For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'நாரதர் வேலை' பார்க்கிறது பாஜக: காங்கிரஸ் கடும் தாக்கு!

Google Oneindia Tamil News

Abhishek Manu Singhvi
டெல்லி: லோக்பால் அமைவதை பாஜக விரும்புகிறதா, இல்லையா என்பதை அக்கட்சி நேரடியாக சொல்ல வேண்டும். அக்கட்சியின் தலைவர் அருண் ஜேட்லி, நாரதர் போல செயல்படுகிறார். லோக்பால் அமைப்பில் இட ஒதுக்கீடு என்று எதுவும் இல்லை, அது பிரதிநிதித்துவம் என்று காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் நடந்த லோக்பால் மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சிங்வி பேசுகையில், லோக்பால் மசோதா விவகாரத்தில் எங்களது கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் எங்களை எதிர்ப்பது போலவும் பாஜகவின் கருத்தை ஆதரிப்பது போலவும் சித்தரிக்க அருண் ஜேட்லி முயல்கிறார்.

இதன் மூலம் நாரதர் போல செயல்பட அருண் ஜேட்லி முயல்கிறார். லோக்பாலின் சுயாட்சி உரிமைகள் குறித்த விவரங்களை அவர் வேண்டுமென்றே மறைத்துப் பேசுகிறார். அதுகுறித்து அவர் பேச விரும்பவில்லை என்று தெரிகிறது.

அரசியல் சாசனத்தின் 253வது பிரிவு தேசிய நலனுக்கு சாதகமானது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஒட்டுமொத்த நாட்டுக்கும் தேவைப்படும் சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது என்பதை இந்த சட்டப் பிரிவு கூறுகிறது.

ஆனால் லோக்பாலுக்கு அரசியல் சாசன அந்தஸ்து கிடைப்பதை பாஜக விரும்பவில்லை. நாட்டின் குடியாட்சிக்கு லோக்பால் இடையூறாக இருக்கும் என்று பாஜக தரப்பினர் கூறுவதில் உண்மை இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் உறுதியுடன் செயல்பட்டது. மாற்றம் குறித்து நாங்கள் மட்டுமே சிந்தித்தோம். வித்தியாசமான முறையில் சிந்தித்து மாற்றத்தை ஏற்படுத்த முயன்று வந்தோம். மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாங்களே முன்னோடியாக உள்ளோம்.

லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது என்கிறார் அருண் ஜேட்லி. உண்மையில் லோக்பாலில் இட ஒதுக்கீடே கிடையாது, பிரதிநிதித்துவம்தான் உள்ளது. பன்முகம் கொண்ட இந்தியாவின் அனைத்துச் சமுதாயத்தினரையும் உள்ளடக்கவே இந்த பிரதிநிதித்துவம். இதை வேண்டாம் என்று சொல்வது நியாயமற்றது. இதை பாஜகவால் புரிந்து கொள்ள முடியாமல் போனது வியப்பாக உள்ளது.

சிபிஐ குறித்து கேலி செய்ய வேண்டாம் என்று பாஜகவை கேட்டுக கொள்கிறேன். சிபிஐயையோ அல்லது சிவிசியையோ அழிக்க லோக்பால் முயலாது. மாறாக இவை மூன்றும் ஒன்றுக்கொன்று அனுசரித்து, ஒத்துழைத்து நடந்து கொள்ளும்.

தான் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாத தேசிய ஜனநாயகக் கூட்டணி நாங்கள் மட்டும் அதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறது.

லோக்பாலை அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஜேட்லி கூறுகிறார். சிஏஜியும், தலைமை தேர்தல் ஆணையமும் கூட ஒரு வகையில், அரசு நிர்வாகத்தின் கீழ்தான் வருகின்றன. இதனால் அவை இரண்டும் அரசு அமைப்புகள் என பாஜக கூறுமா? அப்படித்தான் லோக்பாலும்.

லோக்பாலை ஆதரிப்பது போல பேசிக் கொண்டு அதை பாஜக எதிர்க்கிறது. இதனால் லோக்பாலை பாஜக ஆதரிக்கிறதா இல்லையா என்பதை முதலில் தெளிவாக சொல்ல வேண்டும் என்றார் சிங்வி.

English summary
Congress MP Abhishek Manu Singhvi on Thursday appealed to the BJP to support the Lokpal Bill while questioning its commitment for a strong anti-corruption body. Replying to the statements made by Leader of Opposition Arun Jaitley in Rajya Sabha, Singhvi said the BJP should clarify its stand on the Bill. "Jaitley chose to hide the points of autonomy in Lokpal," said Singhvi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X