ஸ்பெக்ட்ரம்: ராசா, செல்போன் நிறுவனங்களின் மறு ஆய்வு மனுக்கள்-சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

அதே நேரத்தில் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்ற 10 மறு ஆய்வு மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான லைசென்சுகளை வழங்கியதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இது தொடர்பான முக்கிய வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.
ரத்தான 122 லைசென்ஸ்கள்:
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆ.ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த லைசென்சுகளை 4 மாதங்களுக்குள் மீண்டும் ஏலம் விட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கும், அதற்கான விதிகளை வகுக்குமாறு தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் அமைப்புக்கும் உத்தரவிட்டது.
கண்டனத்துக்குள்ளான பிரதமர் அலுவலகம்:
மேலும் அந்தத் தீர்ப்பில் மத்திய அரசையும், பிரதமர் அலுவலகத்தையும் கண்டித்து சில வாசகங்களும் இடம் பெற்று இருந்தன.
இதைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆ.ராசா, மத்திய அரசு, ஸ்பெக்ட்ரம் லைசென்சுகளை இழந்த 7 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியோரின் சார்பில் இந்த 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பில் குறிப்பிட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஊழல் வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் பிரதமர் அலுவலகம் தாமதப்படுத்தியதாக தெரிவித்த குற்றச்சாட்டையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
மேலும் புதிய ஏலத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க 400 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய கோரி இருந்தது.
லைசென்ஸ்களை மீண்டும் கோரும் டெலிகாம் நிறுவனங்கள்:
அதே போல டாடா டெலிசர்வீசஸ், எஸ் டெல், வீடியோகான் டெலிகம்யூனிகேஷன்ஸ், சிஸ்டமா ஷியாம் டெலிசர்வீசஸ், யுனிடெக், எடிசலாட் டி.பி. கம்யூனிகேஷன், ஐடியா செல்லுலர் ஆகிய 7 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், தங்களுக்கு வழக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவில் தங்களது முதலீடுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதாகவும், எனவே ஸ்பெக்ட்ரம் ரத்து செய்யப்பட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் மறு ஆய்வு மனு தவிர மற்ற 10 மறு ஆய்வு மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ராசாவின் மனுவும் தள்ளுபடி:
மத்திய அரசின் மனுவில் உள்ள, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம்யை ஒதுக்கீடு செய்த கொள்கை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த மனு மீதான விசாரணையை வருகிற 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்பு தனிக்கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆ.ராசா தனது மறு ஆய்வு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அந்த கருத்து சரியானது அல்ல என்று கூறி அவரது மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சிதம்பரம் விவகாரம்:
மேலும் இந்த வழக்கில் ஆ.ராசாவுடன் அப்போது நிதியமைச்சராக இருந்த தற்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியும், ஊழலுக்கு எதிரான பொதுநல மையம் என்ற அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தன.
இந்த மனுக்களும் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது ஊழலுக்கு எதிரான பொதுநல மையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதாடுகையில்; 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான விலையை ஆ.ராசா நிர்ணயித்தது பற்றி ப.சிதம்பரத்துக்கு நன்றாக தெரியும் என்றும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும் அல்லது 2001ம் ஆண்டு விலை நிர்ணயத்தை விட மூன்றரை மடங்கு அதிகமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்த யோசனையை ஆ.ராசா மீறி நடந்து கொண்டதாகவும் கூறினார்.
மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக அப்போது நடந்த நிகழ்வுகளையும், கடித பரிமாற்றங்கள் பற்றிய விவரங்களையும் அவர் பட்டியலிட்டார்.
சி.பி.ஐ. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், இந்த பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் எந்த ஆவணங்களின் அடிப்படையில் முடிவு எடுத்ததோ அதே ஆவணங்களின் அடிப்படையில் தான் மனுதாரரின் வழக்கறிஞரும் வாதாடுகிறார் என்றும், எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறினார்.
அவரது இந்த கருத்துக்கு சுப்பிரமணிய சாமி மறுத்து வாதாடினார்.
விவாதத்துக்கு பின், ப.சிதம்பரத்தை சேர்ப்பது தொடர்பான விசாரணையையும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக இதுவரை நடந்துள்ள விசாரணை குறித்த அறிக்கையையும் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு கோரி சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications