For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்வெட்டு: ''வருஷத்துக்கு ஒரு பேச்சு பேசும் ஜெயலலிதா'': கருணாநிதி தாக்கு!

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மின்வெட்டை முழுமையாக நீக்குவது தொடர்பாக 2011ம் ஆண்டில் ஒரு பேச்சும், 2012ம் ஆண்டில் வேறு தகவலும் கூறியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இப்போது வந்துள்ள செய்திப்படி, மின்வெட்டைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் மட்டும் வரும் 10ம் தேதி 40,000 தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாம். அதிமுக ஆட்சியின் சாதனைக்கு இவை நல்ல உதாரணங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி: ஆளுநர் உரைக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் மின் பற்றாக்குறை நடப்பாண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2013 மத்தியில் மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டு விடும் என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்: ஆளுநர் உரைக்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஜூன் முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு 2013-ம் ஆண்டின் மத்தியில் முழுதாக நீக்கப்பட்டுவிடும் என்று கூறியிருக்கிறார். அதிமுக அரசின் சார்பாக 4.8.2011 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் "மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்பட்டு 2012 ஆகஸ்ட் மாதத்துக்குள் முற்றிலுமாக நீக்கப்படும்' என்று கூறப்பட்டது.

இப்போது 2013ம் ஆண்டின் மத்தியில் மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். 2013ல் என்ன சொல்வரோ தெரியவில்லை. இதற்கிடையே இன்று வந்துள்ள செய்திப்படி கோவை மாவட்டத்தில் மட்டும் 10ம் தேதி 40 ஆயிரம் ஆலைகள் மூடப்படவுள்ளதாம். அதிமுக ஆட்சியின் சாதனைகளுக்கு இதெல்லாம் நல்ல உதாரணங்கள்தானே?.

கேள்வி: ஒரு மாத காலமாக கோவை ராவணன், மன்னார்குடி திவாகரன் மீதெல்லாம் காவல் துறையினரால் அசாதாரணமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சசிகலா மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தவுடன் இந்த அளவிற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறதே?

பதில்: ஊழல் என்றால், இந்த ஆட்சியில் என்னவென்றே தெரியாது என்பதை போல ஜெயலலிதா பேசியிருக்கிறார். "தினமலர்' நாளேட்டிலேயே, "அமைச்சர் வீட்டில் தொடரும் வசூல் வேட்டை' என்ற தலைப்பில் எழுதியிருக்கின்றனர். இந்த ஒரு உதாரணம் போதுமா, இன்னமும் வேண்டுமா?

ராவணன், திவாகரன் ஆகியோர் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்களுக்கு அப்போது அந்தத் தவறுகளுக்கு உதவியாக இருந்தவர்கள் யார்?

அதிமுக ஆட்சியினரும், குறிப்பாக முதல்வரும்தானே? அவர்கள் மீது யார் எப்போது என்ன நடவடிக்கை எடுப்பது? அவர்களை கடந்த ஆறு மாதமாக தவறு செய்ய துணை புரிந்த காவல் துறையினர் யார் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை?.

என்ன மர்மமோ?....

கேள்வி: கூடங்குளத்தில் அப்பாவி பொதுமக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தும் உதயகுமாரை கைது செய்ய வேண்டுமென்று கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் நடத்திய உண்ணாவிரதம் பற்றி?

பதில்: அணு உலைக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பேசிய வழக்கறிஞர் பூசைதுரை என்பவர், அணுமின் நிலையத்திற்கு 1986ல் அடிக்கல் நாட்டிய போது, அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் ஏன் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்றும், அன்னிய சக்திகளின் தூண்டுதலால்தான் மூன்று மாதங்களாக இவர் மக்களை போராட தூண்டுகிறார் என்றும், போராடுகின்ற மக்களுக்கு தினமும் பணம் கொடுத்து உண்ணாவிரதம் இருக்க அழைத்து வருவதாகவும் அதுபற்றியெல்லாம் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்.

ஆனால் உதயகுமாருக்கு எதிராக செயல்படும் இந்த வழக்கறிஞர் பூசைதுரையை தமிழக போலீசார் கைது செய்திருக்கிறார்கள். என்ன மர்மமோ?

கேள்வி: உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஆளுங்கட்சி பெற்ற வெற்றியை பாராட்டுவதாக ஆளுநர் உரையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்: இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் குறித்த வழக்கு நடைபெற்று, தீர்ப்பு கூறப்பட்டது. எரமலூர் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ரமா என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட மீராதேவி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்; தனக்கு 473 வாக்குகள் கிடைத்ததாகவும், ரமாவுக்கு 468 வாக்குகள்தான் கிடைத்தன என்றும், முடிவினை அறிவிப்பதற்கு முன்பு ரமாவின் கணவர் ரமேஷ் மற்றும் இருவர் தகராறு செய்ததின் விளைவாக ரமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.முருகேசன், ஜனார்த்தனராஜா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஓட்டு எண்ணிக்கையின் போது ஏதாவது வன்முறை சம்பவம் நடந்தால், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரி தெரிவிக்க வேண்டும், ஆனால் தேர்தல் அதிகாரி அவ்வாறு தெரிவிக்கவில்லை, போட்டியிடுபவர்களிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற்ற பின்தான் மீண்டும் ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியும். ஆனால் மனுதாரரிடமிருந்தோ, ரமாவிடமிருந்தோ புகார் வரவில்லை.

விதிமுறைகளைத் தேர்தல் அதிகாரி பின்பற்றவில்லை. மீண்டும் ஓட்டு எண்ணிக்கைக்கு தானாகவே அவர் முடிவெடுத்துள்ளார். விதிமுறைகளுக்கு முரணாக மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டதை ஏற்க முடியாது. எனவே பஞ்சாயத்துத் தலைவராக ரமா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அது ரத்து செய்யப்படுகிறது என்று கூறியிருக்கிறார்கள் என்றால், உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் எப்படி நடைபெற்றன என்பதற்கு இது ஒரு சான்று போதாதா? என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

English summary
DMK chief Karunanidhi has told that evidences are there for irregularities in civic polls. He is wondering as to why the police have arrested lawyer Poosaidurai who raised doubts about Kudankulam protesters team head Udhayakumar's intentions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X