சாமி சன்னதியில் அனைவரும் ஒன்றுதான்-திருப்பதி தேவஸ்தானம்!
திருமலை: திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி.,க்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசித்து அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி கோவிலில் விஐபிகளுக்கு ராஜ மரியாதை தரப்படுகிறது. இதனால் மற்ற பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியன்று திருமலைக்கு வந்த வி.ஐ.பி.,க்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் விஐபிக்கள் ஏமாற்றமடைந்தாலும், பக்தர்கள் தரப்பில் இதற்கு அமோக வரவேற்பு இருந்தது.
இப்படிப்பட்ட முக்கிய நாட்களில் விஐபிகளுக்கு தனி முக்கியத்துவம் தரக் கூடாது. வேண்டும் என்றால், கூட்டம் இல்லாத நாட்களில் வி.ஐ.பி.,களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்றும் பெரும்பாலான பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.
அனைவரும் ஒன்றுதான்
இந்நிலையில், திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ கூறியதாவது,
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் தரிசனம் செய்ய வந்திருந்த மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள், வி.ஐ.பி.,க்கள் போன்ற பதவி அந்தஸ்து பெற்றுள்ளவர்களை, மூன்று பிரிவுகளாக பிரித்து வைகுண்டம்-1 வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வி.ஐ.பி.,க்களை கோவிலில் சாமி தரிசனம் செய்யவிடாமல், தொலைதூர தரிசனம் செய்வித்து அனுப்பி விட்டதாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேலும் முக்கிய அதிகாரிகள் பலரும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீது மாநில அரசிடம் புகார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தெய்வ சன்னிதியில் அனைத்து பிரிவு பக்தர்களும் ஒன்று என்ற எண்ணத்துடன், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சாமி தரிசன விஷயத்தில் பிரச்னைகள் ஏற்பட்டிருக்கலாம்.
ரத்து செய்ய முடிவு
யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. சில நேரங்களில் சிறு தவறுகள் நடக்கின்றன. இந்த அனுபவத்தை கவனத்தில் கொண்டு, இனி எதிர்காலத்தில் தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அவர் தெரிவித்தார். மேலும், திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி.,க்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டுமென முடிவு செய்துள்ளேன்.
இதுகுறித்து, தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசித்து அதற்கான முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு பாபிராஜூ கூறினார். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று, 4,700 வி.ஐ.பி., டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஏராளமானோர் தேவஸ்தான நிர்வாகம் மீது பக்தர்கள் புகார் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதை செய்யுங்க முதல்ல, புண்ணியமாப் போகும்...












Click it and Unblock the Notifications