள அணை பாதுகாப்பு துணை பொறியாளர் லத்திகா, டோமி ஜார்ஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

நிபுணர் குழுவினர் மற்றும் தமிழக, கேரளப் பொறியாளர்கள் குழு அணையின் பின்பகுதியில் உள்ள கேலரிக்கு சென்று அடிப்பகுதியை பார்வையிட்டனர். அடிக்கடி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையில் 7 துளைகள் போட்டு ஆய்வு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளையும் அப்போது பார்வையிட்டனர்.

அணையில் துளைகள் இடும் பகுதிகளை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, கேரள பொறியாளர் லத்திகா அணையில் வேறு சில இடங்களையும் மற்றும், தாங்கள் குறிப்பிடும் பகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை தொழில்நுட்பக் குழுவினர் ஏற்கவில்லை.

இதையடுத்து பொறியாளர் லத்திகா நிருபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேட்டி அளித்தார். அப்போது அவர், "தொழில் நுட்ப குழுவினர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாங்கள் என்ன சொன்னாலும் அவற்றை கேட்க மறுக்கின்றனர். அணைப்பகுதிகளில் நாங்கள் பார்வையிட சொல்லும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மறுக்கின்றனர். அதனால் நாங்கள் இந்த ஆய்வை புறக்கணிக்கிறோம்'' என்று கூறியதாக தெரிகிறது.

இதைக் கேட்ட தொழில் நுட்ப குழுவினர் அதிருப்தி அடைந்தனர். கேரள அதிகாரிகளை அழைத்து நீங்கள் இதுபோல் செயல்படக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுங்கள் என்று கண்டனம் தெரிவித்தனர். அதற்கு கேரள அதிகாரிகள், இந்த ஆய்வில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதனால் ஆய்வை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறினார்கள். இதனால் லேசாக வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மத்திய குழுவினர் ஒரு சார்பாக செயல்படுவதாகவும் கேரள அதிகாரிகள் குற்றம் சாட்டியதால் ஆய்வு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கேரளத்தினரின் இந்த செயலைப் பொருட்படுத்தாமல் தொழில்நுட்பக் குழுவினர் அணையை முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர் மாலையில், தமிழக மதகு பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். மாலை ஆறரை மணியளவில் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடி திரும்பினர். அதன்பிறகு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கேரள-தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொழில் நுட்ப குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இன்று முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு செய்யும் தொழில்நுட்பக் குழுவினர் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து வைகை அணையைப் பார்வையிடுகின்றனர். பின்னர் அவர்கள் மதுரை செல்கிறார்கள்.

English summary
Kerala PWD engineers indulged in heated arguement with 2 member central team yesterday while the team inspected the Mullaiperiyar dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X