டெங்கு குறித்து அச்சம் வேண்டாம்... மக்களுக்கு ஜெ. வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: டெங்கு காய்ச்சல் பரவி வருவது குறித்து மக்களிடையே அச்சம் தேவையில்லை. அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில நாட்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெங்கு காய்ச்சலால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, டெங்கு காய்ச்சலை உடனடியாக முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முதன்மைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் காய்ச்சலுக்கு காரணமான வைரஸை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகக் குழுவினர், டெங்கு வைரஸ் வகை-1 மற்றும் டெங்கு வைரஸ் வகை-3 ஆகியவற்றால் இந்த காய்ச்சல் திடீரென ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்தனர். இதன் அடிப்படையில், எனது உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனது உத்தரவின் பேரில், 17.5.2012 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் திருநெல்வேலி சென்று இது குறித்து கடையநல்லூர், தென்காசி நகராட்சிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். இந்தக் காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அமைச்சர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ததுடன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

18.5.2012-லிருந்து ஒரு வட்டாரத்திற்கு இரண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம்கள் வீதம், 38 விழிப்புணர்வு முகாம்கள் நாள்தோறும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கூடுதலாக இரண்டு குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஒரு வட்டாரத்திற்கு ஒரு பூச்சியியல் வல்லுநரும், மூன்று வட்டாரங்களுக்கு ஒரு மூத்த பூச்சியியல் வல்லுநரும் நியமிக்கப்பட்டு கொசு தடுப்புப் பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைமை பூச்சியியல் வல்லுநர் தலைமையில், 25 பூச்சியியல் வல்லுநர்கள் இதற்கான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ அலுவலரும், ஒரு நகராட்சிக்கு ஒரு மருத்துவ அலுவலரும் நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரச்சாரத்திலும், நோய் கண்டறியும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு துணை இயக்குநர்கள் மற்றும் மூன்று சுகாதார அலுவலர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கென கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். நோய் தடுப்புப் பணிகளுக்கென்று 29 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பதையும், அதனைக் கட்டுப்படுத்துவதையும், நோய் தாக்கியவர்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ வசதிகள் அளிப்பதையும் கண்காணிப்பதற்காக எனது உத்தரவின் பேரில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளர், பொது சுகாதாரத் துறை இயக்குநர், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர், மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆகியோர் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு, தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையிலிருந்து இரண்டு நிபுணர்கள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் திருநெல்வேலியில் முகாமிட்டு அங்குள்ள மருத்துவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

16.5.2012-லிருந்து ஒரு வட்டாரத்திற்கு 70 தற்காலிக பணியாளர்கள் வீதம் தினக்கூலி அடிப்படையில், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் 1,330 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் கொசுப் புழு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் காரணமாக டெங்கு காய்ச்சல் அண்டை மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பரவுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1,466 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 817 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 423 பேர் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (23.5.2012) எனது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக புகை மருந்து அடிக்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்.

2. பொதுமக்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 50 வண்டிகள் மூலம் தெரு முனைப் பிரச்சாரமும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரங்களும் மேற்கொள்ளப்படும்.

3. திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவக்குழு மூலமாக காலையிலும், மாலையிலும் மருத்துவ முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

4. திருநெல்வேலி மற்றும் தென்காசி மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக தனி வார்டுகள் அமைக்கப்படும். இதற்காக சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் அனுப்பப்படுவர்.

5. திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் கடையநல்லூர் போன்ற டெங்கு காய்ச்சல் உள்ள இடங்களில் பொதுமக்கள் தண்ணீர் சேமித்து வைப்பதற்கான தேவையை குறைக்கும் வகையில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும்.

6. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவர்.

7. மற்ற மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாகக் கண்காணிக்கவும், டெங்கு காய்ச்சல் ஏற்படாத வண்ணம் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையையும் தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட மருத்துவ அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை ப்ளீச்சிங் பவுடர் அல்லது சாம்பல் கொண்டு நன்கு கழுவ வேண்டும் என்றும், எந்தக் காய்ச்சல் ஏற்பட்டாலும், உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அல்லது மருத்துவ முகாமிற்கோ சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+