For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியால் சித்ரவதையை அனுபவிக்கும் கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மனைவி துன்புறுத்துவதை காரணம் காட்டி விவாகரத்து பெறுவதற்கு கணவனுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகத்தின் மகள் ஹேமலதா. இவருக்கும், கே.ரமேஷ் என்பவருக்கும் 2000-ம் ஆண்டு சென்னை மகாலிங்கபுரம் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு வேளச்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்தனர். இருவரிடையே பிரச்சனை ஏற்பட ரமேஷை வரதட்சணை வழக்கில் சிறைக்கு அனுப்பினார் மனைவி ஹேமா. இதனால் விவகாரத்து கோரி ரமேஷ் தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் ரமேஷ் மீதான வரதட்சணை கொடுமை வழக்கையும் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து தாம் கோரியிருந்த விவகாரத்து மனுவை குடும்ப நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.

அதில், ஹேமலதா பிடிவாத குணம் கொண்டவர். தான் நினைப்பதை செய்து முடிக்கும் குணம் அவரிடம் உள்ளது. அவரது இந்த குணத்தால் என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. எனது குடும்பத்தாரை விட்டு பிரிய வேண்டும் என்றும், தனியாக வாழ வேண்டும் என்றும் என்னை வற்புறுத்தினார். இல்லாவிட்டால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா?' என்றெல்லாம் திட்டினார். இறுதியில் என் மீது போலீசில் பொய்ப்புகார் கொடுத்துவிட்டார். எனவே இனிமேலும் ஹேமலதாவுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எனவே எங்கள் திருமணத்தை செல்லாது என்று அறிவித்துவிட்டு, குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு ஹேமலதா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், என்னை ரமேஷ் அடித்து துன்புறுத்தினார். இதற்காக 2 முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறேன். அவரைவிட்டு நான் பிரிந்து செல்லவில்லை. அரசியல் செல்வாக்கை குடும்பத்தில் பயன்படுத்தினேன் என்று என்னைப் பற்றி அவர் சொல்வதில் உண்மை இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர்.

"மனைவி கொடுமை செய்ததாக கூறிய குற்றச்சாட்டை ரமேஷ் நிரூபிக்கவில்லை என்று கூறி அவரது மனுவை குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் எங்கள் முன்பு வைக்கப்படும் கேள்விகள் இரண்டுதான். மனைவி கொடுமை செய்தார் என்ற காரணத்தைக் காட்டி அவரிடம் இருந்து விவாகரத்து பெற கணவருக்கு உரிமை உள்ளதா? அதே சூழ்நிலையில், மனைவி தனது கணவனுடன் இணைந்து வாழ்வதை ஏற்க முடியுமா? என்பவைதான். கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதாக ஹேமலதா கூறுகிறார். ஆனால் குடும்பநல நீதிமன்றத்தில் அவர் விவாகரத்து கேட்கவில்லை. தன்னை மனைவி கொடுமைப்படுத்துவதாகக் கூறி கணவன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்து 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான், கணவனுடன் சேர்ந்து வாழும் உரிமையைக் கேட்டு ஹேமலதா மனு தாக்கல் செய்திருக்கிறார். கணவன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீசில் ஹேமலதா புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவர் ஜாமீன் பெறுவதையும் ஹேமலதா எதிர்த்து இருக்கிறார். மனைவியின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது, ரமேஷ்தான் மனைவியிடம் இருந்து கொடுமைகளை அனுபவித்திருப்பது தெரிகிறது. கணவன் மீது கூறிய கிரிமினல் குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை.

இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு, கணவனுடன் சேர்ந்து வாழும் உரிமையை கேட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? அன்பெல்லாம் அகன்ற பிறகு, 2 பேரும் எப்படி சேர்ந்து வாழ முடியும்? எனவே சேர்ந்து வாழும் உரிமையை இங்கு அவர் கோர முடியாது. அதுதொடர்பான ஹேமலதாவின் மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது தவறு. அதோடு மனைவியிடம் இருந்து கொடுமைகளை அனுபவித்த கணவன் ரமேஷ், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு உரிமை உள்ளது. இதனடிப்படையில் 2 பேரின் திருமணம் செல்லாது என்று அறிவிக்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

English summary
Distress and social humiliation heaped on a husband by his wife by filing a false complaint and getting him arrested would amount to cruelty, which is a valid ground for divorce, the Madras high court has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X