For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கவுரி நல்ல நேரம்' பார்த்து "குரு ஓரையில்" வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

By Chakra
Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நல்ல நேரததுக்காக போலீஸ் செக்-போஸ்டில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார். பின்னர் "கவுரி நல்ல நேரம்' ஆரம்பமானவுடன் தாலுகா அலுவலகத்திற்குள் வந்தார். பின்னர் ஒரு மணிக்கு மேல் "குரு ஓரையில்' வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ., வாக இருந்த கருப்பசாமி மரணமடைந்ததை தொடர்ந்து வரும் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலில் அதிமுக., வேட்பாளராக முத்துசெல்வி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த முத்துசெல்வி பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ஜெயலலிதா 33 அமைச்சர்கள் உப்பட 43 பேரை
தேர்தல் பணிக்குழுவில் ஈடுபடுத்தி உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது தேமுதிக., தலைவர் விஜயகாந்திடம், "சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கிறதா' என்றும் சவால் விட்டு இருக்கிறார். இதனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலின் ஒவ்வொரு நிகழ்வும் தமிழகம் முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முத்துசெல்வி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலையில் இருந்தே திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள அதிமுக., தேர்தல் அலுவலகத்திலும், சங்கரநாராயண சுவாமி கோயில் சன்னதி தெருவிலும் அதிமுக.,
தொண்டர்களின் கூட்டம் குவிய தொடங்கியது.

நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் அதிமுகவினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. காலை 11.10 மணியளவில் வேட்பாளர் முத்துசெல்வி சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு
வந்தார். பின்னர் கோயிலில் உள்ள சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதிஅம்பாள் சன்னதி, சண்முகர் சன்னதி ஆகிய சன்னதிகளில் வேட்பு மனுவை வைத்து பய பக்தியுடன் தரிசனம் செய்தார்.

பின்னர் 11.45 மணியளவில் கோயிலில் இருந்து தாலுகா அலுவலம் நோக்கி வேட்பாளர் முத்துசெல்வி ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், எம்பி., தம்பித்துரை, அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், சுந்தர்ராஜன், சின்னையா, செல்லப்பாண்டியன் உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும்
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் தாலுகா அலுவலகம் முன் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் செக்-போஸ்டில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த வேட்பாளர் முத்துசெல்வி மதியம் 12.30 மணிக்கு "கவுரி நல்ல நேரம்' ஆரம்பமானவுடன் தாலுகா அலுவலகத்திற்குள் வந்தார். பின்னர் ஒரு மணிக்கு மேல் "குரு ஓரையில்' வேட்பாளர் முத்துசெல்வி முதன்மை உதவி தேர்தல் அதிகாரி தாமோதரனிடம் வேட்பு
மனுத்தாக்கல் செய்தார். வேட்பாளருடன் அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், சின்னையா, செல்லப்பாண்டியன், சுந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

வேட்பு மனுத்தாக்கல் முடிந்து வெளியில் வந்த வேட்பாளர் முத்துசெல்வி நிருபர்களிடம் கூறுகையில், ""முதல்வர் ஜெயலலிதா என்னை வெற்றி வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் புரட்சிகரமான திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்று சங்கரன்கோவில் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன். மேலும் அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய பாடுபடுவேன்'' என்றார்.

வேட்பாளர் முத்துசெல்வி வேட்பு மனுத்தாக்கல் செய்த போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியில் காத்திருந்தனர்.

பின்னர் அதிமுக., மாற்று வேட்பாளராக நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். சங்கரன்கோவிலில் நேற்று தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.பி.,க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூடியதால் நெல்லை கூடுதல் எஸ்.பி.,
மகேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அதிமுகவுக்கு மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு:

இந் நிலையில் மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்தும் புரட்சித் தலைவி தலைமையிலான அரசுக்குதான் மக்கள் ஆதரவு இருக்கிறது. சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் தார்மீக ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்ற முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Sankarankovil ADMK candidate Muthuselvi waited for auspicious time to file nomination papers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X