For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் ஏன் ஜெ.ஜெயலலிதா.. ஏன் ச.ஜெயலலிதா இல்லை?: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சொன்ன சொல்லை நிறைவேற்றக்கூடியவர் இல்லை. பெண்களை உயர்த்தக்கூடிய வகையில் ஒரு முறை அவர் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, உலகில் உள்ள அனைவரும் தாயார் பெயரைத்தான் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும் என்றார். இதை ஜெயலலிதா கடைப்பிடித்தாரா என்றால் இல்லை. ஜெயலலிதாவின் தாயார் பெயர் சந்தியா. அதைப் பயன்படுத்தாமல் இப்போதும் அவர் தந்தையின் பெயரான ஜெயராமன் என்பதிலிருந்து ஜெ. என்பதைத்தான் எடுத்துப் பயன்படுத்தி வருகிறார். இதுபோல அவர் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றியதில்லை என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

தமிழ் மொழியை காக்கும் இலக்கம் திமுக என்று சென்னை பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

மின் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று திமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

நடந்த இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி வாகை சூடவில்லை. தோல்வியைத்தான் சந்தித்தது. அடிக்க அடிக்க பந்து எழுவதுபோல், தோற்க தோற்கத்தான் திமுகவுக்கு விறுவிறுப்பும், சுறுசுறுப்பும் வரும் என்பதற்கு இந்த கூட்டம் ஒரு சான்று.

நேற்று தந்தை பெரியார் பற்றிய ஒரு படம் பார்த்தேன். தமிழ் இனத்தின் எழுச்சிக்கு பாடுபட்டவர் அவர். சாதி, மத, ஆண்டவன் பெயரால் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பெரியார் பாடுபட்டார். நீ மண் அல்ல, மனிதன் என்று சுயமரியாதையை சுட்டிக்காட்டியவர் பெரியார். அதற்காகத்தான் அவர் ஈரோட்டில் இருந்து வைக்கம் வந்தார்.

சூத்திர பட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து நிறைவேற்றுவது நாம் காட்டும் மரியாதை, உரிமை ஆகும். அதற்காக பாடுபட வேண்டும்.

நமக்குள்ள கலை, பண்பாடு, மொழி ஆகியவற்றை காப்பாற்ற பாடுபடுகிறோம். நாம் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என உணர வேண்டும்.

திமுக என்ற பெயரை நாம் ஏன் கொண்டு வந்தோம். முதலில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் என்று கூறினார்கள். பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோர் சிந்தித்து திராவிட என்ற சொல்லை இயக்கத்துடன் இணைத்தனர். இன்று உறுதியான மனப்பான்மையுடன் திமுககாரன் என்ற எண்ணத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடிகிறது. இதற்குக் காரணம் பெரியார், அண்ணா ஊட்டிய உணர்வு. தமிழ் மொழியை யார் அழிக்க முற்பட்டாலும் அதற்கு வழிவிடாமல் காக்கும் பாசறை திமுக.

முதல்வர் ஜெயலலிதா சொன்ன சொல்லை நிறைவேற்றக்கூடியவர் இல்லை. பெண்களை உயர்த்தக்கூடிய வகையில் ஒரு முறை அவர் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, உலகில் உள்ள அனைவரும் தாயார் பெயரைத்தான் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகப் பயன்படுத்த வேண்டும் என்றார். இதை ஜெயலலிதா கடைப்பிடித்தாரா என்றால் இல்லை. ஜெயலலிதாவின் தாயார் பெயர் சந்தியா. அதைப் பயன்படுத்தாமல் இப்போதும் அவர் தந்தையின் பெயரான ஜெயராமன் என்பதிலிருந்து ஜெ. என்பதைத்தான் எடுத்துப் பயன்படுத்தி வருகிறார். இதுபோல அவர் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றியதில்லை.

தமிழ்மீது பாசம் உள்ளதுபோல ஜெயலலிதா காட்டிக் கொள்கிறார். தமிழிக்குச் செம்மொழி எனும் தகுதியைப் பெற்றுக்கொடுத்த என்னைப் பார்த்து, தமிழுக்கு என்ன செய்தாய் என்று கேட்கிறார்.

அதுவும், கல்லக்குடி கொண்டு வந்த கருணாநிதியை பார்த்து கேட்கிறார். நீங்கள் விழிப்போடு இதை கவனிக்க வேண்டும். திமுக நடத்திய மாநாடு, கூட்டங்களில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. உலகத்தில் 5, 6 மொழிகள் தான் செம்மொழி தகுதி பெற்றது. அந்த தகுதி தமிழ் மொழிக்கும் உண்டு என்று போராடியவர்களில் நானும் ஒருவன்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இதை நான் விளக்கிக் கூறினேன். அவரும், எனக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு மூலம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். 100 ஆண்டு தமிழறிஞர்கள் போராடியதன் பலன் திமுக முயற்சிக்கு கிடைத்தது.

ஆனால், தற்போதை ஆட்சியாளர்கள் செம்மொழி என்ற பெயரே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, தமிழுக்கு பாடுபடுவதாக தம்பட்டம் அடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள செம்மொழி மையத்தை இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தெருவில் தூக்கி போட்டார்கள். செம்மொழிப் பூங்கா மாற்றப்பட்டுள்ளது. செம்மொழி ஆய்வகமாக இருந்த பாரதிதாசன் நூலகம் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.

அண்மையில் தமிழ்த்தாய் விருது வழங்கு நிகழ்ச்சி என்று ஒன்றை நடத்தியுள்ளனர். அது தமிழ்த்தாயை அவமானப்படுத்தும் விழாவாகத்தான் நடந்துள்ளது. தமிழைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்குத்தான் அங்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழுக்காக பாடுபட்டவர்கள் போராடியவர்கள் தியாகம் செய்தவர்களுக்கு விருது வழங்கப்படவில்லை.

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக இப்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்த்தாய் விருது வழங்கும் விழாவில் பேசிய ஜெயலலிதா, ""சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்று முன்பு ஏற்றுக்கொண்டிருந்தவர் தானே கருணாநிதி'' என்று கூறியுள்ளார். அதை நானும் ஆமோதிக்கிறேன். சூரியன் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைகிறது என்று முன்பு நம்பி வந்தோம். பின்னர் கலிலியோ, கோபர்நிக்கஸ் உள்பட பல விஞ்ஞானிகள், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று கூறிய பிறகு அதை நாம் மாற்றிக் கொள்ளவில்லையா, அதைப்போலத்தான் இதுவும்.

மறைமலையடிகள், பாரதிதாசன், மு.வரதராசன் போன்ற தமிழறிஞர்கள் ஆய்ந்து தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறிய பிறகு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இதில் தவறு ஒன்றுமில்லை.

விருது வழங்கும் விழாவில், தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் களஞ்சியம் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜெயலலிதா புரவலராக இருந்து வெளியிடப்பட்ட ஒன்றாகும். இதில் மழைக்கும், வேளாண் பெருக்கத்துக்கும் காரணமான சூரியனை வழிபடும் நாள், தை முதல் நாள் என்று கூறப்பட்டுள்ளது.

இதைப்போல தேவநேயப்பாவாணரால் தொகுக்கப்பட்ட சொற்பிறப்பியல் பேரகராதியில் தை என்பதற்கு, தமிழ் ஆண்டின் தொடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்குப் பல ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன.

தமிழ் அறிஞர்கள் எடுத்துச் சொன்ன உண்மையை ஏற்றுக் கொண்ட பிறகு தை முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து சட்டமாக்கினேன். ஆனால், இவர்கள் அதை ஒழித்துக் கட்டிவிட்டு விழா கொண்டாடுகிறார்கள். நாளை நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும், திராவிட உணர்வு கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போது தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi expressed the hope that the first day of Thai, one of the months of the Tamil almanac, would again become the Tamil New Year Day when a government of Tamil enthusiasts was voted to power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X