ஈழ அகதி முகாம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை - ஜெயலலிதா

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் தங்கி வாழும் இலங்கை தமிழர்கள் நலன் காக்க தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசால் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களையும் இலங்கை தமிழர்களுக்கு வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களுக்கான ஊக்கத் தொகை
தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து கல்லூரிகளில் உயர்கல்வி மேற்கொள்ளும் இலங்கைத் தமிழ் அகதிகள் குடும்ப மாணவ மாணவியருக்கு, ஆண்டு ஒன்றுக்கு இளங்கலை (பி.ஏ.) பயிலுவோருக்கு 1200 ரூபாயும், இளங்கலை அறிவியல் (பி.எஸ்.சி.) பயிலுவோருக்கு 1250 ரூபாயும், முதுகலை (எம்.ஏ.) பயிலுவோருக்கு 1330 ரூபாயும், முதுகலை அறிவியல் (எம்.எஸ்.சி.) பயிலுவோருக்கு 1650 ரூபாயும், தொழில்நுட்ப கல்வி (டிப்ளமோ) பயிலுவோருக்கு 1850 ரூபாயும், பொறியியல் (பி.இ.) பயிலுவோருக்கு 2750 ரூபாயும், மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) பயிலுவோருக்கு 4700 ரூபாயும், கால்நடை மருத்துவம்(பி.வி.எஸ்.சி.) பயிலுவோருக்கு 1400 ரூபாயும், சட்டம் (பி.எல்.) பயிலுவோருக்கு 1860 ரூபாயும், வேளாண்மை அறிவியல்(பி.எஸ்.சி. அக்ரி) பயிலுவோருக்கு 2850 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
சுய உதவிக் குழுக்கள்
இதன் மூலம், 1000 இலங்கை தமிழர் அகதி மாணவ மாணவியர் பயன் பெறுவர். இதற்காக அரசுக்கு 20 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். இலங்கை அகதிகள் முகாம்களில் தற்பொழுது இயங்கி வரும் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு தடவை மானியமாக ஒவ்வொரு குழுவிற்கும் 10000 ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளர். இதனால் அரசுக்கு 41 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.
அடிப்படை வசதிகள்
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் வசதியினை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடியே 33 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும்; முகாம்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பழுது பார்த்தல், சாலைகளை சீரமைத்தல், நூலகக் கட்டடம் கட்டுதல், ரேஷன் கடை அமைத்தல், கூடுதல் கழிப்பறை மற்றும் குளியலறை ஏற்படுத்துதல், சமுதாய கூடங்கள் அமைத்தல், மின்கம்பங்கள் மற்றும் தெரு விளக்கு அமைத்தல், சமையலறை கட்டுதல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகளுக்காக 20 கோடியே 66 லட்சத்து 62 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும், ஆக மொத்தம் இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு நலத்திட்டங்கள்
தமிழக மக்களுக்காக அமல் படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களையும் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் வழங்கி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்த ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம், அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் மேலும் வளம் ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications