40 கிலோ தங்கத்தைத் திருடியது எப்படி?- பிடிபட்ட 'களவாணி' திடுக் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் 40 கிலோ நகை கொள்ளை போன வழக்கில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்கு எதிரே அமர் ஜூவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது. கடம் நவம்பர் மாதம் 4ம் தேதி அந்த கடையில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 40 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது.

கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கபப்ட்டது. விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று நகைகளைக் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 1 மாதத்திற்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த மோகன்சிங் (60) என்பவரை போலீசார் கைது, அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் 14 பேர் கொண்ட கும்பல் நகைகளைத் திருடியது தெரிய வந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பசந்து (30) என்பவர் நேற்று முன்தினம் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையின்போது வெளியான தகவல்கள்,

உத்தரபிரதேச மாநிலம் கல்யாண்பூரைச் சேர்ந்தவர் மோகன்சிங். மும்பையை அடுத்த பன்வேலியை சேர்ந்தவர் பூல்சிங் (44). ஆரம்ப காலத்தில் அவர்கள் 2 பேரும் ஒன்றாகச் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி திருடி வந்துள்ளனர். பிறகு ஆளுக்கொரு திசை சென்று கும்பல் சேர்த்து டெல்லி உளபட பல்வேறு வடமாநில பகுதிகளில் திருடி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூல்சிங் கும்பல் தமிழகம் வந்தது. சென்னை, திருத்தணி, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு இடங்களில் நோட்டமிட்டது. இறுதியாக திருச்சி வந்த அந்த கும்பல் பெரியகடை வீதியை நோட்டமிட்டது. அப்போது அமர் ஜுவல்லர்ஸ் கடையில் காவலாளி இல்லாததைத் தெரிந்து கொண்டு அந்த கடைக்கு குறிவைத்தது.

இதையடுத்து பூல்சிங் கும்பல் 7 பேர் கொண்ட மோகன் சிங் கும்பலை திருச்சிக்கு வரவழைத்தது. அவர்கள் அனைவரும் பக்தர்கள் போர்வையில் ஜங்ஷன் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கினர். பல்வேறு லாட்ஜுகளில் தங்கி 3 மாதமாக நோட்டமிட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தங்கியிருந்த இடத்தை காலிசெய்துவிட்டு பூ, பழங்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் மெயின்கார்டுகேட் பகுதிக்கு சென்றனர். இதில் பூல்சிங்கின் மகன் தாராசிங் மற்றும் அவரது நண்பர் ரோஹித் ஆகியோர் மட்டும் பைக்கில் சென்றுள்ளனர். பக்தர்கள் வேடத்தில் இருந்த அவர்கள் பஜனை பாடிக் கொண்டு என்.எஸ்.பி.ரோட்டில் நடந்து சென்று மலைக்கோட்டை கோவில் வாசலில் அமர் ஜுவல்லர்ஸ் முன்பு நின்று சாமி கும்பிட்டுள்ளனர்.

அப்போது ராகேஷ், சஞ்சய் என்ற 2 பேர் மட்டும் கடையின் பூட்டை கட்டர் வைத்து வெட்டி ஷட்டரைத் திறந்து உள்ளே சென்றனர். பூட்டை வெட்டும் சத்தம் கேட்காமல் இருக்க மற்றவர்கள் "கணேசா'', "கணேசா'' என்று கோஷமிட்டுள்ளனர். அவர்கள் கோஷம் கேட்டு எழுந்த மற்ற கடை காவலாளிகள் அந்த கும்பலை பக்தர்கள் என்று நினைத்து மீண்டும் தூங்கிவிட்டனர். இதையடுத்து அவர்கள் 15 நிமிடத்தில் நகைகளைத் திருடிக் கொண்டு ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்றனர். திருச்சியில் இருந்து பேருந்து மூலம் விழுப்புரம் சென்றனர். போகும் வழியில் பைக்கை திருச்சியைத் தாண்டி ஒரு இடத்தில் போட்டுவிட்டனர்.

பின்னர் விழுப்புரத்தில் இருந்து பேருந்தில் திருப்பதிக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் தங்கி ஆளுக்கு ஒன்றரை கிலோ நகைகளைப் பங்கு வைத்து பிரித்துவிட்டு அவரவரவர் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொள்ளையர்களைத் தேடினர். அப்போது தான் மோகன்சிங் தங்கியிருந்த இடம் தெரிய வந்தது. உடனே அவரை 5 நாட்கள் ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது அவர் எப்போதும் துப்பாக்கியுடன் திரிந்ததும், பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

திருச்சி சம்பவத்திற்கு ஒற்றைக் கண் உடைய பூல்சிங் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் பூட்டை உடைப்பது, கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டுவது, கார் டிக்கியில் இருந்து பொருட்களைத் திருடுவதில் கில்லாடி என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொள்ளையில் 14 பேர் ஈடுபட்டிருந்தும் இதுவரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு ஒன்றரை கிலோ நகைகள் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மோகன்சிங்கிற்கு ஹேமலதா, லீலாவதி என்ற 2 மனைவிகள் உள்ளனர். பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மோகன்சிங்கை அதிரடிப் படை போலீசார் கடந்த 2008ம் ஆண்டில் கான்பூரில் வைத்து கைது செய்தனர். அதன் பிறகு அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் திருச்சி கொள்ளை வழக்கில் மோகன் சிங் கைதாகியுள்ளார். போலீசார் அவருடைய மனைவி பெயரில் வங்கியில் இருந்த லாக்கரை உடைத்துப் பார்த்தும் அதில் ஒன்றும் இல்லை. மோகன்சிங் கைதான விஷயம் பற்றி அறிந்த கிராம மக்கள் அவர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பொருட்களை அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

அந்த 14 பேரும் மதுரை, திருத்தணி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் உள்ள பிளாட்பாரக் கடைகளில் பொய்யான முகவரியைக் கொடுத்து சிம்கார்டுகள் வாங்கியுள்ளனர். அதில் ஒரு கட்சியைச் சேர்ந்த மாவட்ட தலைவர் பெயரிலும் சிம்கார்டு வாங்கியுள்ளனர். கொள்ளையடித்த பிறகு அந்த சிம்கார்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+