பாட்டியை பார்க்க சென்றவரை சிஐஏ உளவாளி என்று தூக்கு தண்டனை விதித்த ஈரான்: யு.எஸ். கண்டனம்
வாஷிங்டன்: அமெரிக்க-ஈரானியரான முன்னாள் கடற்படை வீரர் அமிர் மிர்சாய் ஹெக்மாட்டி என்பவர் சிஐஏ உளவாளியாக செயல்பட்டதாகக் கூறி அவருக்கு ஈரான் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹெக்மாட்டி சிஐஏ உள்வாளியே இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் ஈரானியப் பெற்றோருக்கு பிறந்தவர் முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் அமிர் மிர்சாய் ஹெக்மாட்டி(28). அவர் ஈரானில் சிஐஏ உளவாளியாக செயல்பட்டதாகக் கூறி தெஹ்ரான் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. அதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹெக்மாட்டி சிஐஏ உளவாளியே இல்லை என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் டாமி வீட்டர் கூறியதாவது,
ஹெக்மாட்டிக்கு ஈரானிய நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது என்பதை அந்நாட்டு செய்தித் தாள்களில் படித்து தெரிந்து கொண்டோம். அது உண்மை என்றால் இந்த தீர்ப்பை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்காக ஈரானிய அரசுக்கு எங்கள் கண்டனத்தை தெரியப்படுத்துவோம்.
மக்களை உளவாளிகள் என்று குற்றம்சாட்டுவது, அவர்களை வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவது, அரசியல் காரணங்களுக்காக அப்பாவி அமெரிக்கர்களை கைது செய்வது ஈரானுக்கு ஒன்றும் புதிதன்று என்றார்.
இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த வழக்கு விசாரணை ரகசியமாக நடந்துள்ளது. ஹெக்மாட்டி ஏதாவது வாக்குமூலம் கொடுத்திருந்தால் அது அவரை வற்புறுத்தி வாங்கப்பட்டதாகும். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என்றார்.
ஈரானில் உள்ள பாட்டியைப் பார்க்கத் தான் ஹெக்மாட்டி அங்கு சென்றார். சென்ற இடத்தில் அவரை சிஐஏ உளவாளி என்று குற்றம்சாட்டி தூக்கு தண்டனை விதித்துள்ளனர் என்று அமெரிக்காவில் உள்ள ஹெக்மாட்டி குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
