சென்னையில் கொசுத் தொல்லையை ஒழிக்க 45 ஆட்டோக்கள் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை!
சென்னை: மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கைக் கூட்டம் கூட்டம், ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது.
2012-13ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை உரையை மேயர் சைதை துரைசாமி வாசித்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
பள்ளிக்கூடங்கள்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் ஐஏஎஸ், ஐஐடி, பொறியியல், மருத்துவ நுழைவுத் தேர்வு, டிஎன்பிஎஸ்சி மற்றும் தேசிய, மாநில அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதும் வகையில் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். அதற்கான அடிப்படை பாடப்பிரிவு மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்படும்.
மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். தகவல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டு, கடினமான பாடங்களை அனிமேஷன் மூலம் எளிதில் கற்கும் வகையில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும்.நடப்பாண்டில் 30 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். முதல்கட்டமாக 32 பள்ளிகளில் கேமரா பொருத்தப்படும்.
மேல்நிலை வகுப்பில் படிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வீடியோ, ஆடியோ மூலம் கற்பிக்கும் முறை ஏற்படுத்தப்படும்.
7 மேம்பாலங்கள்
கோட்டூர், மந்தைவெளி உள்பட 7 முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்.
சொத்து வரியை நிர்ணயிப்பதில் தற்போதுள்ள அணுகுமுறையை சீராய்வு செய்து ஒளிவு மறைவற்ற தன்மை உருவாக்கப்படும். ஓட்டல், தியேட்டர், திருமண மண்டபங்கள் போன்றவற்றுக்கு உள்ளதுபோல ஐ.டி. பார்க்குகளுக்கும், தொழிற்கூடங்களுக்கும் எந்த இனங்களில் சொத்து வரி நிர்ணயிப்பது என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் பல்வேறு வகை மூலிகை செடிகளை கொண்டு மூலிகை பண்ணை உருவாக்கப்படும்.
ஒப்பந்தங்கள் கோருவது ஆன்லைன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் விளையாட்டு திடல்கள் இல்லாத இடங்களில் முதல்கட்டமாக 50 விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும்.
பொதுமக்கள் நேரத்தை தெரிந்துகொள்ள வசதியாக மாநகராட்சி பூங்காக்களில் கடிகாரங்கள் அமைக்கப்படும்.
விரிவாக்கப்பட்ட வார்டுகளில் முதல்கட்டமாக 100 பூங்காக்கள் உருவாக்கப்படும்.
சென்னையில் பெரிய அளவில் மருத்துவமனைகள் உள்ள பகுதிகளை கண்டறிந்து மருத்துவ மைய பகுதியாக அறிவிப்பதுடன், அவற்றுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
சென்னையில் கொசுத் தொல்லையை ஒழிக்க 45 சிறிய ஆட்டோக்கள் மூலம் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொசு ஒழிப்பு பணியில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்படும்.
தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்காக தனியாக காப்பகம் அமைக்கப்படும். அங்கு 2 ஆயிரம் நாய்கள் பராமரிக்கப்படும்.
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவப்படும். 5 மண்டலங்களில் மருத்துவ ஆய்வகத் துடன் இணைந்த 4 ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்து தரப்படும்.
11 இடங்களில் பல் மருத்துவமனை உருவாக்கப்பட்டு, பல் மருத்துவர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்படுவர்.
வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளில் தனித்தனியாக நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதற்காக 9 வாகனங்கள் வாங்கப்படும்.
நிதிநிலை அறிக்கை கண்ணோட்டம்
மொத்த வரவு - ரூ.2921.48 கோடி
மொத்த செலவு - ரூ.2922.73 கோடி
பற்றாக்குறை - ரூ.1.25 கோடி
புதிய மேம்பாலங்கள்
சென்னையில் புதிய மேம்பாலங்கள் அமைக்க ஆய்வு செய்யப்பட உள்ள இடங்கள்:
1) மகாலிங்கபுரம் - வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தையும், தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தையும் இணைத்து அண்ணா சாலை வரை ஒரே மேம்பாலமாக அமைப்பது அல்லது தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை அண்ணா சாலையோடு நீட்டுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
2) எழும்பூர் நீதிமன்றம் சாலை - பாந்தியன் சாலை - ருக்மணி லட்சுமிபதி சாலை சந்திப்பு
3) நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை - ஸ்டெர்லிங் சாலை மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை சந்திப்பு
4) சாலிகிராமம் ஆற்காடு சாலை - கே.கே.நகர் 80 அடி சாலை சந்திப்பு
5) மந்தைவெளி பேருந்து நிலைய சந்திப்பு
6) திருவல்லிக்கேணி பாரதி சாலை - ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பு
7) கோட்டூர் காந்தி மண்டபம் சாலை - பொன்னியம்மன் கோயில் சாலை சந்திப்பு
இதுதவிர ஏற்கனவே உள்ள 7 பாலங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. அவற்றின் விவரம்:
1) ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஸ்பன்சன் சாலை பாலம்
2) வில்லிவாக்கம் ரயில்வே சந்திப்பு வாகன மேம்பாலம்
3) ஆலந்தூர் ஏஜிஎஸ் நிதி மேனிலைப்பள்ளி அருகே உள்ள ரயில்வே பாதசாரிகள் சுரங்கப்பாதை
4) கேப்டன் கால்வாய் குறுக்கே உள்ள பாலம்
5) விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே சின்மயாநகர் காளியம்மன் கோயில் தெரு பாலம்
6) கொடுங்கையூர் கால்வாய் குறுக்கே எழில் நகரில் சோலையம்மன் கோயில் தெருவையும், சத்தியவாணிமுத்து நகரையும் இணைக்கும் பாலம்
7) ஜவஹர் நகரில் உள்ள லோகோ ஸ்கீம் சாலையையும், 70 அடி சாலையையும் இணைக்கும் பாலம்
இணையத்தில் கட்டிட வரைபட அனுமதி
தற்போதுள்ள பூங்காக்களில் மூலிகை இன தாவரங்கள் வளர்க்கப்படும். இது நடை பயிற்சி செய்பவர்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செய்பவர்களின் வசதிக்காக அனைத்து பூங்காக்களிலும் கடிகாரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மழைநீர் வடிகால்வாய்களை ஒருங்கிணைக்க, 5 ஆயிரம் மழைநீர் வடிகால் நுழைவுகள் கட்டப்படும். சிஎம்டிஏ கட்டுப்பாட்டில் உள்ள மணலி நகரம், நிர்வாகம் மற்றும் பராமரிப்பு காரணங்களுக்காக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். கட்டிட வரைபட அனுமதி பெறும் நடைமுறை ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டு எளிமையாக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications