உங்க பணத்தை சாப்பிடும் பூதம்.. விட்டா மொத்தமா முடிச்சிடும்! வார்னிங் கொடுத்த ராபர்ட் கியோசாகி
உலகளவில் பிரபலமான முதலீட்டு நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி மீண்டும் உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். உலகப் பொருளாதாரம் 2026-ம் ஆண்டில் பெரும் சரிவைச் சந்திக்கும் என்று அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சரிவுக்கு தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாகவும், தயாராக இல்லாதவர்களுக்கு கெட்ட செய்தியாகவும் அமையும் என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார். இதை தொடர்ந்து இன்று வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களில் சேமிப்பை பாதுகாக்க சரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என்ற முக்கியமான அறிவுரையை மக்களுக்கு அளித்துள்ளார்.

பணவீக்கம் உங்கள் பணத்தை எப்படி திருடும்?
ராபர்ட் கியோசாகி தனது பதிவில் பணவீக்கத்தின் பாதிப்புகளை இரண்டு முக்கிய காரணங்கள் வாயிலாக விளக்கியுள்ளார். முதலாவதாக, ஈரான் போர் தொடரும் வரை எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருக்கும். இது பொருட்களின் விலையை உயர்த்தி, உங்கள் பணத்தின் வாங்கும் சக்தியை குறைக்கும் என்று அவர் கூறுகிறார்.
அதாவது இன்று உங்கள் கையில் இருக்கும் 100 ரூபாய்க்கு 5 கிலோ சர்க்கரை வாங்க முடியும் என்றால் பணவீக்கத்தின் பாதிப்பால் நாளை 4 கிலோ மட்டுமே வாங்க முடியும். இதை தான் purchasing power குறைவதாக ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
இரண்டாவதாக, உலக நாடுகளின் கடன் சுமை அதிகரிக்கும் போது அரசுகள் அதிக அளவில் பணத்தை அச்சிடும். இது கடன் சுமையை குறைக்க உருவாக்கும் "போலி பணம்" என்பதால், உண்மையான பணத்தின் மதிப்பை குறைத்து, மக்களின் செல்வத்தை மெல்ல மெல்ல திருடும் என்று அவர் எச்சரிக்கிறார். இந்த இரண்டு காரணங்களும் சேர்ந்து சாதாரண குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
உங்கள் குடும்பத்தையும் பணத்தையும் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க கியோசாகி மக்களுக்கு தெளிவான வழியைக் காட்டியுள்ளார். "உண்மையான சொத்தில் முதலீடு செய்யுங்கள்" என்று அவர் அறிவுறுத்துகிறார். அதாவது பணவீக்கம் மூலம் அனைத்து சொத்துக்களின் மதிப்பு குறைந்தாலும், தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எதிரியம் ஆகியவை உண்மையான சொத்துக்களில் முதலீடு செய்யும் போது பணவீக்க பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என கூறுகிறார்.
இந்த சொத்துக்கள் பொருளாதார நெருக்கடி காலங்களில் விலை உயரும். அதே நேரத்தில், கடனை அடைக்க அரசுகளால் அச்சிடப்படும் போலி பணம் மக்களின் செல்வத்தை திருடும் என்று அவர் விளக்குகிறார். எனவே, உங்கள் குடும்பத்தையும் உங்கள் பணத்தையும் பாதுகாக்க இந்த உண்மையான சொத்துக்களில் முதலீடு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராபர்ட் கியோசாகி மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். "என்னால் வாங்க முடியாது" என்று சொல்வது ஏழையின் வார்த்தை என்று அவர் கூறுகிறார். அதற்கு பதிலாக, "எப்படி வாங்க முடியும்?" என்று கேட்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். இது பணக்காரரின் மனநிலை என்று அவர் விளக்குகிறார். இந்த மனநிலை மாற்றம் மக்களை சரியான முதலீட்டு பாதையில் கொண்டு செல்லும் என்றும் நம்புகிறார்.
ராபர்ட் கியோசாகி-யின் இந்த எச்சரிக்கை தமிழக மக்களுக்கு மிக முக்கியமான செய்தியாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் நமது வழக்கத்தில் இருக்கும் முக்கியமான முதலீட்டு பழக்கம் என்றாலும், இதை எப்படி கையாள வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டும்.
முக்கியமாக ராபர்ட் கியோசாகி சொல்லிவிட்டார் என மொத்த பணத்தையும் கொண்டுபோய் தங்கம், வெள்ளி, பிட்காயின் போன்ற சொத்துக்களின் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீட்டு போர்ட்போலியோவில் பாதுகாப்பான சொத்துக்கள், ரிஸ்க் கொண்ட சொத்துக்கள் என இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். இதில் பாதுகாப்பான சொத்து பிரிவில் தங்கம், வெள்ளி போன்றவற்றை 15-20 சதவீதம் மட்டுமே வைக்கவும். மீதமுள்ள 30 சதவீதத்தை பத்திரங்கள், வைப்பு நிதி, கம்பெனி எப்டி, பிபிஎப், போஸ்ட் ஆபீஸ் திட்டம் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் கலவையை உருவாக்குங்கள்.
எஞ்சியுள்ள 50 சதவீத முதலீட்டு தொகையை ரிஸ்க் எடுக்கும் முதலீடுகளில் செய்யலாம் உதாரணமாக பங்குச்சந்தை (லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப், ஈடிஎப், மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றை அடக்கிய கலவையை உருவாக்கலாம்). இத்தகை போர்ட்போலியோ உங்களுக்கு நீண்ட காலத்தில் நிலையான லாபத்தை கட்டாயம் தரும்.
தேவைப்படும் பட்சத்தில் சந்தையின் நிலைக்கு ஏற்ப முதலீட்டு அளவை 60:40, 30:70, 10:90 என மறுசீரமைப்பு செய்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications