பசுபதி பாண்டியன்: நெல்லையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு-பஸ்கள் மீது கல்வீச்சு, கடைகளுக்குத் தீவைப்பு
நெல்லை: தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் செவ்வாய்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன, கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் (52), இவர் தேவேந்திர குல கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இவர் மீது 18க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. செவ்வாய்கிழமை இவர் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இவரது ஆதரவாளர்கள் தெற்குமேடு, வல்லம், சங்கரன்கோவில், புளியங்குடி, மேலச்செவல், தாழையுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். செங்கோட்டையை அருகேயுள்ள வல்லத்தில் சில கடைகளை அடித்து நொறுக்கினர்.
பேருந்துகள் மீது கல்வீச்சு
பசுபதி பாண்டியன் கொலையை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. புதியம்புதூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி நேற்று இரவு 10.30 மணிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. கோவில்பட்டி பாரதி நகர் அருகே வந்தபோது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். பின்னர் பஸ் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதே போல் நெல்லையிலிருந்து நேற்று இரவு 11 மணிக்கு தூத்துக்குடி சென்ற அரசு பேருந்து தூத்துக்குடி மையவாடி அருகே வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் கல் வீசி தாக்கியது. இதில் டிரைவர் ஜான் செல்வம் காயமடைந்தார். இதனால் தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது.
இரவு நேர பஸ்கள் நிறுத்தம்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அசம்aபாதவிதங்கள் ஏற்படுவதை தடுக்க இரவு நேர பேருந்து போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று இரு மாவட்ட கலெக்டர், மற்றும் எஸ்பிக்கள் உத்தரவிட்டனர். இதுகுறித்து நெல்லை மண்டல மேலாளரிடம் கேட்டபோது இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்றார். இதனால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
காலை 9 மணி வரை போக்குவரத்து வசதியின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு பணியாளர்கள் உள்ளிட்டோரும் பாதிப்பு அடைந்தனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. லாரிகள் போக்குவரத்து மட்டும் நடைபெறுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
10 பஸ்கள் மீது கல்வீச்சு-கடைகளுக்குத் தீவைப்பு
நெல்லை, தூத்துக்குடியில் 10 பேருந்துகளுக்கு மேல் கல்வீசி தாக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் கடைகளுக்கு தீவைக்கப்பட்டன.
நேற்று இரவு பஸ்கள் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று காலை 6 மணிக்கு மேல் டெப்போக்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் என பொதுமக்கள் காத்து கிடந்தனர். ஆனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து டெப்போக்களில் கேட்டபோது காலை 10 மணிக்கு பிறகுதான் பஸ்களை இயக்க வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பொதுமக்கள் அவதி
காலையில் பஸ்கள் ஓடாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அரசு பஸ் டெப்போக்கள் மற்றும் பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதோடு நகரின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். தென்மாவட்டங்களில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பசுபதி பாண்டியன் சொந்த ஊரான தூத்துக்குடி அலங்காரதட்டு கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெல்லையில் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் காலை 6 மணிக்கு இயக்கப்பட்டன. ஆனால் அவற்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கடைகள் தீ வைத்து எரிப்பு
இதனிடையே நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டி என்ற ஊரில் பெட்டிக்கடை ஒன்றை மர்மநபர்கள் தீவைத்து எரித்தனர். இதையறிந்த பொதுமக்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதில் பெட்டிக்கடை எரிந்து நாசமானது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது அதே பகுதியில் உள்ள மசிலாமணி என்பவரின் மட்டன்-சிக்கன் கடையையும் அந்த மர்ம கும்பல் தீ வைத்து எரித்தது. அதில் கடையின் கூரை மற்றும் கரி வெட்டும் கட்டைகள் எரிந்து நாசமாகின. இதற்கிடையே பசுபதி பாண்டியன் கொலைக்கு இரங்கல் தெரிவித்து உன்னங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications