For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில்,

கேள்வி: சிறுவாணி ஆற்றுக்கு குறுக்கே கேரள அரசு அணைக்கட்டு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறதே?

பதில்: தொடர்ந்து கேரள அரசு தமிழ்நாட்டு நதி நீர் பிரச்சனைகளில் மிக மோசமான முறையில் விஷமத்தனமாக நடந்து கொள்கிறது. இதை எவ்வளவு நாளைக்கு நீடிக்க அனுமதிக்க முடியும்? மத்திய அரசு இதில் தலையிட்டு நல்ல முடிவு காண வேண்டும்.

கேள்வி: பா.ஜ.க. சார்பில் சங்மாவை குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துகிறார்கள். இதனால் உங்கள் அணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்: நன்றாக உள்ளது.

கேள்வி: தமிழக மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் கடத்தியிருக்கிறார்களே?

பதில்: இது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. ஆட்சி இப்போது நடைபெற்றிருந்தால், இதை கண்டித்து யார்-யார் கூச்சல் போட்டிருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும்.

கேள்வி: சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மீது ஏராளமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. தி.மு.க. சென்னை மாநகராட்சியை ஆண்டுபோதும் கவுன்சிலர்கள் மோசமாக நடந்து கொண்டதாக ஜெயலலிதா கூறினார். தற்போது சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது?

பதில்: பொதுவாக நகராட்சி மன்றங்களில், மாநகராட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், கவுன்சிலர்கள் தவறாக நடந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக் காலத்திலே கூட சென்னை மாநகராட்சியில் அப்படி நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற தவறுகளுக்காக விசாரணைக் கமிஷனே வைத்து பலர் நீக்கப்பட்டார்கள், கட்சி வேறுபாடின்றி பலர் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் இந்த ஆட்சியில் தவறுகளை எல்லாம் ஊக்கப்படுத்தப்படுவதைப் போல தெரிகிறது. நேற்றைய தினம் அவர்களையெல்லாம் முதல்வர் கண்டித்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அது கண் துடைப்பா? உள்ளபடியே கண்டனமா? என்று தெரியவில்லை.

கேள்வி: இலங்கை அமைச்சரின் முள்ளிவாய்க்கால் பேச்சை கண்டித்து பிரதமருக்கு நேற்று நீங்கள் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். அதற்காக தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளதா?

பதில்: நாங்கள் இப்போது தான் "டெசோ'' ஆரம்பித்திருக்கிறோம். அதன் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது. டெசோ மாநாட்டில் இதைப்பற்றிய கருத்துக்கள் எல்லாம் பேசப்படும்.

கேள்வி: டெசோ மாநாட்டிற்கு வெளிநாட்டு தமிழர்கள் அழைக்கப்படுவார்களா?

பதில்: முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு அலட்சியம்:

இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: இந்திய அரசையே இலங்கை அலட்சியப்படுத்துவதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: இலங்கை மின்துறை அமைச்சர் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதைப்பற்றி நான் நேற்றையதினம் பிரதமருக்கு விளக்கமாக கடிதம் எழுதியிருந்தேன். அதைத்தொடர்ந்து இன்றைய தினம் வெளிவந்துள்ள கருத்து மேலும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. அதில், "சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப்படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகி வருகிறது. அத்துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது. இலங்கையின் எந்தவொரு வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும், அது சீனாவுக்கே தரப்படுகிறது.

தமிழர்களுடைய வீடுகளையும், நிலங்களையும் ராணுவம் தன்வசம் எடுத்துக்கொள்வது வேகமாகவும் அதிக அளவிலும் நடக்கிறது. பற்றி எரியும் பிரச்சனையாக இது உருவெடுத்து வருகிறது. இந்திய அரசு இனியும் இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டு வருகிறது என்று விரிவாக கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு, இந்திய அரசு இதற்குப் பிறகும் அலட்சியமாக இல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அதிக அளவிற்கு அக்கறை காட்டிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

கேள்வி: அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே இருந்த வயது சலுகை இந்த ஆட்சியிலே வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்களே?

பதில்: இதைப்பற்றி உயர் நீதிமன்றத்திலேயே அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தொடுத்த வழக்கில், அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இவர்கள் யார்? நமக்கு உத்தரவிட என்று நினைக்காமல், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகாவது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முன்வரும் என்று நம்புகிறேன்.

கேள்வி: அ.தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை நடக்கவில்லை என்று முதல்வரே சொன்ன பிறகும், நடப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டுதானே உள்ளது?

பதில்: 20.6.2012 தேதிய ஒரு பத்திரிகையில், மணல் கொள்ளை பற்றி விரிவாகச் செய்தி வந்துள்ளது. அ.தி.மு.கவினர் பரிபூரண ஒத்துழைப்புடன் நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் மணல் கடத்தல் தொழில் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. அங்குள்ள போலகம் கிராமத்தில் திருமலைராசன் ஆற்றுப்படுகையில் அ.தி.மு.க. கொடியுடன் லாரிகளில் மணல் கடத்தல் நடக்கிறது. வனத்துறை தேக்கு மரங்களை அழித்து சாலை அமைத்து மணல் கடத்தும் அ.தி.மு.கவினர் என்றெல்லாம் செய்தி வெளியிட்டுள்ளது.

கேள்வி: 560 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்ததாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: இந்த 560 புதிய பஸ்கள் கடந்த ஆண்டு வாங்கப்படும் என்று அறிவித்து, வாங்கப்படாமல் இருந்த பேருந்துகளா? அல்லது இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் புதிதாக வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததே அந்தப் பேருந்துகளா?

கேரளத்தினர் முயற்சி:

கேள்வி: தி.மு.க. ஆட்சியில் அரும் பாடுபட்டு, நீங்கள் பெருமுயற்சி எடுத்துக் கிடைத்த சேலம் ரயில்வே கோட்டத்தை மீண்டும் கேரளாவுடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக செய்தி வந்து கொண்டிருக்கிறதே?

பதில்: திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு புதிய மண்டலம் உருவாக்க மூன்று கோட்டங்கள் தேவை. தற்போது திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய இரண்டு கோட்டங்களே உள்ளதால், சேலம் கோட்டத்தையும் அத்துடன் இணைத்து புதிய மண்டலம் ஒன்றை அங்கே உருவாக்குவதற்கான முயற்சியில் கேரளாவில் உள்ளவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். மத்திய அரசு கேரளாவின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்துவிடக்கூடாது. மேலும் சேலம் ரயில்வே கோட்டத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளையெல்லாம் மத்திய அரசு விரைவில் செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
Describing Finance Minister Pranab Mukherjee as the "most suitable" presidential candidate for his track-record and multi-dimensional personality, DMK chief M Karunanidhi said his victory was a "foregone conclusion."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X