விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி
சென்னை: சென்னையின் உயிர்நாடிகளாக விளங்கி வந்த கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய மூன்றையும் பழையபடி மீட்டெடுத்து, அவற்றின் பொலிவை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் சி. ஜோசப் விஜயின் கனவுத் திட்டமான இது, தற்போது மத்திய அரசின் நிதியுதவியுடன் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
நகர்ப்புற மறுசீரமைப்பிற்கான மத்திய அரசின் 'நகர்ப்புற சவால் நிதி' (Urban Challenge Fund - UCF) திட்டத்தின்கீழ், தமிழகத்திற்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வர் கடந்த திங்கட்கிழமை அறிவித்த 'முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டம்' (CMIUTM - Chief Minister's Integrated Urban Transformation Mission) மூலம் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்வதும்தான்.
மாநகராட்சி நிர்வாகம் (MAWS) துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்துப் பேசுகையில், "மத்திய அரசின் யு.சி.எஃப் (UCF) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மொத்தம் ரூ.30,000 கோடி வரை நிதி பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த நிதியைப் பெறுவதற்காக நடப்பாண்டிலிருந்தே சி.எம்.ஐ.யு.டி.எம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) மத்திய அரசிடம் சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மீட்புத் திட்டத்தில் முதன்மையானது, கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் புனரமைப்புப் பணிகள். இதைப் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்குமாறும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பொதுமக்களின் கண்களுக்குத் தெரியும்படியான மாற்றங்களைக் கொண்டுவருமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சி.எம்.ஐ.யு.டி.எம் திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது மற்றத் திட்டங்களைப் போலத் தன்னிச்சையாகச் செயல்படாமல், அனைத்து மாநகராட்சிகளுக்கும் பொதுவான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் கட்டுதல், பல அடுக்கு வாகன நிறுத்தம் அல்லது பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் ஒவ்வொரு மாநகராட்சியிலும் தனித்தனியாக, வெவ்வேறு வடிவமைப்பு மற்றும் காலக்கெடுவுடன் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இனி, இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாநகராட்சிகளுக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் சீரான வளர்ச்சி கிடைக்கும் என்பது அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.
சென்னையில் மட்டுமல்லாது, கோவை, மதுரை, மற்றும் திருச்சிராப்பள்ளி போன்ற முக்கிய நகரங்களிலும் நவீன பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மேம்படுத்தப்படும். வெள்ளத் தடுப்பு மற்றும் மழைநீர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையில், மாநகராட்சிப் பூங்காக்களுக்கு உள்ளேயே 'ஸ்பாஞ்ச் பார்க்' (Sponge Parks) எனப்படும் மழைநீர் உறிஞ்சித் தோட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயார் செய்யுமாறு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த வாரமே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சி.எம்.ஐ.யு.டி.எம் திட்டத்தின் மொத்தத் தேவையாக ரூ.1.5 லட்சம் கோடி என மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. இதில் மத்திய அரசிடமிருந்து ரூ.30,000 கோடியைப் பெறுவதோடு, மீதமுள்ள நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய நகராட்சிப் பத்திரங்கள் (Municipal Bonds), மாநில அரசின் மானியங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கடனுதவிகள் போன்ற பிற வழிகளையும் அரசு பரிசீலித்து வருகிறது. நகரங்களை மீட்டெடுக்கும் இந்த மெகா திட்டம் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications