கர்நாடகத்தில் சோனியா முகாம்: சித்தகங்கா மட நிகழ்ச்சிகளை எதியூரப்பா ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
பெங்களூர்: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி 2 நாள் பயணமாக கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். ஆளும் பாரதிய ஜனதாவுக்குள் கடுமையான பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சோனியாவின் வருகையான காங்கிரஸ் கட்சியினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூருக்கு நேற்று இரவு வந்த சோனியாகாந்தி ராஜ்பவனில் தங்கியிருந்தார். பின்னர் இன்று காலை சித்தரதுர்கா மாவட்டம் நாகசமுத்திரத்தில் வறட்சியின் கோரத்தை அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் தும்கூர் மாவட்டத்தில் உள்ள லிங்காயத்து சமூகத்தினரின் போற்றுதலுக்குரிய சித்தகங்கா மடத்துக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிஜியின் 105-வது பிறநதநாள் விழா நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்கிறார். கர்நாடகத்தில் 17 விழுக்காடு உள்ள லிங்காயத்துகளுக்கு இந்த மடம் தான் உயரியது. கர்நாடக பாஜகவில் அதிருப்தியில் உள்ள எதியூரப்பாவும் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரே. 1990களில் வீரேந்திர பட்டீல் இருந்தவரை காங்கிரஸ் ஆதரவாளர்களாக லிங்காயத்துகள் இருந்து வந்தனர். அதன் பின்னரே பாஜக பக்கம் சாய்ந்தனர்.
கர்நாடக பாஜகவில் தற்போது எதியூரப்பாவுக்கு சதானந்தா கவுடாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடானது சாதிய ரீதியான பிளவை உருவாக்கி இருக்கிறது. சதானந்தாவின் கவுடா சமூகம் அவரது பின்னால் நிற்கிறது. லிங்காயத்துகள் எதியூரப்பாவின் பின்னால் நிற்கின்றனர்.
இந்நிலையில் லிங்காயத்துகள் வாக்குகளைக் கவரும் வகையில்தான் சோனியாவின் சித்தகங்கா மட வருகை பார்க்கப்படுகிறது. ஆனால் சோனியா காந்தி கணக்குப் போடுவது போல் நடக்காது என்கின்றனர் எதியூரப்பா ஆதரவாளர்கள். சித்தகங்கா மடாதிபதியின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக இருந்தாலும் அது காங்கிரஸின் மாநாட்டைப் போல் நடத்தப்படுவதால் தாங்கள் பங்கேற்கவில்லை என்று எதியூரப்பா ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் குழம்பிய குட்டையில் மீன்பிடித்துவிடலாம் என்ற நினைப்பில் பாஜகவின் உட்கட்சி குழப்பத்தை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதையே சோனியாவின் கர்நாடக மாநில பயணம் சுட்டிக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications