டெல்லி சென்று வீர விருது பெற முடியாமல் தவித்த சிறுவன்- அமைச்சரின் உதவியால் சென்றான்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பரமேஸ்வரன் (14). 9ம் வகுப்பு படித்து வருகிறான். தனது உயிரையும் பொருட்படுத்தாமல், கால்வாயில் மூழ்கிய 3 சிறுமிகளை காப்பாற்றியதற்காக வீரதீர செயலுக்கான விருது பெற்றான்.
டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பரமேஸ்வரனுக்கு வீரதீர செயலுக்கான விருதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும், பிரதமர் மன்மோகன் சிங்கும் வழங்கினார்கள். அந்த விருதில் பதக்கம், பரிசு மற்றும் சான்றிதழ் அடக்கம்.
பரமேஸ்வரனின் பெற்றோர் கூலித்தொழிலாளர்களான கோவிந்தன், லட்சுமி தம்பதி. பரமேஸ்வரன் சிறுவயதிலேயே நீச்சல் பழகியிருந்தான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி அவன் நாகவதி அணை கால்வாயில் துணி துவைத்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு 5 சிறுமிகள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
20 அடி ஆழம், 30 அடி அகலம் கொண்ட கால்வாயில் அந்த சிறுமிகள் ஆழமான பகுதிக்குச் சென்றனர். திடீர் என்று அவர்கள் அலறும் சத்தம் கேட்ட பரமேஸ்வரன் ஆற்றில் குதித்து சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி ஆகிய 3 சிறுமிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தான். ஆனால் உமா, பூஜா ஆகிய 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தனது உயிரையும் பொருட்படுத்தாது 3 சிறுமிகளைக் காப்பாறியதற்காக பரமேஸ்வரனுக்கு வீரதீர செயலுக்கான விருது கிடைத்துள்ளது.
டெல்லி சென்று விருதைப் பெற்றுக் கொண்டு நேற்று காலை சென்னை திரும்பிய பரமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வீரதிர செயலுக்கான விருதின் அருமை எனது பெற்றோருக்கு தெரியவில்லை. டெல்லி செல்ல பணம் தேவைப்படும் என்பதால் நான் டெல்லி செல்வதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனது உறவினர் சிவகுமார் தான் என்னை டெல்லிக்கு அழைத்து சென்றார்.
எங்கள் 2 பேருக்கு ரயில் கட்டணம், தங்குமிடம், சாப்பாட்டு செலவை மத்திய அரசே ஏற்றுக்கொண்டது. நாங்கள் 10 நாட்கள் அங்கு தங்கி டெல்லியை சுற்றிப் பார்த்தோம். குடியரசுத் தலைவர் கையால் விருது வாங்கியது பெருமையாக உள்ளது.
இந்த விருது கிடைக்கும் என்று நான் நினைத்தே இல்லை. தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த 5 சிறுமிகளைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால் என்னால் 3 பேரை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது. 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
இந்த இளம் வயதில் இவ்வளவு பெரிய விருது கிடைத்திருப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. பணம் இல்லாததால் தான் எனது பெற்றோர் டெல்லிக்கு வரவில்லை. இனி நான் மேலும் பல வீரதீர செயல் புரிவேன் என்றான்.
உறவினர் சிவக்குமார் கூறியதாவது,
பரமேஸ்வரனை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் பலரிடம் கடன் கேட்டேன். அப்போது தான் பாலக்கோடு அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகன் ரூ. 10,000 கொடுத்து எங்களை வழியனுப்பி வைத்தார். அவர் செய்த உதவியால் தான் நாங்கள் டெல்லி சென்று வந்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications