கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு
டெல்லி: இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்தியாவில் தான் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. மேலும், இது தொடர்பாக விரிவான ஒரு விளக்க அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மக்கள் ஏற்கெனவே திணறி வரும் சூழலில், இன்று உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை மேலும் 29 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 7-ம் தேதி 60 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் விலை ஏறியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை மொத்தம் 89 ரூபாய் எகிறியுள்ளது பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

மத்திய அரசு
இந்த விலை உயர்வு குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், "மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து பாதிப்புகளால் சர்வதேச அளவில் எல்பிஜி விலை அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது.
இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. சவூதி ஒப்பந்த விலை கடந்த பிப்ரவரியில் ஒரு டன்னுக்கு 542.5 டாலராக இருந்தது, ஜூன் மாதத்தில் 46 சதவீதம் உயர்ந்து 790 டாலராக எகிறியுள்ளது. இதனால், ஒரு சிலிண்டரை இந்தியாவிற்குள் விநியோகம் செய்வதற்கான அடக்க விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது.
விலை குறைவு
ஒரு சிலிண்டரின் உண்மையான செலவு 1,600 ரூபாயாக இருந்தாலும், சாமானிய மக்களுக்கு அதை விட குறைவான விலையிலேயே கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள சுமார் 700 ரூபாய் நஷ்டத்தை அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுமே ஏற்று கொள்கின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்த நஷ்டம் 60,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 30,000 கோடி ரூபாயை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு இழப்பீடாக வழங்கியுள்ளது" என்று அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும், 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் உள்ள 10.58 கோடி பயனாளிகளுக்கு 300 ரூபாய் மானியம் தொடர்வதால், அவர்கள் வெறும் 642 ரூபாய்மட்டுமே செலுத்துகிறார்கள். இது சர்வதேச விலையை விட 60% குறைவாகும். மேலும், இந்தியாவில் சமையல் கேஸ் விலை பிற நாடுகளை விடக் குறைவுதான் என்பதை நிரூபிக்க மத்திய அரசு ஒரு ஒப்பீட்டுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் மற்ற அண்டை நாடுகளை விட இந்தியாவில் கேஸ் விலை குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை
- இந்தியா (உஜ்வாலா திட்டம்): ரூ. 642, இதர நுகர்வோருக்கு ரூ. 942
- பாகிஸ்தான்: ரூ. 1,046
- நேபாளம்: ரூ. 1,207
- வங்கதேசம்: ரூ. 1,225
- இலங்கை: ரூ. 1,241
மத்திய அரசு விளக்கம்
வளர்ந்த நாடுகளான அமெரிக்காவில் ஒரு சிலிண்டர் விலை ரூ.1,755ஆகவும், ஆஸ்திரேலியாவில் ரூ.1,765ஆகவும், கனடாவில் ரூ.2,411ஆகவும் உள்ள நிலையில், இந்தியர்கள் மிகக் குறைவான விலையையே தருவதாக அரசு தெரிவிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்கா, கனடா, அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியை விரிவுபடுத்தி, உள்நாட்டு உற்பத்தியை 32 டிஎம்டியிலிருந்து 52 டிஎம்டியாக (60% மேல்) உயர்த்தி, தட்டுப்பாடின்றி கேஸ் விநியோகத்தை அரசு உறுதி செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications